loader
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக களத்தில் குதித்த மக்கள்!

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக களத்தில் குதித்த மக்கள்!


யாங்கூன்: தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. இருப்பினும் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில்,  ராணுவம் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும், அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சமூக வலைத்தளங்களும் மியான்மரில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நேப்பிதாவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவ சர்வாதிகாரம் தோல்வி அடையட்டும், ஜனநாயகம் வெல்லட்டும் என கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள், கையில் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இவ்வளவு பெரிய போராட்டம் நடைபெற்றது இதுதான் முதல் தடவை எனக் கூறப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News