loader
228 பேர் பலி... 450-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.... இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு!

228 பேர் பலி... 450-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.... இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு!

இலங்கையில் காலை முதல் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 207 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 450 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் 27 பேர் வெளிநாட்டினர் என்றும் மேலும் 5 பேரைக் காணவில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

இயேசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாட இலங்கையின் கொழும்பு நகர தேவாலயங்களில் கூடியிருந்தவர்களுக்கு இன்று அதிர்ச்சியே பரிசாகக் கிடைத்திருக்கிறது. கொழும்பு நகரின் 3 தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஹோட்டல்கள் என 6 இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. கொச்சிக்காடே, செயிண்ட் செபாஸ்டியன் மற்றும் பாட்டிகோலா தேவாலாயங்களில் திருப்பலிக்காக மக்கள் கூடியிருந்த வேளையில் இந்த வெடிகுண்டுகள் வெடித்தன. 

அதேபோல், வெளிநாட்டினர் நடமாட்டம் மிகுந்த ஷங்கரி லா, சின்னாமன் க்ராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. அடுத்த சில மணி நேரங்களில் கொழும்புவின் புறநகர்ப்பகுதிகளான ஒருகோடவாட்டா மற்றும் டெஹிவாலா ஆகிய பகுதிகளிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இவற்றில் இரண்டு தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். சின்னாமன் கிராண்ட் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கூறுகையில், மக்கள் அதிகம் கூடியிருந்த ஹோட்டலின் ரெஸ்டாரெண்ட் பகுதியில் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்த ஒருவர், அதை வெடிக்கச் செய்ததாக அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல், உலக நாடுகளின் தலைவர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்தக் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு எச்சரித்திருக்கிறது. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply