டாக்கா, ஆகஸ்ட் 5-
டாக்காவில் மாணவர்கள் மற்றும் ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதலில், 14 போலீசார் உட்பட 92 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து, சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 'பாகுபாடுக்கு எதிரான மாணவர் இயக்கம்' என்ற பெயரில், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். பேலீஸ் மற்றும் ராணுவம் போராட்டங்களை தடுக்க முயற்சி செய்து வருகின்றன.
இதனிடையே டாக்கா உட்பட நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நேற்று மிகத் தீவிரமானது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி, போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
இதை எதிர்த்து, ஆளுங் கட்சியின் மாணவர் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. இரு கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகள், சொத்துகளுக்கு தீ வைப்பது, கல்வீசி தாக்குவது என, வன்முறை சம்பவங்கள் நடந்தன.
மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் மற்றும் ராணுவமும் களமிறங்கியது. இதனால் நேற்று ஒரு நாளில், 14 போலீசார் உட்பட, 92 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments