loader
குடியிருப்பாளர்கள் அண்டை அயலாரை அறிந்திருக்க வேண்டும்!  - ஒற்றுமைத் துறை அதிகாரி அஸ்னிடா

குடியிருப்பாளர்கள் அண்டை அயலாரை அறிந்திருக்க வேண்டும்! - ஒற்றுமைத் துறை அதிகாரி அஸ்னிடா

பத்துமலை டிச. 07:

குடியிருப்புவாசிகள் தங்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அண்டை, அயலாரை அறிந்திருப்பதுடன், நட்பு பாராட்டுவது பல வகையிலும் நன்மை அளிக்கும் என்று கோம்பாக் மாவட்ட ஒற்றுமை உதவி அதிகாரி அஸ்னிடா பிந்தி யோப் மாட் ஜாசிட், தாமான் ஸ்ரீ கோம்பாக் வட்டார மக்களைக் கேட்டுக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமை டிசம்பர் 6-ஆம் நாள் தாமான் ஸ்ரீகோம்பாக் 10-வது பிரிவு ருக்குன் தெத்தாங்கா நிர்வாகக் குழுவின் 2020-21 பொறுப்பாளர் தேர்வை நடத்தி வைத்த அஸ்னிடா, பொதுமக்களிடையே உரை நிகழ்த்தியபோது குடியிருப்பாளர்களிடையே அறிமுகமும் ஒருங்கிணைப்பும் இல்லாததுதான் பலவித சமூகக் குற்றங்களுக்கு இடம் அளிக்கிறது என்றார்.

இனம், மொழி, சமய வேறுபாடுகள் இல்லாமல் மலேசிய மக்கள் ஒற்றுமையை நிலைநாட்டி வருவது பாராட்டத்தக்கது என்றாலும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் நேச உணர்வை வளர்க்க வேண்டும். திருட்டு போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க இது உதவும். அதேவேளை, ஒருவருக்கு ஒருவர் அவசர வேளைகளில் உதவிக் கொள்ளவும் இது துணையாக இருக்கும் என்றார்.

தாமான் ஸ்ரீ கோம்பாக், 10-வது பிரிவின் ருக்குன் தெத்தாங்கா தலைவராக அஸ்மான் தொடரும் வேளையில், புதிய செயலாளராக திருமதி ஸாராவும், புதிய பொருளாளராக காடிரும் தேர்வு பெற்றனர்.

26 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் ஆரோக்கிய தாஸ், கணேசன், வேலாயுதம், கார்த்திகேயன், விசுவநாதன் உட்பட ஆறு தமிழர்களும், ஆ ஹோ என்ற சீனரும் அடுத்த ஈராண்டு தவணைக்கான நிர்வாகக் குழுவிற்குத் தேர்வு பெற்றனர்!

0 Comments

leave a reply