loader
இன்னும் எவ்வளவு காலம் இழிவுகளைத் தாங்கிக் கொள்வது?   ஏன் ஓர வஞ்சனை?

இன்னும் எவ்வளவு காலம் இழிவுகளைத் தாங்கிக் கொள்வது? ஏன் ஓர வஞ்சனை?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர், அக்டோபர் - 3

இஸ்லாம் அல்லாதவர்களை இழிவுபடுத்துவது சமீபகாலமாக மேலோங்கிக் கொண்டே வருகிறது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் இதுவரை  இல்லை என சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஷாகிர்  நாசோஹா என்ற சமயப் போதகர், இஸ்லாம் அல்லாதவர்கள் மனதைப் புண்படுத்தும் அளவிற்கு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இது இஸ்லாம் அல்லாதவர்களுக்கு அதிருப்தியை ஏறபடுத்திய நிலையில், இன்று சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தலைநகர் செந்தூல் போலீஸ் நிலையத்தில் கூடி, தனிப்பட்ட முறையில் பலர் அந்த சமய போதகருக்கு எதிராக போலீஸ் புகார் அளித்தனர்.

அதோடு, நாடு தழுவிய நிலையில்  தீபகற்ப மலேசியா மற்றும் சபா, சரவாக்கில் உள்ள 17 மாவட்டங்களிலும், அந்த சர்ச்சைக்குரிய சமய போதகருக்கு எதிராகப் புகார்கள் அழிக்கப்பட்டு வருவதாக,  உலக மனித உரிமை கூட்டமைப்பு இயக்கத் தலைவர் சசிகுமார் தெரிவித்தார்.

இன்று இங்கு இந்து, இஸ்லாம், கிறித்துவம், புத்த மதத்தவர்கள்,  டாயாக்  என அனைத்து மதத்தவரும் மலேசியர்களாக ஒன்று கூடி, இத்தகைய இனவாத உரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  முற்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இஸ்லாத்தை எதிர்த்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே வேகம் அல்லது நடவடிக்கை மற்ற சமயங்களை இழிவுபடுத்துபவர்கள் மீது தேவை என சசிகுமார் தெரிவித்தார்.

ஜந்து ஆண்டுகளுக்கு முன்பும், இந்தச் சமய போதகர் மற்ற சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளிகளை வெளியிட்டார். ஆனால், இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மற்ற சமயத்தை இழிவுபடுத்தி போதனை நடத்தும் இஸ்லாம் ஜாகிம், சமய போதகர்களின் நடவடிக்கைகளைக்  கணகாணிக்கிறதா?   இந்த ஜந்து ஆண்டு காலத்தில் எத்தனை இழிவுகள்? அனைத்திற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு காலம் இது தொடரும்?  சட்ட ரீதியில் இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என நாங்களும் பொறுமை காக்கிறோம்.  ஏன் இந்த ஓர வஞ்சனை? என சசிகுமார் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் மனித உரிமை ஆணையம் இருக்கிறது; இவர்களைப் போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது?

நம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மோலோங்கச் செய்வதற்குத்தான் ஒற்றுமை அமைச்சு உள்ளது. ஆனால்,  நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, சமூகத்தில் நஞ்சை விதைக்கும் இப்படிப்பட்டவர்கள் மீது ஒற்றுமை அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்தது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

நாங்கள் மலேசியர்களாக வாழ ஆசைப்படுகின்றோம். பல்லின மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து வாழவேண்டும் என, எங்களுக்கு மலேசியக் கல்வி கற்பித்துள்ளது.  ஆகையால், இந்த சர்ச்சைக்குரிய சமய போதகரைக் கைது செய்து விசாரண நடத்தி, நீதிமன்றத்தில் நிறுத்தி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்வரை நாங்கள் போராடுவோம் என  சசிகுமார் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News