loader
காட்சிப் பொருளாகவும் பகடைக்காயாகவும் இந்தியர்கள் - எம்ஏபி உதவித் தலைவர் மோகன் எல்லப்பன் எச்சரிக்கை!

காட்சிப் பொருளாகவும் பகடைக்காயாகவும் இந்தியர்கள் - எம்ஏபி உதவித் தலைவர் மோகன் எல்லப்பன் எச்சரிக்கை!

ஜோகூர்பாரு, ஆக.26:

மக்கள் தொகை அடிப்படையில் தங்களின் அரசியல் உரிமைகள் நீர்த்து வருவதை இந்திய சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். யூத மக்களைப் போன்ற எத்தனையோ சிறுபான்மை சமுதாயத்தினர் இந்த உலகில் பொருளாதார வலிமையுடன் விளங்குவதைப் போல நாம் இல்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தேசிய உதவித் தலைவரும், ஜோகூர் மாநில ஹிண்ட்ராஃப் தலைவருமான மோகன் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இன அரசியலும் மதப்போக்கும் மேலோங்கியுள்ளன. அரசியல் கட்சிகளிடையே இனம் மற்றும் சமயப் பார்வை மேலோங்கி இருப்பதை அண்மைக் காலமாக காணமுடிகிறது. விடுதலை அடைவதற்கு முன் பன்முகத்தன்மையுடன் விளங்கிய மலேசியாவில் 14-வது பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின், அம்னோ தனது அரசியல் ஆதாயத்திற்காக குறுகிய மனப்பான்மை உணர்வுகளை ஏகமாகத் தூண்டிவருகிறது.

மக்கள் கூட்டணியில் இணைந்து பிகேஆர், ஜசெக பொன்ற பல இனக் கட்சிகளுடன் ஒரு காலக்கட்டத்தில் நெருக்கமாக செயல்பட்ட பாஸ் கட்சியின் போக்கு தற்பொழுது முற்றிலும் மாறிவிட்டது.

தங்களின் சொந்தச் சமூகத்திற்கு எவ்வாறு உதவுவது என்பதில் தெளிவும் திண்மையும் இல்லாத இந்தியர்கள், இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளில் ஒரு காட்சிப் பொருளாகவும், பகடைக்காய்களாகவும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதன் விளைவாக, சமூகத்தில் ஒரு தவறான நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இந்த வகையில் மஇகா முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்று மோகன் குறிப்பிட்டுள்ளார்.

மஇகா-வின் இத்தகைய நடவடிக்கையால், இந்தியர்கள் முடங்கிவிட்டனர். எனவே, மஇகா-வை அடியோடு புறக்கணிக்க வேண்டிய தருணமிது. பாஸ், தன்னை ஒரு பல இனக் கட்சியாக காட்டிக்கொள்வதற்காக பலவீனமான, துப்பு துலங்காத இந்தியர்களை இணைத்துக் கொள்வதும் அவர்களைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதும் துரதிர்ஷ்டமானது. ஒரு குறிப்பிட்ட இனத்திற்காகவே இயங்கும் பாரம்பரியத்தைக் கொண்ட இத்தகைய கட்சிகள், அண்மைக் காலத்தில் இந்தியர்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

அத்துடன், பாஸ் கட்சி நமக்காக குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் இத்தகையோரிடம் விதைத்து வருகிறது. இந்தக் கட்சிகளின் அரசியல் தந்திரத்தை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மோகன் மேலும் கேட்டுக் கொண்டார்.

இன்றைய சூழலில் நமக்கு தொலைநோக்குப் பார்வையுடைய தலைவர்கள்தான் தேவை. நாளைய சவாலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இந்தியச் சமுதாயத்தைத் தயார்ப்படுத்தும் அத்தகைய தலைவர்களைக் கொண்டு மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி)-யை ஹிண்ட்ராஃப் தலைவர்கள் உருவாக்கி உள்ளனர்.

நமக்குரிய அரசியல் உரிமைகளில், குறுகிய மாற்றத்திற்கு நாம் ஆட்பட்டுவிடக்கூடாது. நம்பிக்கையும் ஆற்றலும் மிக்க கட்சியே உங்களின் உரிமையை நிலைநாட்டும். நலிந்த இந்தியர்களின் எதிர்காலத் திட்டத்தைக் கொண்டுள்ள எம்ஏபி-தான் அத்தகைய கட்சி என்று எ. மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News