loader
லிவர்பூல் மாஸ் வெற்றி! சோனமுத்தா போச்சா? பார்செலோனாவுக்குப் பதிலடி...

லிவர்பூல் மாஸ் வெற்றி! சோனமுத்தா போச்சா? பார்செலோனாவுக்குப் பதிலடி...

(சசிதரன் தர்மலிங்கம்)

அன்ஃபீல்ட் மே 8-

ஐரோப்பா வெற்றியாளர்கள்  கிண்ண அரை இறுதியின் இரண்டாம் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் அரை இறுதி ஆட்டத்தில் பார்செலோனா-வின்  சொந்த அரங்கில்  லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடந்து லிவர்பூல் மீது மற்ற அணியின் ரசிகர்கள்  ‘மீம்ஸ்’ உருவாக்கி  கடந்த வாரம் முழுவதும் லிவர்பூல் ரசிகர்களை வறுத்து எடுத்தனர். அதுமட்டுமின்றி வெற்றியாளர்கள் கிண்ணத்தை வாகை சூடும் லிவர்பூல் அணியின் கனவை பார்செலோனா ஆட்டக்காரர்  மெஸ்சி கலைத்துவிட்டார் என்றும் செய்திகள் பரபரப்பாகின.

 

சோன முத்தா போச்சா?

லிவர்பூல் ரசிகர்கள் , தங்கள் அணியைத் தற்காத்துக்கொள்ள அந்த அணிக்கு ஆதரவாக அன்ஃபீல்டில் பதிலடி கொடுப்போம் என்று ஆதரவு பதிவை  வெளியிட்டபோது, அதற்கும்   வடிவேல் பாணியில்  லிவர்பூல் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது போல் ‘மீம்ஸ்’  உருவாக்கி,  

‘இன்னுமாடா இந்த ஊர் நம்பள நம்புது’ன்னு   கேலி கிண்டல்களைத் தட்டிவிட்டனர்.

ஆனால், இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 4-0 என்று  லிவர்பூல் அணி பார்செலோனா அணிக்கு ‘மாஸான’ பதிலடியைக் கொடுத்து, ஐரோப்பிய வெற்றியாளர்கள் கிண்ண இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற்று அசத்திவிட்டது.

இதனை அடுத்து, லிவர் பூல்  ரசிகர்கள்  உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். 2005-ல் லிவர்பூல் அணி செய்த அதிரடியைப் போல், மீண்டும் யாரும் எதிர்பார்க்காத ஓர் அதிரடியை லிவர்பூல் செய்துள்ளது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் ஒரிகி அடித்த கோல், அரங்கை அதிர வைக்க 1-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது.

தங்கள் அணியைச் சமநிலைப்படுத்த இன்னும் இரண்டு கோல் தேவை என்ற பதற்றத்தில் இருந்த லிவர்பூல், ரசிகர்களை ஏமாற்றாமல் இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்த 54-வது  நிமிடத்தில் வைனால்டோ அடித்த கோல் அரங்கை அதிர வைத்தது. அந்தச் சத்தம் அடங்குவதற்குள் 56-வது நிமிடத்தில் வைனால்டோ அடித்த இரண்டாவது கோல், லிவர்பூல் மீண்டு வந்துவிட்டது என்ற சரிதிரத்தை ரசிகர்கள் கொண்டாடிய நொடியானது. அதன் பின் 79-வது நிமிடத்தில்  லிவர்பூல் அணிக்குக்  கிடைத்த கோர்னர் கிக்கை மிகச் சாதுரியமாக லிவர்பூல் பயன்படுத்தி, அதையும் வெற்றி கோலாக மாற்றினார் ஒரிகி.  தனது சொந்த அரங்கில்  கடந்த வாரம் தங்களை வீழ்த்திய பார்செலோனா அணிக்குப் பதில் அடி கொடுத்து, ‘நான் வீழ்வேன் என்று நினைத்தயோ?’ என,  தனது பலத்தைக் காட்டி 4-3 என்ற கோல் கணக்கில் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளது லிவர்பூல்.

இதனிடையே நேற்று அதிகாலை தொடங்கி சமூக வலைத்தளமான பேஸ்புக், டிவிட்டர் முழுக்க லிவர்பூல் வண்ணமாகவே மிளிர்கிறது. லிவர்பூல் ரசிகர்கள் ஒட்டுமொத்த இணையத்தையே ஆக்கிரமித்துள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News