loader
இலங்கை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை உயர்வு!

இலங்கை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்திருக்கிறது. 500 பேர் வரை காயங்களுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல், இலங்கையை நிலைகுலையச் செய்திருக்கிறது. தாக்குதலில் பெரும்பாலானாவை தற்கொலைப்படைத் தாக்குதலே என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு சர்வதேச நாடுகள் பலவும் தங்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றன.
மேலும், பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில், அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 6 மணியுடன் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை போலீஸார் 24 பேரை இதுவரை கைதுசெய்திருக்கிறார்கள். அவர்கள், குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.
தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்தவர்கள், 3 மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்களில், கொழும்பு நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த வெளிநாட்டினர் 11 பேர் இறந்ததாக, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது. அதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேரும், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த ஒருவரும், துருக்கியைச் சேர்ந்த இருவரும், மேலும் இருவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 9 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கொழும்பு பண்டாரநாயக்கே விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டைக் கண்டுபிடித்த இலங்கை போலீஸார், அதை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்திருக்கிறார்கள். தாக்குதல் நடைபெற்றபோது, வெளிநாட்டில் இருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, நாடு திரும்பியிருக்கிறார்
தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இதுவரை 24 பேரைக் கைதுசெய்துள்ள இலங்கைக் காவல் துறை, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்துகிறது. இலங்கை மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலானாய்வுக் குழுவை இலங்கை அமைக்க இருக்கிறது.
இலங்கைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் டவரின் விளக்குகள் நேற்று நள்ளிரவில் அணைக்கப்பட்டன!

0 Comments

leave a reply

Recent News