loader
கோலாகலமாக இவ்வாண்டு மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர விழா கொண்டாடப்படும்!

கோலாகலமாக இவ்வாண்டு மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர விழா கொண்டாடப்படும்!

கோலாலம்பூர், மார்ச்.14-

பங்குனி உத்திர விழாவிற்கு பிரசித்திப்பெற்ற மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆவது பங்குனி உத்திர விழா இவ்வாண்டு மிக கோலாகலமாக நடைபெறும் என ஆலய தலைவர் டத்தோ க. தமிழ்செல்வம் கூறினார்.

இவ்வாண்டு பங்குனி உத்திர விழாவில் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விழா பெரிய அளவில் நடத்தப்படவில்லை.

குறிப்பாக கடந்தாண்டு ஆலயத்தில் திருப்பணிகள் நடந்தது. ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தற்போது 93ஆவது பங்குனி உத்திர விழா  ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. அவ்வகையில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

இதன் உச்சக்கட்டமாக வரும் மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பால்குடம் ஏந்தியும் காவடிகள் ஏந்தியும் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகம் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்படுவார்கள்.

இதைத் தவிர்த்து இந்த விழாவை முன்னிட்டு ஆலய சுற்றுவட்டாரத்தில் தற்காலிக கடைகளும் அமைக்கப்படவுள்ளது.

இவ்வாண்டு 12 குழுக்களாக 1,500 பேர் பத்துமலையில் இருந்து பாத யாத்திரையாக மாரானுக்கு வரவுள்ளனர். அப்படி வருபவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீ கங்கை இசைக் குழுவின் குமார் தலைமையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதைத் தவிர்த்து இந்த விழாவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இந்த விழாவில் கலந்து மாரான் மரத்தாண்டவரின் அருளை பெற்று செல்லுமாறு டத்தோ தமிழ்ச்செல்வம் கேட்டு கொண்டார்.

பங்குனி உத்திர விழா குறித்து மேல் தகவல் பெறுவதற்கு பக்தர்கள் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொண்டோ அல்லது அதன் முகநூல் வாயிலாக விவரம் பெறலாம்.

0 Comments

leave a reply

Recent News