loader
தகவல் தொழில்நுட்பம் அவசியம்!

தகவல் தொழில்நுட்பம் அவசியம்!

(காளிதாஸ் சுப்ரமணியம்)

சென்னை, நவ.15-

மலேசிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை உலக அளவில் விரிவு படுத்துவதற்கு ஐ.டி எனும் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றி வருவதாக குளோசப் நிறுவன இயக்குநர் ஜீவன் முத்துப்பிள்ளை கூறினார்.

உலக நாடுகள் தகவல் தொழில்நுட்ப முறையில் பயணித்து கொண்டிருக்கிறது. எல்லாம் கணினிமயமாகி விட்டது. நாம் உலகத் தொடர்பை உள்ளங்கைக்கு கொண்டு வந்து விட்டோம். அந்த வகையில் நாம் நமது வர்த்தகத்தை உலகளவில் மேற்கொள்வதற்கு தகவல் தொழில்நுட்ப முறை முக்கியப் பங்காற்றி வருவதாக சென்னையில் தி ரைஸ் மாநாட்டில் கலந்து கொண்ட போது மலேசிய செய்தியாளர்களிடம் ஜீவன் அவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் ஒருவரின் வர்த்தகத்தை உலக அரங்கிற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறோம். அந்த வகையில் மலேசியாவில் பல நிறுவனங்களின் வர்த்தகத்தை உலக அரங்கில் பிரபலப்படுத்தியுள்ளதாக ஜீவன் சொன்னார்.

எங்கள் குளோசப் நிறுவனம் அரசாங்கத்திற்கும் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து வருகிறது. நான் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். அதேநேரத்தில் மலேசிய வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை தகவல் தொழில்நுட்பம் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்ல ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எழுமின் தி ரைஸ் அமைப்பு குறித்த தகவல்களை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பணியையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில் உலகத் தமிழர்களை வர்த்தகம் வழி ஒன்றிணைக்கும் ஒரு தளமாக தி ரைஸ் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் உலகத் தமிழ் வர்த்தகர்களுக்கு ஒரு பாலமாக இருந்து வருகிறது என்று ஜீவன் முத்துப்பிள்ளை பாராட்டினார்!

0 Comments

leave a reply

Recent News