loader
இந்தோனேசியாவில் வெள்ளம்!  நிலச்சரிவில் 44 பேர் பலி!

இந்தோனேசியாவில் வெள்ளம்! நிலச்சரிவில் 44 பேர் பலி!

 

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்குள்ள பல கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் இருந்து சேறும் சகதியுமாக வெள்ள நீர் வெளியேறி ஊர்களுக்குள் புகுந்து.

கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து லாமெனெலே என்ற மலை கிராமத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 வீடுகள் மீது மண் சரிந்து விழுந்தது‌. இதில் அந்த வீடுகளில் இருந்த ஏராளமானோர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

உடனடியாக அங்கு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுடன் உள்ளூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 38 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. பலத்த காயங்களுடன் 9 பேர் மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதனிடையே அருகிலுள்ள ஓயாங் பாயாங் மற்றும் வாய்புராக் ஆகிய கிராமங்களில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.‌ அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

மழை வெள்ளம் காரணமாக அங்குள்ள பல கிராமங்களில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டுள்ளது.‌ இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது!

0 Comments

leave a reply

Recent News