loader
1.1 பில்லியன் ரிங்கிட் தெக்குன் கடன் திரும்ப செலுத்தப்படவில்லை - டத்தோ ரமணன்

1.1 பில்லியன் ரிங்கிட் தெக்குன் கடன் திரும்ப செலுத்தப்படவில்லை - டத்தோ ரமணன்

சுங்கைபூலோ,மார்ச்.2-

தெக்குனில் கடனுதவிப் பெற்ற137,520 தொழில்முனைவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதனை திருப்பி செலுத்தாத நிலையில் அதன் மதிப்பு 1.1 பில்லியன் ரிங்கிட் இருப்பதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார்.

குறிப்பாக இதில் சிலாங்கூரில் ஆக அதிகமாக 22,662  பேரும் சபா 16,945 மற்றும் கெடாவில் 14,823 பேரும் இந்தக் கடனை திரும்ப செலுத்தவில்லை என இன்று  சிலாங்கூர் மாநில மடானி தெக்குன் பெருவிழாவை தொடக்கி வைத்து பேசியபோது இவ்விவரங்களை தெரிவித்தார்.

இந்தக் கடனுதவியைப் பெற்ற தொழில்முனைவோர் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அந்தத் தொகையை மீண்டும் செலுத்திவிட வேண்டும்.

காரணம் இதன் மூலம்தான் வியாபாரம் செய்வதற்கான முதலீடு தேவைப்படும் மற்ற தொழில்முனைவோருக்கும் உதவ முடியும் என்று கூறினார்.

மேலும் சிலாங்கூர் மாநில தொழில் முனைவோரின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு இவ்வாண்டு தெக்குன் 65 மில்லியன் ரிங்கிட் நிதியை வழங்க முனைந்துள்ளது.  

இந்த நிதியானது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 4 ஆயிரம் அதிகாரப்பூர்வமற்ற, மைக்ரோ தொழில்முனைவோருக்குக் கடனுதவியாக வழங்கப்படவுள்ளது.

அதே சமயம் இவ்வாண்டு ஜனவரி மாதம் மட்டும்  சிலாங்கூர் மாநிலத்தைச்  சேர்ந்த 225 தெக்குன் தொழில்முனைவோருக்கு 7.35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News