loader
கால்பந்து நாயகன் மரோடானா காலமானார்!

கால்பந்து நாயகன் மரோடானா காலமானார்!

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.

மாரடோனாவின் மறைவுச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளனர்.

கடந்த மாதம் மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் மாரடோனா தொடர்ந்து சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.26) அவர் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்து பெருமை சேர்த்தவர் மாரடோனா. பார்சிலோனா, நபோலி அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்கும் வெகு காலம் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

அர்ஜென்டினாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் மாரடோனாவுக்கு ரசிகர்கள் உண்டு. பிரேசிலுக்கு பீலே, அர்ஜென்டினாவுக்கு மாரடோனா என கால்பந்து களத்தில் கொடிகட்டிப் பறந்தவர்.

அதேவேளையில், விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்றும் செய்திகளில் அதிகமாக பேசப்படும் நபர் என்றும் பல்வேறு காரணங்களுக்காக மரடோனா அறியப்பட்டார்.

போதைப் பொருள் பயன்பாடு, உடல் எடை உபாதை, மன அழுத்தப் பிரச்சினைகள் என பல்வேறு விதமாக ஊடகங்களின் பேசுபொருளாக இருந்திருக்கிறார்.

இருப்பினும், கால்பந்து விளையாட்டில் அவருக்கு நிகர் அவரே. 2000-ம் ஆண்டில், மாரடோனாவை நூற்றாண்டின் கால்பந்து வீரராக ஃபிஃபாவால் (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அங்கீகரித்தது.

மாரடோனா மறைவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டுப் அதிபர் அல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News