loader
இந்திய சமுதாயம் என்னைக் கைவிட்டாலும் நான் அவர்களைக் கைவிடமாட்டேன்!  - நஜீப்

இந்திய சமுதாயம் என்னைக் கைவிட்டாலும் நான் அவர்களைக் கைவிடமாட்டேன்! - நஜீப்

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை-18

நான் பிரதமர் பதவி பொறுப்பேற்றதில் இருந்து இந்திய சமுதாயத்தின் மீது கூடுதல் அக்கறை செலுத்தியதோடு, பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

மக்கள் சக்தி ஏற்பாட்டில் 'மக்கள் சக்தி பொறுப்பாளர்களுடன்  நஜீப்' எனும் நிகழ்ச்சி, இன்று  பூச்சோங் ஜி.வி நாயர் உணவகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இந்நிகழ்ச்சியில் டத்தோ ஸ்ரீ நஜீப், மக்கள் சக்தி தலைவர் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் மற்றும் தொழில் அதிபர் டத்தோ ஸ்ரீ ஜி.வி நாயர் உட்பட, மக்கள் சக்தி பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய டத்தோ ஸ்ரீ நஜீப்,  "நான் பிரதமராக இருந்த காலகட்டத்திலும்,  எனது கசப்பான காலகட்டத்திலும் மக்கள் சக்தி கட்சியும், டத்தோ ஸ்ரீ தனேந்திரனும் எனக்கு ஆதரவாகவும் பக்க பலமாகவும் இருந்துள்ளனர். இந்த ஆதரவு தொடரவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

"நான் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்  இந்திய சமுதாயத்தின் மீது கூடுதல் அக்கறை எடுத்தேன். என்னைப் போல்  இதற்கு முன்  எந்த ஒரு பிரதமரும்  இந்திய சமுதாயத்தின் மீது கூடுதல் அக்கறை செலுத்தியதாக வரலாறு இல்லை. எனது 'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும் நான் பிரதமராக இருக்க ஆசைப்பட்டேன்; அதன்படி செயல்பட்டேன். 

பல வகையில் பின் தங்கி இருந்த இந்திய சமுதாயத்தை உருமாற்ற,  என் அமைச்சின் கீழ் சிறப்பு செயலைவை அமைத்து, அதன் வழி கல்வி, பொருளாதாரம், சமயம்  தொழில் என்று இந்திய சமுதாயத்திற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கிப் பல திட்டங்களை வகுத்துச்  செயல்படுத்தினேன்.

பக்காத்தான் ஹராப்பானின் பொய்யான பல குற்றச்சாட்டுகள் மக்கள்  மனதில் விஷமாகப் புகுத்தப்பட்டு, என் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்தியது.  கடந்த பொதுத்தேர்தலில்  தேசிய முன்னணிக்கு இந்திய சமுதாயம் அளித்த வாக்குகள் திருப்திகரமாக அமையவில்லை  என்பது வருத்தம்தான்.

என்னை இந்திய சமுதாயம் கைவிட்டாலும்  நான் இந்திய சமுதாயத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன்" என டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்தார்.

"பக்காத்தான் ஆட்சியில் நான் இந்திய சமுதாயத்திற்காக செய்து வைத்த செயல்திட்டங்கள் தொடராத பட்சத்தில், மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிந்துவிட்டது. மக்கள் இப்போது பக்குவம் அடைந்து புரிந்துகொண்டனர். இந்திய சமுதாயம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மலேசியர்களும் அதைப் புரிந்துகொண்டனர்.

கேமரன்மலை வெற்றி இந்திய சமுதாயம் பக்காத்தானுக்கு கொடுத்த முதல் எச்சரிக்கை. அதற்கு பின் தொடர்ச்சியாக 6 இடைத்தேர்தலில்  மலேசிய மக்கள் தேசிய முன்னணியைத் தேர்வு செய்தனர். பொய் என்றும் நிலைக்காது. அதுபோல் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அமைக்கப்பட்ட அரசும் நிலைக்கவில்லை. இதுதான் நியதி. 

இன்றைய அரசியல் சூழலில், எப்போது வேண்டுமானாலும்  பொதுத்தேர்தல் வரலாம். பொதுத்தேர்தலைச் சந்திக்க தேசிய முன்னணி தயார்நிலையில்தான் உள்ளது. காரணம் எந்த அரசு  மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்தது என்பதனை இந்த ஒரு ஆட்சி மாற்றத்தில் மக்கள் புரிந்துகொண்டனர். 

தேர்தலைப் பொறுத்தவரை இந்திய சமுதாயத்தின் வாக்குகள், யார் வெற்றியாளர் என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான  வாக்குகளாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய சமுதாயத்தைக் கவர ம.இ.கா, மக்கள் சக்தி போன்ற கட்சிகள் அயராது பாடுபடவேண்டும்.

தற்போது நடக்கவிருக்கும்  சிலிம் இடைத்தேர்தலில் இந்திய சமுதாயத்தின் வாக்குகள் முக்கியம். தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய  மக்கள் சக்தி கட்சி சிலிம் சட்டமன்றத்தில்  திவிரமாகச் செயல்படவேண்டும்" இவ்வாறு டத்தோ ஸ்ரீ நஜீப் உரையாற்றினார்!

0 Comments

leave a reply

Recent News