loader
ம.இ.கா தலைவரின் கருத்து! அம்னோ ஆதரவாளர்களிடையே எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது!

ம.இ.கா தலைவரின் கருத்து! அம்னோ ஆதரவாளர்களிடையே எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர், ஜூலை-8:

தேசிய முன்னணி தலைவரும், அம்னோ கட்சியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ  அகமட் ஸாஹிட் ஹமிடி,  நேற்று டான் ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு அம்னோ வழங்கிய ஆதரவை உடனடியாக மீட்டுக்கொள்வதாகவும், டான் ஸ்ரீ முகைதீன் யாசின் கவுரமாகப் பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்துரைத்த ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், முகைதீன் விலகுவதற்கு முன், அம்னோ அமைச்சர்களை விலகச்சொல்லி வலியுறுத்தாலமே என்ற கருத்தை முன் வைத்தார். அதோடு பல அம்னோ அமைச்சர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

இதனிடையே அம்னோவின் கூட்டணிக் கட்சியாக பல ஆண்டுகள் இருக்கும் ம.இ.கா, அம்னோவிற்கு எதிர்ப்பாகவும், பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்குச் சாதகமாகவும் கருத்துத் தெரிவித்துவருவதாக அம்னோ ஆதரவாளர்கள் பலர்  ம.இ.கா மற்றும் ம.சீ.ச ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன்  அம்னோவின் முடிவை மதிப்பதாகவும், ஆனால், தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம் என்றும், நாடு இருக்கும் நிலையில், அவசரமாக ஒரு முடிவு வேண்டாம் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

சமீப காலமாக ஒரே கூட்டணியில் உள்ள அம்னோ, ம.இ.கா,  ம.சீ.ச ஆகிய கட்சிகள், அரசியல் விவகாரம் தொடர்பாகக் கூட்டம் போட்டு ஒரு மனதாக முடிவு எடுத்து நிறைவேற்றும் கலாச்சாரம் குறைந்து, கட்சி ரீதியில் முரண்பாடான கருத்துக்கள் தேசிய முன்னணி கூட்டணியில் அரங்கேறி வருகிறது.

இதனால் இந்தப் பாரம்பரிய கூட்டணி நிலைக்குமா? அல்லது உடைப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அப்படி இந்தக் கூட்டணி உடைந்தால், அம்னோ யாரோடு கூட்டணி வைக்கும்? இல்லை தனித்துப் போட்டியிடுமா?  ம.இ.கா - ம.சீ.ச கட்சிகள் முகைதீன் கூட்டணியில், பெரிக்காத்தான் நேஷனலாக வலம் வருமா?  தேசிய முன்னணி கலைக்கப்படுமா? போன்ற கேள்விகளே மக்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்திருக்கின்றன இப்போது.

இதனிடையே, "நான் கட்சி ஆதரவாளர்... கட்சி எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்" என்று முன்னாள் பிரதமரும், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ நஜீப், அம்னோ உச்ச மன்ற முடிவு தொடர்பாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News