loader
சி.எம் ஆசை எனக்கில்லை! மக்களிடம் எழுச்சி இருந்தால் அரசியலுக்கு வருவேன்! - ரஜினி கருத்து

சி.எம் ஆசை எனக்கில்லை! மக்களிடம் எழுச்சி இருந்தால் அரசியலுக்கு வருவேன்! - ரஜினி கருத்து

சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினி இன்று பேசினார்.

மக்கள் மாற்று அரசியலை விரும்புவதால் நம்பிக்கையுடன் இருந்தேன். 7 கோடி மக்களுடைய வாழ்க்கைக்கான திட்டத்தை நான் சிலரிடம் சொன்னால் எப்படியோ வெளியே வந்துவிடுகிறது. இப்போது எல்லாம் சுவருக்கெல்லாம் காது இருக்கிறது. அதனால் எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, காலம், தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, சில எம்பி.,க்கள், அரசியல் விமர்சகர்கள், ஐஏஎஸ்.,கள், நீதிபதிகளிடம் பேசினேன். அவர்கள், பதவிக்காக தானே வருவார்கள் எனக்கூறினர்.

பதவிக்காக அரசியலுக்கு வருபவர்கள் வேண்டவே வேண்டாம். பொதுச் சேவை செய்பவர்கள் மட்டும் வந்தால் போதும். அதேபோல், 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாய்ப்பு என சொல்கிறீர்களே, மன்றத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்களே என்றனர். நாட்டில் நல்லது நடக்கும் எனில் பதவியை விடத்தான் வேண்டும். நான் முதல்வர் இல்லை என்பதை யாரும் ஏற்கவில்லை. சில இளைஞர்கள் மட்டுமே ஏற்றனர். இதனால், அரசியல் வருவது பற்றி அறிவித்துவிட்டோமே, இப்படி சொல்கிறார்களே, என தூக்கி வாரிப்போட்டது. இதுபற்றி விவாதிக்க மன்றச் செயலர்களைக் கூப்பிட்டு பேசலாம் என அழைத்தேன்.

அவர்களிடம் கட்சியில் பதவி இல்லை என முதலில் சொல்லவில்லை. ஏனெனில், முதலில் அதைச் சொன்னால் அடுத்தடுத்த திட்டங்களை சொல்லும்போது கோபம் அதிகமாகும் என நினைத்தேன். உதாரணமாக, 370 பிரிவு ரத்து, முத்தலாக், ராமர் கோயில், சிஏஏ என மத்திய அரசு சொன்னதும், சிறுபான்மையினர்களுக்கு மொத்தமாக கோபம் அதிகமானது. அதுபோல, நான் முதல்வர் இல்லை என்பதை மன்றத்தாரிடம் முதலில் கூறவில்லை. நான் ரசிகனாக இருந்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

நான் சொன்ன திட்டங்களை, இதுதான் இவர்களின் கொள்கை; இதை கட்சி ஆரம்பித்த பிறகு சொல்ல வேண்டும் என பலர் கூறுவர். இது இவர்களின் வியூகமா எனவும் கேட்பர். ஆமாம், இது உண்மை, வெளிப்படைத்தன்மை. இந்த கொள்கைகளை சொன்னதும் யாரும் ஏற்கவில்லை. நான் முதல்வர் ஆக விரும்பவில்லை என 2017-ஆம் ஆண்டே கூறிவிட்டேன். எனக்கு முதல்வர் ஆசை எப்போதும் இருந்ததே இல்லை. டில்லிக்கு சென்று கட்சியை ஆரம்பித்து, லட்சக்கணக்காக மக்களை கூட்டி, பெரிய மாநாடு நடத்தி கட்சி ஆரம்பித்தால், தேர்தலில் நின்றுதான் ஆக வேண்டும்.

நாம் எதிர்க்கப்போவது இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை. இருவரும் அசுர பலத்துடன் உள்ளனர். ஒரு பக்கம், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கட்சி. அக்கட்சியின் பெரிய தலைவர் இல்லாததால், அவரின் வாரிசு (ஸ்டாலின்) என்பதை நிரூபிக்க வாழ்வா சாவா எனத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. அவர்களிடம் பண பலம், ஆள் கட்டமைப்பு இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மறுபுறம், கையில் ஆட்சியுடன், குபேரனின் கஜானாவை கையில் வைத்து கொண்டு அவர்கள் காத்திருக்கின்றனர்.
இதற்கு நடுவில், சினிமாபுகழ், ரசிகர்களை வைத்து கொண்டு நாம் தேர்தலைச் சந்திக்க வேண்டும். என்னை நம்பி வருபவர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். திமுக.,வுக்கு ஓட்டளித்தவர்களில், 30 சதவீதம் பேர் திமுக.,விற்காகவும், 70 சதவீதம் கருணாநிதிக்காகவும் ஓட்டுப்போட்டனர். அதிமுக.,விலும் இப்படித்தான் உள்ளது. 54 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆட்சிகளை அகற்றிட இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது பற்றி இளைஞர்கள், மக்கள் மத்தியில் எழுச்சி எழ வேண்டும். அப்படி எழுச்சி ஏற்பட்டால், அதன் முன்னால் இந்த அசுர பலம், பணபலம், ஆள் பலம் எல்லாம் தூள் தூளாகிவிடும். அதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த அலை உண்டாக வேண்டும்.

இந்த தமிழ் மண், புரட்சிகளுக்கு பேர்பெற்ற மண். காந்தி இந்த மண்ணில்தான் ஆடையைய் துறந்தார். விவேகானந்தர் இந்த மண்ணில் வந்து தான், 100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுகிறேன் என கர்ஜித்தார். 1960-களில் எல்லா மாநிலங்களில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, தமிழகத்தில் மட்டும் தான் மாநில கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்படியான புரட்சியை 2021-ல் மக்கள் செய்து காட்ட வேண்டும். அவர்கள், அவர்களின் சந்ததிகள் நல்லாயிருக்க அதைச் செய்ய வேண்டும்.
அதிசயம், அற்புதம் நடக்கும், மக்கள் அதை நிகழ்த்துவார்கள் . அதற்குப் பத்திரிகையாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். படித்தவர்கள், பாமர மக்களிடம் எடுத்து சொல்லவேண்டும். 50 சதவீத பெண்களில் 20 சதவீதம் பேருக்குத்தான் சுயமாக ஓட்டுப்போடத் தெரியும். மற்றவர்களுக்கு யாருக்கு போட வேண்டும் என்ற தெளிவு இல்லை. அவர்களின் மனதை மாற்றுங்கள். ரஜினிக்காக இல்லை, தமிழகத்திற்காக, தமிழ் மக்களுக்காக; அறிவு ஜூவிகள் இதைச் செய்ய வேண்டும். நான் ஒரு துரும்புதான். இது நடக்கவில்லை எனில் 15, 20 சதவீதம் ஓட்டைல் பிரிக்க நான் அரசியலுக்க வரவேண்டுமா?
எனக்கு 71 வயது, உடலில் பிரச்னைகள் இருக்கு. வருங்கால முதல்வர் என்பதை நிறுத்திவிட்டு, மூளை முடுக்கில் உள்ள மக்களிடம் நான் அரசியலுக்கு வருவது பற்றி சொல்லுங்கள். அப்போது மக்களின் எழுச்சி எனக்குத் தெரியட்டும், அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன். கட்சி மற்றும் ஆட்சிக்கு வெவ்வேறு தலைமை, இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் போன்ற புரட்சி இந்தியா முழுவதும் நடக்க வேண்டும். இது உங்கள் கையில் தான் இருக்கிறது. மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் பேசினார்!

0 Comments

leave a reply

Recent News