loader
தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ் – (தொடர் 1) – இர.திருச்செல்வம் (மலேசியத் தமிழர் தேசியப் பேரவை)

தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ் – (தொடர் 1) – இர.திருச்செல்வம் (மலேசியத் தமிழர் தேசியப் பேரவை)

 

• தமிழ்மட்டுமே தனிமொழி, மற்ற அனைத்தும் கலவைத் திரிபுமொழிகள்.

• தமிழுக்கு மட்டுமே தனித்தன்மை, மற்றதற்கெல்லாம் சார்புதன்மையே தன்மை.

• எந்த மொழியின் உதவியும் இல்லாமல்; முழுதும் தன்னிறைவாகத் தன்னுடைய சொற்களாலும் கருத்துகளாலும் கடைப்பிடிப்பு மரபுகளாலும் தன்காலில் நிற்கவல்ல தன்மையே தனித்தன்மை எனப்படும்.

• இது தமிழுக்கு உண்டு, சமற்கிருதம் உள்ளிட்ட எந்த மொழிக்கும் கிடையாது.

• தமிழுக்கு உள்ள இந்த தனித்தன்மை என்பது எங்கிருந்தோ வந்ததன்று. அது தமிழனிடமிருந்தும் தமிழச்சியிடமிருந்தும் வந்ததாகும்.

• தனித்தமிழ் என்பது மொழிமரபு மட்டுமன்று. அது அனைத்துநிலை அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியிருப்பது – அறத்தின் தூய்மையிலும் ஒப்புரவிலும் இயங்குவது.

• அவற்றின் ஒட்டுமொத்தப் பெயர்தான் தமிழியம் என்பதாகும்.

• தமிழ் – தமிழியம் என்பதனைத் தனித்தமிழ், தனித்தமிழியம் என்று சொல்லும் நிலை ஏன் வந்தது என்றால், தமிழில் ஒன்றுமில்லை – எல்லாம் சமற்கிருதத்திலிருந்து பெறப்பட்டது – எடுத்துக்கொள்ளப்பட்டது என்று ஆரிய வழியினர் சமற்கிருதத்தைத் தனித்துத் பிடித்துத் தருக்கித் திரித்துச்சொல்லி வந்ததன் காரணமாக வந்தது.

• அதனால்தான், தமிழுக்கும் தமிழருக்கும் எல்லாவற்றையும் இவை எம்முடையவை என்று சான்றுகளால் நிறுவிக்கொள்ள வேண்டியநிலை எல்லாத் துறையிலும் ஏற்பட்டது – ஏற்படுத்தப்பட்டது.

• அதனுடைய விளைபயனாக வந்த பெயர்தான் தனித்தமிழ் – தனித்தமிழியம் என்பவை. இந்த வரலாற்று உண்மை ஒன்றையும் பாராமல் பெரும்பாலான தமிழ்மக்களின் அறியாமையின்மேல் ஏறிக்கொண்டு சும்மா ஆட்டம் காட்டாதீர்கள்! அடக்கப்படுவீர்கள்!

• இருபதாம் நூற்றாண்டில் நிறுவிவைத்த உண்மையை இருபத்தோராம் நூற்றாண்டில் ஆட்டிப்பார்க்கிறார்கள்!

• வரலாறு தெரியாமல் ஆராய்ச்சி இல்லாமல் வாய்க்கு வந்தபடிப் பேசுவதெல்லாம் அடாவடித்தனம்!

• தமிழ்ச்சமயத்தோடு நிற்கும் தமிழர்க்குத் தனித்தமிழ்தான் ஆணிவேர், கிளைவேர், சல்லிவேர் …

• இந்தியாவின் எந்த மொழிக்கும் வரலாற்றுக்கும் ஆதிமூலம் தனித்தமிழ்தான் – தமிழர்தான்.

• தமிழுக்கு ‘ஆத்திக’ ‘நாத்திக’ சாயம் அடித்துத் தமிழர்களை மோதவிடும் குள்ளநரித்தனம் இங்குச் செல்லாது – வெல்லாது.

• இந்திய நாகரிகத்தின் மூலம் எது என்ற போராட்டம் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் மட்டுமே நடக்கின்ற போராட்டம்.

• வேறு எந்த மொழிக்கும் இந்தப் போராட்டம் இல்லை ஏனெனில் அவை எதற்குமே மூலமாக இல்லை!

• எப்போதும் தமிழ்மட்டும் ஒற்றை ஓரணி மற்றவையெல்லாம் சமற்கிருதத்தோடு கூட்டணி.

• தமிழர்தம் ஒட்டுமொத்தப் அனைத்துநிலை அனைத்துத்துறைப் பொதுமைநிலை தமிழ் என்ற சொல்லிட்டுத் தொடங்கும்.

• இந்து என்பது அன்னியர்கள் தங்களின் ஆட்சி வசதிக்காக இட்ட புதிய பொதுப்பெயர்.

• இந்தியாவில் தமிழியம், ஆரியம், சமணம், புத்தம், சீக்கியம், … என அரபி பார்ச்சி ஆங்கிலம் சாராத அனைத்தையும் அனைவரையும் குறிக்கின்ற சட்டவழிப் புதுப் பொதுப் பெயரை அப்படியே வளைத்து உங்களின் சனாதன தரும வைதீக நெறிக்கும் அதன் தலைமைக்குத் தலைபணிந்துள்ள சார்புநெறிகளுக்கும் மட்டுமேயான ஒன்றாக ஆக்கிக்கொண்டுக் கதைதிரிக்கின்ற வேலையை உடனே நிறுத்திவிடுங்கள்.

• ஏதோ கடவுள்நெறி என்பது காலங்காலமாக நீங்கள் மட்டுமே நேரலையாகக் கடவுளிடமிருந்து கொண்டுணர்ந்து கடைப்பிடிக்கின்றவர்கள் போலவும், அதன் நடைமுறைகளுக்கு நீங்கள் மட்டுமே முற்றுரிமையும் முழு எடுத்துக்காட்டுமாய் இருப்பவர்கள் போலவும் தன்மூப்பாய் – தான்மட்டுமே சரி என்பதாகப் பேசுவது என்ன தன்மையோ?

• அப்படியும் எப்படியும் இந்து என்ற இந்த அன்னியப் பெயர் தமிழர் என்னும் இயல்பான எங்களின் மூலமுதல் வரலாற்றுத் தொன்மைக்கும் தொடர்ச்சிகும் பொருந்தாத வீண்பெயரே.

• நீங்கள் உங்கள் நெறிக்கு வசப்படுத்திவிட்ட இந்து என்ற பொதுப்பெயர் என்பது வழிவழியே வாழையடி வாழையென வந்த தமிழ்த் திருக்கூட்ட மரபு அல்லது தமிழ்ஞானப் பரம்பரையை மறைக்கின்ற பெயராக உள்ளது.

• தமிழ்த்திருக்கூட்ட தலைமைகூறும் சிவனியம் திருக்கயிலாய மரபுவழி நெறிகூறும், சதுர்வேதவழி அன்று. எங்களின் திருக்கயிலாய மரபுக்குத் தென்முகநம்பி மூல ஆசான். உங்களின் சதுர்வேத சனாதன மரபுக்குப் பிரம்மா மூல ஆசான். இரண்டும் ஒன்றல்ல.

• எங்கள் நூல்கள்கூட மூவாயிரம் தமிழ், மூவர்தமிழ், … என்றுதான் பெயர்பெற்றுள்ளன. எங்கள் இறைநெறி சார்ந்தொழுகின்ற செயல்முறைக்கும் தமிழ்செய்தல் – தமிழ்புரிதல் என்றுதான் எங்கள் மூலவர்கள் பெயர்வைத்து உள்ளனர்.

• எங்களுக்கு என்று எங்கள் மூல முன்னோர் கட்டிவைத்துள்ள காலத்துக்கும் அழியாத சொந்த வீடிருக்க அதில் நாங்கள் குடியிருந்து வாழக்கூடாது என்று சொல்கின்ற நீங்கள் யாராக இருக்கக்கூடும்?

• அவ்வகையில், திருமூலர் அருளிச்செய்துள்ளபடி ‘செந்தமிழ் ஆதி’ என்று விளங்குகின்ற அதன் உண்மை நிலையினை இப்பெயர் மறைக்கின்றது

• ஏற்கனவே, எமது முன்னோர் வைத்துள்ள சொந்தப்பெயர் இருக்கும் போது; எங்கிருந்தோ வந்த ஐரோப்பியர் – அராபியர் – பாரசீகர் இட்ட அன்னியப்பெயர் எமக்குத் தேவை இல்லை.

• எவர் பார்சி இல்லையோ, எவர் இசுலாமியர் இல்லையோ, எவர் கிறித்துவர் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்து என்று அன்னியர்கள் தங்களை முன்வைத்துச் செய்துவைத்த இந்தப் பெயர்ப் பகுப்புமுறை நம்மை முற்படுத்தும் ஒன்றாக இல்லை; மதிக்கின்ற ஒன்றாக இல்லை.

• இதுதான் எங்களுக்கு வேண்டும் என்போர் இந்தப் பெயரை வைத்துக்கொள்ளுங்கள்; எங்களைப் போன்ற மூல மரபு உடையவர்களை உள்ளே இழுத்துவைத்து உங்களுக்குக்கீழ் அடிமையாகப் பூட்டிவைக்க முயலாதீர்கள்.

• ஆரியமும் திராவிடமும் மூலத்தமிழ் மரபினை மறைக்கும் அன்னியத் திரிபுநிலைப் பெயர்கள். இவை எதுவும் தமிழ் – தமிழர்க்கான பெயரே அல்ல.

• திராவிட நாத்திகம் என்ற பெயரில் நீங்கள் சுட்டுகின்ற கதை எங்கள் வரலாறு அன்று. எங்கள் கருத்தியலை – மூல மரபியலை அவற்றின் கீழ்கொண்டு அடக்க நினைப்பது அடாவடி அழிச்சாட்டியம்! பெயர்மாற்றிப் பித்தலாட்டம்! ஆரியமும் திராவிடமும் ஆட்டம் போடுவதற்குத் தமிழை – தமிழரை – தமிழ்மரபியலை ஆடுகளமாக ஆக்கிக்கொள்ளப் பார்க்கிறீர்கள்.

• இப்படிப் போனால் ஆரிய ஆத்திகம்; அப்படிப் போனால் திராவிட நாத்திகம் என்ற நிலை என்பது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது.

• புதிய தலைமுறையினர் தெளிவாகத் தமிழ்த்தலைமுறைகளாக தமிழ்மரபியத்தை உணர்ந்தவர்களாகக் – கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ்வதற்கு ஆவனசெய்துகொள்பவர்களாக வளர்ந்துவருகிறார்கள். அவர்களிடத்தில் ஆத்திக நாத்திகக் கூத்துக்கும் குத்தாட்டத்திற்கும் இடமில்லை.

• கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்த்து வந்துள்ளது தமிழர் மரபு வரலாறு.

• முதலில் நட்பாக இருந்து பின்பு தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிய ஆரிய வைதிகத்தைக் கொண்டாடித் தமிழைத் தாழ்ச்சிகூறிய கயமைத்தமிழன் குயக்கொண்டான் என்பவரை இறந்துபோகச்செய்து (அறம்பாடிச் சாவமிட்டு) அவையோர்தம் வேண்டுகோளுக்கு மனமிரங்கி மீண்டும் உயிர்த்தெழச்செய்த வரலாறு மூன்றாம் தமிழ்ச்சங்கத் தலைமைப் பேரறிவர் எம்பெருமான் நக்கீரர் வரலாறு.

• மும்மல காரியம் ஆகிய திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் தலைமையில் தொடங்கிய முதற்சங்கத்தில் எந்த அன்னியரும் இல்லை. முற்றும் முழுதும் புலனழுக்கு இல்லாத தூய ஆன்றோர் தலைமையில் வந்த மூலப் பெருந்தமிழ் மரபை ஒரு சில்லறைச் சில்லு என்பதாக, சொந்தச் சரக்கில்லாத ஏனைய இந்திய மொழிகளைப் போலச் சமற்கிருத சதுர்வேத சனாதன தருமத்தின் அடிநிழலில் அண்டிவாழும் அண்டுகுடி – ஒண்டுகுடி என்று நினைத்துக்கொண்டு; தனித்தமிழைப் வேரறுப்போம் என்று தமிழரிடமே தமிழ் ஏடுகளிலேயே எழுதும் அளவுக்கு இடம்விட்டுப்போய் இருக்கின்ற நிலைமையை மிகத் திறமையாகப் பயன்படுத்துகின்றீர்கள்.

• கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனநிலையைப் பொருத்தது. இன்று நம்பும் ஒருவர் காலப்போக்கில் நம்பாமல் போகக்கூடும். இன்று நம்பாத ஒருவர் காலப்போக்கில் நம்பக்கூடும்.

• கடவுளுக்குக் கட்சி இல்லை. கடவுள் பெயரால் மக்களைப் பிரித்துவைத்து ஒருவரை ஒருவர் அழிவுசூழுமாறு தூண்டுவது என்பதெல்லாம் எந்தச் சமயத்தில் உள்ள அறமுடையோர்க்கும் உடன்பாடில்லாத ஒன்று.

• கடவுள் எல்லாம்வல்லவர் எல்லாரையும் அவரே ஐந்தொழில் வழியாகப் பார்த்துக்கொள்கிறார் – பார்த்துக்கொள்வார். நடுவில் நீங்கள் யார் தண்டல்நாயகம் – படைநாயகம்.

0 Comments

leave a reply

Recent News