loader
இந்தியர் தொழில் காணாமல் போகும் அபாயம்!  அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும்!  - மைக்கி கோரிக்கை

இந்தியர் தொழில் காணாமல் போகும் அபாயம்! அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும்! - மைக்கி கோரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 19: அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் முயற்சி, கட்டம் கட்டமாக நிறுத்தப்படும் என்றும்,  மூன்று ஆண்டுகள் வரை அந்நியத் தொழிலாளர்களை வைத்துக்கொள்ளலாம் என்றும், அந்த மூன்று ஆண்டு காலக்கட்டத்தில் அந்நிய தொழிலாளர்களைக் கொண்டு உள்நாட்டவர்களுக்குப் பயிற்சி வழங்கி, உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும்படியும் உள்துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடீன் அண்மையில் கருத்து கூறியிருந்தார்.

ஆனால், உள்துறை அமைச்சரின் இக்கருத்து இந்திய தொழில்முனைவர்களுக்கு பெரும் இடியான செய்தியாக அமைந்துள்ளதாக, மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின்  தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ள உலோக மறுசுழற்சி, உணவகம், ஜவுளித்துறை, சிகை அலங்காரம் போன்ற துறைகளில் வேலை செய்வதற்கு உள்நாட்டவர்கள் விருப்பம் கொள்வதில்லை. காரணம் இந்தத் துறைகள் அசுத்தம், ஆபத்து மற்றும் கடுமையாக இருக்கும் என்பதால், அவர்கள் இந்த வேலைகளைச் செய்ய விரும்புவது இல்லை என, டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

எங்கள் துறைக்கு வேறும் 30 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள். ஆனால், அவர்களைத் தருவிப்பதிலும் பலவிதமான சிக்கல்களை எதிர்நோக்குகிறோம்.

இந்நிலையில், உள்துறை அமைச்சரின் இந்தத்  தகவல், இந்தியர்களின் தொழில் துறை காணாமல் போவதற்கு ஓர் அபாய ஒலியாகவே கருதப்படுகிறது என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நிலைமை கை மீறிப் போவதைத் தடுக்க, அரசாங்கத்துடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்பதற்கு அரசாங்கம் செவி சாய்க்கவேண்டும் என, டத்தோ கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News