திருச்சி, அக் 11-
திருச்சியில் இருந்து சார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால், விமானம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து வருகிறது.
திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால்,ஹைட்ராலிக் கோளாறு காரணமாக, சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. உடனடியாக சுதாரித்த விமானி டேனியல் பெலிசோ, சார்ஜா செல்லாமல் திருச்சியிலேயே விமானத்தை, தரையிறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எரிபொருள் தீர்ந்த உடன் எரிபொருள் தீர்ந்த பிறகு, தரையிறக்க முடியும் சூழல் ஏற்பட்டது.
இதனால், எரிபொருள் தீர்வதற்காக, 5:40 மணி முதல் நடுவானிலேயே 4,255 அடி உயரத்தில், புதுக்கோட்டை- திருச்சி மாவட்ட எல்லைகளில் விமானம் வட்டமடித்தது. அன்னவாசல் பகுதியில் மட்டும் 16 முறைக்கும் மேலாக சுற்றிய விமானம், பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பகுதிகளையும் வட்டமடித்தது.
பயணிகள் பாதுகாப்பு கருதி, 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருக்கும் 4 ஆம்புலன்சுகளும் அங்கு வந்தன. போலீசார் குவிக்கப்பட்டனர். விமான ஓடுபாதையில், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்கின்றன.
இது குறித்து முன்னாள் விமானிகள் சிலர் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் அரிதாகவே நடக்கும். எரிபொருளை காலி செய்து எடையை குறைக்க விமானம் நடுவானில் வட்டமடித்து கொண்டிருக்கும். மூன்று சக்கரங்களும் செயல்படாமல் இருந்தாலும் தரையிறக்க வழி உள்ளது. எரிபொருள் முழுவதுடன் தரையிறக்கினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.
இந்த தகவல் பரவியதும், விமானத்தின் தற்போதைய நிலை பற்றி அறிய உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேர், பிளைட்டிராக்கிங் இணையதளங்களில் பரிதவிப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.
0 Comments