loader
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்....

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்....

மலேசியர்களுக்கான வாக்களிக்கும் வயது வரம்பு 18-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், எதிர்வரும் 15-வது மலேசிய பொதுத்தேர்தலில் 30%-க்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் முதல் முறையாகத் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொருளாதாரம் என அனைத்து துறைகளில் நாம் முன்னேற்றம் கண்டிருந்தாலும்; இன்றும் மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடத்திலிருப்பது அரசியல்வாதிகளே. இதனை, இன்றைய உலகில் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அத்தகையை சக்தி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான பொறுப்பு வாக்காளர்களிடம் உள்ளது. எனவே, பொதுத்தேர்தலில் வாக்களிப்பது குறித்த நிலைப்பாடும் விழிப்புணர்வும் 18 முதல் 20வயது வரையுள்ள இளைஞர்களிடம் எவ்வகையில் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் இது தொடர்பான தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். 

முடிவெடுக்கும் விஷயத்தில் பெண்களின் ஆளுமையை மேம்படுத்தும் நோக்கத்துடன் டிரா மலேசியா மலேசிய அரசியலமைப்புச் சட்டம், குடும்பச் சட்டம், குற்றவியல் சட்டம், தொழிலாளர் சட்டம், பயனீட்டாளர் சட்டம் மற்றும் ஷரியா சட்டம் தொடர்பான அடிப்படை பயிற்சிகளை நடத்தி வருகிறது. மாநிலத்துக்கு 30 பெண்கள் என இதுவரையில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு டிரா பயிற்சி வழங்கியுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகள், பொது இயக்கங்கள் சார்ந்தவர்களும், அனைத்துத் தொழில்துறை சார்ந்த நிபுணர்களும் அடங்குவர்.

அண்மையில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு குறைக்கப்பட்டதற்கு இளைஞர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் முயற்சியை டிரா முன்னெடுத்தது. அதன் முடிவைச் சரவணன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அ) சிலர் அடுத்தப் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டுமா என்பதைப் பற்றிய முடிவுக்கே இன்னும் வரவில்லை.

ஆ) சிலருக்கு அவர்களுடைய தொகுதியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற பிரதிநிதிகள் யார் என்றே தெரியவில்லை.

இ) சிலருக்கு வாக்களிக்கும் நடைமுறை என்ன என்ற அறிதலே இல்லை.

ஈ) கணிசமானவர்கள், தேர்தல் நேரத்தில் தங்களுடைய பெற்றோர்களோ நண்பர்களோ சொல்லும் வேட்பாளருக்கே வாக்களிக்கவுள்ளதாகக் கூறியுள்ளனர்.

உ) தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகளைக் கருத்தில் கொண்டே வாக்களிக்க விரும்புவதாகக் கூறும் இளைஞர்களும் உண்டு.

ஊ) மேலும் சிலரோ இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன, நாம் ஏன் அதை நினைத்து கவலைப்பட வேண்டும் என்ற அலட்சியப் போக்கை கொண்டுள்ளனர்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பள்ளிப் பருவத்திலேயே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும் வாக்காளர்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் எடுத்துக் கூறும் குடிமை கல்வி இன்றைய தலைமுறைக்கு அவசியம் தேவைப்படுகிறது என்றார் டிரா சரவணன்.

எவ்வித அரசியல் சார்புமற்று வாக்களிப்பதின் அவசியத்தையும் பொதுமக்களாக நமது உரிமைகளையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை டிரா முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News