loader
திருந்தவே மாட்டீங்களா மித்ரா!  அண்டர் கன்ஸ்ட்ரக்‌ஷனில் தமிழ்!

திருந்தவே மாட்டீங்களா மித்ரா! அண்டர் கன்ஸ்ட்ரக்‌ஷனில் தமிழ்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் செ-19

பக்காத்தான் ஆட்சியில்  மித்ரா என்று   பெயர் மாற்றம் கண்ட மலேசிய இந்திய உருமாற்ற  அமைப்பு அதன் அகப்பக்கத்தை அறிமுகப் படுத்திய காலகட்டத்தில் இருந்து, அந்த அகப்பக்கத்தில் உள்ள தமிழ்த்  தகவல் பிரிவு காலியாகவே இருக்கிறது. 

அதைச் சரிசெய்யச் சொல்லிச் சொல்லி பலரும் ஓய்ந்துவிட்டோம். மேலே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள். இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது  மித்ராவின்  தமிழ்த் தகவல் பிரிவு.

உலகிலேயே முதன் முதலாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆதி மொழி இங்கே 'அண்டர் கன்ஸ்ட்ரக்‌ஷனாம்'. 

எந்தச் சமுதாயத்தைப் பிரதிநிதித்து அரசியல் நடத்துகிறார்களோ அந்தச் சமுதாயத்தின் மொழி இங்கே அந்நியப்பட்டு இருக்கிறது. மொழியை விழி என்பார்கள். அத்தகைய மொழியையே குருடாக்கியிருக்கும் இவர்களை என்னவென்று சொல்ல?

யாருக்கும் அக்கறை இல்லை.  பல முறை இதனைச் சரிசெய்து தமிழில் தகவல் வழங்குங்கள் என 'தமிழ் லென்ஸ்' வலியுறுத்தியும், இவர்கள் திருந்திய பாடில்லை.

அரசியல் ஆட்சி மாற்றத்திற்கு முன் தமிழ் ஊடக ஆசிரியர்களுடனான சிறப்புச் சந்திப்பிலும், இதனைச் சரிசெய்யுங்கள் என்று  நிர்வாகியிடம்  நேர்ப்பட முன் வைத்தும் திருந்திய பாடில்லை. இந்தியர்களுக்கான திட்ட  அகப்பக்கத்தில் தகவல்களைத்  தமிழில் வழங்க அப்படி என்ன கஷ்டம்?

சரி, இப்போது ஆட்சி மாற்றம் வந்துவிட்டது.  ஒரு பிரதான இந்திய கட்சியின் மேற்பார்வையில் மித்ரா செயல்படுகிறது.

அவர்களாவது இதைச் சரிசெய்வார்கள்  என்று பார்த்தால், அதே கோலத்தில்தான் இருக்கிறது.

ஒருவேளை அந்த அகப்பக்கத்தை அவர்கள் பார்வையிடவில்லை என்றால்,  இனியாவது அதைச் சரிசெய்ய முயற்சிக்கலாம்.

நமக்கே நம் மொழியை வளர்க்க ஆர்வம் இல்லாவிடில், மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பயன்?

'இங்கே தமிழை வையுங்கள்; இதில் தமிழை வையுங்கள்'  என்று சொல்வதில் மட்டும் நியாயம் இல்லை. முதலில் இந்தியர்களை உருமாற்றத் துடிக்கும் மித்ராவில் தமிழை வாழ வையுங்கள்!

0 Comments

leave a reply