loader
கொரோனாவின் கோரமுகத்தை இனிதான் சந்திக்க இருக்கிறோம்! - உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவின் கோரமுகத்தை இனிதான் சந்திக்க இருக்கிறோம்! - உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் எச்சரித்து வந்தது. இதைப் பெருந்தொற்று என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனம் அனைத்து உலக நாடுகளும் இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும் என அழைப்பும் விடுத்தது.

அமெரிக்காவில் கொரோனா தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்தார். `அமெரிக்காதான் உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக அளவில் நிதி வழங்குகிறது. ஆனால், அவர்களுக்கு யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரியவில்லை. WHO, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம்’ எழுவதாக தெரிவித்த ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வந்த நிதியையும் நிறுத்த உத்தரவிட்டார். இதற்கு அமெரிக்காவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

உலக சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை முழுமையாக மறுத்தது. சீனாவில் முதல் முதலாக இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டதால் அவர்களிடம் விவரங்கள் பெற இணைந்து செயல்படுகிறோம். மற்றபடி எங்களுக்கு எல்லா உறுப்பினர் நாடுகளும் ஒன்றுதான். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல் இணைந்து செயலாற்ற வேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போதுவரை கொரோனாவால் கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஏற்படுத்திய மரணங்களின் எண்ணிக்கை 1.7 லட்சத்தைக் கடந்துவிட்டது. என்றாலும் கொரோனாவின் மோசமான முகத்தை இன்னும் நாம் பார்க்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ், ``நாம் ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸைத் தடுத்தாக வேண்டும். பொதுமக்களில் பலர் இன்னும் இந்த வைரஸின் வீரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை. கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், மோசமான விளைவுகளை இனிதான் நாம் சந்திக்க இருக்கிறோம்” என எச்சரித்தார். எனினும் அதற்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை.
 

சில நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக கொண்டுவந்த லாக் டெளன் கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என முன்னரே உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. அப்படி நேர்ந்தால், ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் மோசமான சுகாதாரம் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கும் என அஞ்சப்படுகிறது. அதைக் குறிப்பிட்டு தான் உலக சுகாதார நிறுவனம் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது!

0 Comments

leave a reply

Recent News