loader
தாய்மொழி மலையாளமாக இருந்தாலும்   உயிர்மொழி என்றுமே தமிழ்தான்!  ஜி.வி.நாயர் பேச்சு

தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் உயிர்மொழி என்றுமே தமிழ்தான்! ஜி.வி.நாயர் பேச்சு

ரவாங், அக். 10-

ரவாங் தமிழ்ப்பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மண்டபத்திற்குக் குளிர்சாதன வசதி பொருத்துவதற்காக சுமார் 150,000 வெள்ளி நிதி வழங்க முன்வந்த டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர், நேற்று முன்தினம் முதல் கட்டத் தொகையாக 40,000 வெள்ளிக்கான காசோலையை ரவாங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நேரடியாக வருகை புரிந்த டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் அந்தப் பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மண்டபத்தைப் பார்த்து தாம் பிரமிப்படைவதாகத் தெரிவித்தார்.

இந்த மண்டபம் மிகச் சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது. தாம் எதிர்பார்த்ததைவிட மிக மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ்ப்பள்ளி வாரியத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

பின்னால் இருந்து புறம் பேசுபவர்களை ஒருபோதும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் அவர்களால் எந்தப் பிரயோசனமும் இருக்கப் போவதில்லை. எனவே குறைசொல்பவர்களை ஓரங்கட்டிவிட்டு நாம் செய்ய வேண்டிய பணியைச் சிறப்பாகச் செய்வோம் என்று அவர் கூறினார்.

ரவாங் தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் டத்தோ கிருஷ்ணமூர்த்தியும், துணைத் தலைவர் டத்தோ சுரேஷ்ராவும் மண்டபத்திற்கு குளிர்சாதனை வசதி பொருத்துவதற்காக உதவி கேட்டு தம்மை வந்து பார்த்தபோது, முதலில் தாம் மறுத்துவிட்டதாகவும், அதன் பிறகு பள்ளித் தலைமையாசிரியர், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், மேலாளர் வாரியம் ஆகிய 3 தரப்பினரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே உதவ முடியும் என்று கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், அன்றைய தினத்தில் தலைமையாசிரியர், மேலாளர் வாரிய உறுப்பினர்கள் உட்பட 2003-ஆம் ஆண்டு தொடங்கி இதுநாள் வரையில் பொறுப்பு வகித்த பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் வருகை புரிந்தது மகிழ்ச்சியளிக்கிறது.இந்தத் தமிழ்ப்பள்ளிக்கு உதவுவதில் பெருமை கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

அதே வேளையில், மிகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டு கம்பீரமாகத் தோற்றமளிக்கும் இந்த மண்டபத்தின் மேடையில் திரை அமைப்பதற்காக, மேற்கொண்டு 30,000 வெள்ளியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆக மொத்தம் இந்தத் தமிழ்ப்பள்ளி மண்டபத்திற்காக 180,000 வெள்ளி வழங்குவதாக அவர் கூறினார்.

தம்முடைய தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், உயிர்மொழி என்றுமே தமிழ்தான் என்றும் அவர் சொன்னார்.

எனவே இந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கும், அதன் மாணவர்களுக்கும்  எல்லாக் காலங்களிலும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News