loader
50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க  HPC திட்டம்!  இன்று 200 பேருக்கு வேலை கிடைத்ததற்கான கடிதம் வழங்கப்பட்டது!

50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க  HPC திட்டம்! இன்று 200 பேருக்கு வேலை கிடைத்ததற்கான கடிதம் வழங்கப்பட்டது!

(வெற்றி விக்டர் / ஆர் பார்த்திபன்)

கோலாலம்பூர் ஏப்ரல் -6

2021 -ஆம் ஆண்டு 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை  உருவாக்கும் வகையில்  மனிதவள அமைச்சு HRDF PLACEMENT CENTRE (HPC)  என்னும் திட்டத்தை   இன்று அறிமுகம் செய்துள்ளது.

இணையம் வழி நடத்தப்படவிருக்கும் எச்.பி.சி திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதலாளிமார்கள் அவர்களின் வியாபாரத்துறைக்குத் தேவைப்படும் வேலை வாய்ப்புகளைப் பதிவு செய்வதோடு, அதன் வழி  உடனே அந்த இடத்திற்குத்  தரமான  பயிற்சி பெற்ற வேலையாள்களைத் தருவிக்க முடியும்.

அதோடு இந்த எச்.பி.சி  சென்டர் பல தொழிலாளர்களுக்கு அவர்களின் திறனை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவுள்ளது. பல பயிற்சியாளர்களுக்கு  வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, புதிய திறன் தேடும் மலேசியர்களுக்கு இதன் வழி புதிய அனுபவமும் அதோடு வேலை வாய்ப்பும்  அமைத்து தரும் ஒரு களமாக   எச் பி.சி சென்டர் செயல்படும்.

அந்த வகையில்  இன்று தலைநகர் கோலாலம்பூர்  கொன்வென்ஷன்  மண்டபத்தில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ  எம். சரவணன், நிதி அமைச்சர்  செனட்டர் தெங்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா  சவ்ரோல் ஆகியோர்  இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன்  மனிதவள அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம்  கோவிட் -19 காலகட்டதில்  வேலையின்மையைக்  குறைத்து உடனுக்குடன் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறந்த திட்டம்  என்றும், இத்தளத்தை முதலாளிமார்களும், மலேசியர்களும்  பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எச்.ஆர் .டி எஃப் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஷாஹுல் ஹமீட் கூறுகையில்,  இத்திட்டம் தொடர்ச்சியாக மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தளமாக அமையவிருக்கிறது எனவும் பயிற்சிகள், பயிற்சியாளர்கள், தொழிலாளர்கள் , முதலாளிகள்  என அனைவரையும் இணைத்து ஒரு பெரிய தொழில் வாய்ப்பை உருவாக்கும் மையமாக   எச்.பி.சி சென்டர் செயலபடவிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

முதல் கட்டமாக எச்.பி.சி வாயிலாக இன்று 200 பேருக்கு  பல தரப்பட்ட நிறுவனங்களின் வாயிலாக வேலை வாய்ப்புகள் ஏறபடுத்திக் கொடுக்கப்பட்டு, டத்தோ ஸ்ரீ சரவணன் , தெங்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா சவ்ரோல் முன்னிலையில் அவர்களுக்கு வேலைக்கான உறுதி கடிதங்கள் வழங்கப்பட்டன!

0 Comments

leave a reply

Recent News