loader
யார் தமிழகத்தின் அடுத்த முதல்வர்?!

யார் தமிழகத்தின் அடுத்த முதல்வர்?!

கலைஞர், ஜெயலலிதா இறப்புக்குப் பின் தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு யார் யாரெல்லாமோ முதல்வர் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டனர் இப்பொழுது.
மக்களால் தேர்வு செய்யப்படாமல், சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, தனக்குக் கிடைத்த குருட்டு அதிர்ஷ்டத்தை தக்க வைக்க பிஜேபி கட்சியின் அடிமட்டத் தொண்டனாகவே மாறிவிட்டார்.
லேடியா மோடியா பார்ப்போம் என்று கர்ஜித்து பிஜேபியைத் தமிழகத்தில் தோற்கடித்த ஜெயலலிதாவின் கட்சிதான், அந்தக் கட்சியின் முதல்வர் தான் அதே மோடி கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார். உச்சகட்டமாக அதிமுக அமைச்சர் ஒருவர் 'மோடி எங்க டாடி' எனப் பல்லிளிக்கிறார்.
தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ், இன்று மோடியே கதி என கைகட்டி நிற்கிறார்.
ஆனால் மோடி தலைமையிலான பிஜேபி நடத்தும் நாடகங்களை பெரும்பாலான மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதால்... இந்தத் தேர்தலில் அதிமுக ஜொலிப்பது கடினம்தான். அப்படி ஜெயித்தால்... அது தில்லாலங்கடிதான்.
ஆக அதிமுகவின் எடப்பாடியாரோ அல்லது ஓபிஎஸ்ஸோ இனி முதல்வராவது சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.
அதே நேரத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என நாடெங்கிலும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வரும் தினகரன், இனி அதிமுகவின் பெரும்பகுதி வாக்கு வங்கியைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வார் என்றே தெரிகிறது. இந்தத் தேர்தல்தான் அவருக்கான களமாகப் பார்க்கப்படுகிறது. ஆர்.கே நகர் வெற்றி போல் இந்தத் தேர்தலிலும் அவர் சில வெற்றிகளைப் பெற்றால் முதல்வர் கனவு பலிக்கலாம்.
திமுக வைப் பொறுத்தவரை கலைஞருக்குப் பிறகு கொஞ்சம் வலுவிழந்துதான் இருக்கிறது அக்கட்சி. மு.க.ஸ்டாலினின் தெளிவற்ற பேச்சு, அணுகுமுறை அக்கட்சியினரிடையேயே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் அதிமுக உடைந்து கிடப்பதாலும், மதிமுக இணைந்திருப்பதாலும், திமுகவிற்கு ஏற்கெனவே உள்ள வாக்கு வங்கிகள் அப்படியே இருப்பதாலும் வெற்றிபெறும் சாத்தியங்கள் அதிகம் என்றே விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆனாலும் சாதாரணம் பொதுஜன மக்களின் விருப்பம் அதுவல்ல என்பதே உண்மை...
திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும்... புதிதாய் யாராவது வந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே நடுநிலை மக்களின் எண்ணம்...
யார் அந்தப் புதியவர்? மக்களின் விருப்பத்திற்கு தகுந்த அந்த நாளையத் தலைவன் யார்? என்பதே இப்போது உலகின் கண்களாகவும் இருக்கிறது.

பல போராட்டங்கள், சிறைவாசம் என கடந்த பத்து வருடங்களாக மக்களுக்காகக் களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர் சீமான். தெளிவான கருத்தியல், தெளிவான கட்சித் திட்ட வரைவுப் புத்தகம் என மிக மிகத் தெளிவாக இருக்கிறார்கள் அவர்கள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சியாக இருக்கலாம் என்ற கருத்து நிலவி வரும் அதே வேளையில் இப்போது கமல் ரஜினி என்று ஆளாளுக்கு அரசியல் பார்க்க நினைக்கிறார்கள். இதனால் நடுநிலை மக்கள் சிதறுகிறார்கள். இந்தச் சிதறல் மீண்டும் திராவிடக் கட்சிகளின் பலமாக மாறிவிடுகிறது.
கமலுக்கு ஊடகங்கள் பெரிதும் ஆதரவய் இருக்கின்றன. மாற்று என்றால் கமல் என்கிற மாதிரிதான் ஒரு தோற்றத்தை முன் வைக்கின்றன. இது சீமான் மீதான அச்சமாக இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கமல் கட்சி ஆரம்பித்து இப்பொழுதுதான் முதல் தேர்தலைச் சந்திக்கிறார், ஆனால் ஊடகங்கள் அவரைத்தான் முன்னிறுத்துகின்றன.
சீமானோ கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனது வாக்கு சதவிகிதத்தை நிரூபித்தார். அது அன்றைய எதிர்க்கட்சியான தே.மு.தி.க கூட்டணி பெற்ற வாக்குகளை விட அதிகம்.
இப்போதும் நாம் தமிழர் கட்சி அதைவிட வளர்ந்திருப்பதாகவே தெரிகிறது.
உலகம் முழுக்க அவரை ஆதரிக்கிறார்கள், அவரின் கருத்தியலை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே மிகப்பெரும் சக்தியாக இனி சீமான் உருவெடுப்பார் என்பதே உண்மை.
விஜயகாந்த் இனி உடல் ஒத்துழைக்காது, அன்புமணி நேர்மை மீது கறை படிந்துவிட்டது... மு.க.ஸ்டாலினுக்குத் திமுக மட்டுமே பலம்... துணிச்சல் இல்லாதவர்...
இப்படி இருக்கும் சூழலில் இனி தினகரன் அல்லது சீமான் இருவரில் ஒருவரே நாளைய தமிழகத்தின் முதல்வராக வர முடியும்.
தினகரனுக்கு பிஜேபி எத்தகைய குடைச்சலைக் கொடுத்தாலும் அசராமல் பிஜேபியை எதிர்ப்பதால் மக்கள் அபிமானத்தைப் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்லாது அவரது ஜாதி ஓட்டு பெரும்பகுதி தினகரன் கைவசமே இருக்கிறது. எனவே நடு நிலையான மக்கள் தினகரனை ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அதே நேரத்தில் தனிப்பெரும் சக்தியாய், எவருடனும் சமரசமின்றி தனித்து நின்று எல்லா இடர்களையும் சந்திக்கும் சீமானையும் பெரும் கூட்டம் வரவேற்கவே செய்கிறது...

தினகரன் - சீமான்... யார் அடுத்த முதல்வர் பொறுத்திருப்போம்!

 

0 Comments

leave a reply

Recent News