loader
மலேசிய மக்கள் உயரிய குணங்களைக் கொண்டவர்கள்! - பிரதமர்

மலேசிய மக்கள் உயரிய குணங்களைக் கொண்டவர்கள்! - பிரதமர்

ருக்குன் நெகாரா எனப்படும் தேசியக் கோட்பாட்டில் நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் எனும் கூற்றை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மட்டுமின்றி, தங்களின் அன்றாட பழக்க வழக்கத்திலும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டார்.

மலேசிய மக்கள் பண்பட்ட மற்றும் தன்னிறைவு பெற்ற சமூகம் மட்டுமின்றி மரியாதை, நன்னடத்தை, பரிவு போன்ற உயரிய குணங்களைக் கொண்டவர்கள் என்று நேற்று வியாழக்கிழமை, புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில், தேசிய கோட்பாட்டின் 50-வது நிறைவாண்டின் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த உரையாற்றியபோது பிரதமர் கூறினார்.

கடந்த 1969-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பிறகு, மக்களிடையே நெருக்கமான ஒற்றுமையை உருவாக்குவதற்கு, 1970-ஆம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, நான்காவது மாட்சிமை தங்கிய மாமன்னர், அல்மாஹ்ரும் துவாங்கு இஸ்மாயில் நசிருடின் ஷா இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் ஸைனால் அபிடின் தேசியக் கோட்பாட்டை அறிமுகம் செய்தார்.

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல், சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல், நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் என்பது நமது தேசிய கோட்பாடுகளாகும்.

இன, மத பேதமின்றி, நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மலேசியர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து தங்களின் அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு இந்தக் கோட்பாடுகளே, அவர்களுக்கு ஆழமான அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தேசியக் கோட்பாட்டில் உள்ள அனைத்து கூறுகளும் மக்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்த வலியுறுத்துவதோடு சுபிட்சத்தோடு வாழ்வதற்கும் அறிவுறுத்துகிறது.

இதனிடையே, ஐம்பதாவது நிறைவாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய கோட்பாட்டை வாசித்தவர்களில் சமையல் கலையின் மூலம்  யூடியுபில் பிரபலமான சுகுபவித்ராவும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News