loader
*சித்திரையில் உருமாற்றத்தின் சக்தியாக உயர்வோம்!* - டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வாழ்த்து

*சித்திரையில் உருமாற்றத்தின் சக்தியாக உயர்வோம்!* - டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்.14- 

இந்தியச் சமுதாயத்தில் உருமாற்றம் நிகழ வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கின்ற நாம், அதனை மெய்ப்படுத்தும் வண்ணம் உருமாற்றத்தின் உந்துச் சக்தியாக வலிமை கொண்டு செயல்பட வேண்டும் என தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தனி மனிதனின் மாற்றம், ஒரு தலைமுறையின் மாற்றம் என்பதை தலைமுறை தாண்டி கண்டுணர்ந்துள்ள நாம், மற்ற சமூகத்தினருக்கு ஈடாக நம் சமூகத்தினரும் பொருளாதார பலம் பொருந்தியவர்களாக உயர்வதற்கு, தற்கால இளைஞர்கள் உருமாற்றத்தின் பலம் பொருந்திய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கருத்துரைத்தார்.

மற்ற சமூகத்தினர் எப்படி உயர்ந்தார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்களின் முன்னேற்றப் பாதையை பின் தொடர்ந்து, நாமும் அனைத்து துறைகளிலும் பீடு நடை போடுவதற்கான நன்முயற்சியில் இறங்க வேண்டும். 

அம்முயற்சிக்குக் கூடுதல் ஆதரவு சேர்க்கும் வண்ணம் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் உள்ள குறிப்பிட்ட சில ஏஜென்சிகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

அவ்வகையில், இந்திய தொழில்முனைவோருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 30 மில்லியன் ரிங்கிட் தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவியை 60 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கியது, இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் வழி இன்னொரு 50 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்ததானது நம் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த முன்னெடுப்புகள் என்று அவர் குறிப்பிட்டார்.

வரலாற்றில் முதல் முறையாக தெக்குன் மற்றும் ஏ.ஐ.எம். நிதியகங்களின் உள்நிதியைக் கொண்டு அதிகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடுகளை பயன்படுத்தி, நம் இந்திய தொழில்முனைவோர்கள் தத்தம் வியாபாரங்களை அடுத்தக்கட்ட உயர் நிலைக்கு மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் மாபெரும் சக்தி படைத்தவர்களாக உயர்வு காண வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகள் பெரிதாகத் தெரியலாம். பெரிதினும் பெரிது கேள் என பாரதி புதுமையை விரும்பினார். நமது எண்ணங்களை உயர்வாக வைத்திருக்கும் போது, அந்த பிரபஞ்சமும் நமக்கு வழி கொடுக்கும் என்பதில் முழு நம்பிக்கை வைத்து செயல்பட்டால், நம் சமூகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் விடியல் வெகுதூரமில்லை! 

பிறந்திருக்கும் குரோதி வருட சித்திரைப் புத்தாண்டு நம் எண்ணங்களுக்கு வலிமை சேர்த்து, உருமாற்றத்திற்கு வழிகோலட்டும் என குறிப்பிட்ட டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகின்ற அனைத்து இந்து மக்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News