loader
கொரோனா தாக்கம்: பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள இணைய வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்! - பொன். வேதமூர்த்தி

கொரோனா தாக்கம்: பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள இணைய வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்! - பொன். வேதமூர்த்தி

கோலாலம்பூர், மே 1:

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!

நாட்டில் நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையும் அதன் விளைவாக கடந்த ஆறு வாரங்களாக வீட்டில் முடங்கி இருக்கும் சூழலும் மக்களுக்கு பலவகையான பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

வர்த்தக நடவடிக்கை யாவும் தடைபட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள், குறிப்பாக அன்றாட ஊதியம் பெறும் தரப்பினரின் வருமான வாய்ப்பு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது என்று செனட்டர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் என்னும் முறையில் இந்தியர் சமூகபொருளாதார மேம்பாட்டுப் பிரிவான மித்ரா-விற்கு பொறுப்பு வகித்த காலத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தொழில்கல்வி பயிற்சியையும் நான்காவது தொழில் புரட்சியை எதிர்கொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், இணைய வர்த்தகம் சார்ந்த பயிற்சியையும் அளிப்பதில் தொடர் கவனம் செலுத்தினேன்.

எதிர்கால தலைமுறையினரின் வருமான வாய்ப்பாக அமையக்கூடிய இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் முனைப்பு காட்டும்படி இளைஞர்கள் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனர். குறிப்பாக பெண்களுக்கும் தனித்து வாழும் தாய்மாருக்கும் நாடு எதிர்கொண்டுள்ள நான்காவது தொழில் புரட்சி தொடர்பான டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் இணைய வர்த்தகம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

உலக அளவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 தொற்றுக்கிருமி, நமக்கெல்லாம் ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. இணைய வர்த்தகம் பெருமளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. நாமும், இணைய வர்த்தகத்தில் பரிச்சயமும் பயிற்சியும் பெற்றிருந்தால், அதன்வழி வருமானத்திற்கான வாய்ப்பைப் பெற முடியும். எனவே, காலம் அறிந்து மொபைல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆற்றலை துணை கொண்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் அது வருமானத்திற்கான வாய்ப்பாக அமையும்.

இப்பொழுதுகூட காலம் கடந்துவிடவில்லை. வயது அல்லது ஆணா, பெண்ணா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல; ஆர்வமும் அக்கறையும் கொண்டு நவீன சூழலுக்கு ஏற்ப நம்மை தயார்ப்படுத்திக் கொள்வதுதான் முக்கியம் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி)-யின் தேசியத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News