loader
விவசாயத் துறையில் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம்!  உள்நாட்டு விவசாயிகள் பாதிப்பு!

விவசாயத் துறையில் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம்! உள்நாட்டு விவசாயிகள் பாதிப்பு!


ஜொகூர் பாரு, மார்ச் 17-
விவசாயத் துறையில் அதிலும் குறிப்பாக காய்கறி பயிரிடுதல் மற்றும் விற்பனை துறையில் அதிகமான வெளிநாட்டவர்கள் ஈடுபட்டு வருவதால் சுமார் 2,000 உள்நாட்டு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

காய்கறி பயிரிடுவது முதல் அதனை சந்தைப்படுத்துவது, விற்பனை செய்வது வரை அனைத்து பிரிவுகளிலும் அந்நிய நாட்டவர்கள் ஈடுபட தொடங்கி விட்டனர். சட்டத்திற்கு புறம்பான தோட்டங்களில் அவர்கள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். சுமார் 1,000 ஹேக்கரில் அவர்கள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சுமார் 5 ஆண்டுகளாக காய்கறி விவசாயத் துறையில் அந்நிய நாட்டவர்கள் அதிகமாக ஈடுபட தொடங்கினர். நாடு முழுவதிலுள்ள தங்களின் உறுப்பினர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த தகவலை திரட்டியதாக மலேசிய காய்கறி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் லிம் செர் குவி தெரிவித்தார்.

இந்தோனேசியர்கள், வங்காளதேசிகள், ரொஹிங்யா பிரஜைகள் ஆகியோர் இந்த காய்கறி உற்பத்தி முதல் விற்பனை வரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் நாட்டிலுள்ள பெரிய காய்கறி விற்பனை சந்தைகளிலும் அவர்கள் காய்கறிகளை சுயமாக விற்பனை செய்ய தொடங்கி விட்டனர்.

அதிகமாக காய்கறிகளை இவர்கள் பயிரிடுவதால் உள்நாட்டு விவசாயிகள் அதிகமாக பதிக்கப்படுகின்றனர். காய்கறிகளை பயிரிடுவதில் தொடங்கி தற்போது அதனை சந்தைப்படுத்துதல், காய்கறிகளை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து சேவை, நாடு முழுவதிலுள்ள பாசார் போரோங், சந்தைகளுக்கு காய்கறிகளை அனுப்பும் அனைத்து பிரிவுகளிலும் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் கூடிவிட்டது.

அந்நிய நாட்டவர்கள் தீபகற்ப மலேசியாவில் அதிகமாக காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா, பினாங்கு, பகாங், அதிலும் கேமரன் மலையில் அவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது.

இவர்களின் தோட்டங்கள் அதிகமாக உட்புற பகுதிகளில் உள்ளன. சாதாரண மக்கள் உட்பட விவசாயத்துறை அதிகாரிகளும் கண்டுபிடிக்க அளவிற்கு உட்புற பகுதியில் உள்ளன. ஆகையால் இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென லிம் செர் குவி வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News