loader

All News

கிள்ளான், அக்.15-

இந்திய வர்த்தகர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு COLOURS OF INDIA நிறுவனம் முக்கியப் பங்காற்றி வரும் நிலையில் 

சந்தையில் 25 ஆண்டுகள் வெற்றிநடை போடும் GYMNEMA HERBAL TEA, LITNA பொருட்களை வெளியிடும் BIGCORP-A BERHAD நிறுவனம் Colors of India நிறுவனத்தின் தீபாவளி சந்தையில் தங்கள் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு GYMNEMA HERBAL TEAயை அருந்துங்கள் எனும் தொலைக்காட்சி விளம்பரத்தை மக்கள் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மக்கள் நலத்தில் அக்கறை கொண்டு பாரம்பரிய பொருட்களை வெளியிட்டு வந்த ஒரு பிரபல நிறுவனமாக BIGCORP-A BERHAD நிறுவனம் இன்றளவும் திகழ்ந்து வரும் நிலையில் 25 ஆண்டுகள் வெற்றிநடை போட்டு தனது நிறைவு விழாவையும் கொண்டாடியதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன் தெரிவித்தார்.

BIGCORP-A BERHAD நிறுவனத்தை கடந்த 1993இல் டத்தோ விஜய் தொடங்கியதோடு 1995இல் முதல் முறையாக GYMNEMA HERBAL TEAயை சந்தையில் அறிமுகப்படுத்தினார்.

GYMNEMA HERBAL TEA மூலம் தொடங்கிய BIGCORP-A BERHAD வர்த்க பயணம் தற்போது LITNA எனும் பெயரில் உருவெடுத்து 25 ஆண்டுகள் வெற்றிப் பயணத்தை கொண்டாடிய நிலையில் BIGCORP-A BERHAD நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் Litna D Gold முகக்கிரிமை வெளியிடவிருப்பதாக colors of India தீபாவளி சந்தை நிகழ்ச்சியில் உரையாற்றிய   தேவேந்திரன் விஜயன் கூறினார்.

BIGCORP-A BERHAD நிறுவனம் 25 ஆண்டு பயணத்தில் சந்தையில் சுமார் 5 பொருட்களை வெளியீடு செய்துள்ளது. இதில் GYMNEMA HERBAL TEA முதல் மூலிகை பானமாக அறிமுகம் கண்டது. இந்த GYMNEMA HERBAL TEA பானம் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்ல அருமூலிகை எனலாம். அதன்பிறகு LITNA பற்பசை வெளிவந்தது. இது மட்டுமன்றி PAPAYA SHOP சவர்காரம், முகக்கிரிம் உள்ளிட்ட பொருட்களும் வெளியீடு கண்டது. 

கிள்ளான் AEON BUKIT RAJA விற்பனை மையத்தில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி COLORS OF INDIA நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி சந்தை  நிகழ்வில் தாங்கள் 25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியதோடு LITNA பொருட்களையும் விற்பனை செய்ததாக தேவேந்திரன் சொன்னார்.

Litna நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு ஆய்வுக்கு பின்னர் இந்த Litna D Gold முகக்கிரிம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் இது வெளியீடு காணும் என்றும் கலைஞர்  தினேஷ் கூறினார்.

மலேசிய இந்திய வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கத்தில் COLOURS OF INDIA நிறுவனம் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் அண்மையில் கிள்ளான் புக்கிட் ராஜாவில் உள்ள AEON விற்பனை மையத்தில் COLOURS OF INDIA தீபாவளி சந்தையை நடத்தியது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் மட்டுமன்றி பிற இன பொதுமக்களும் பங்கேற்றதாக செய்தியாளர் சந்திப்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சத்திய குமரன் விஜயகுமரன் கூறியுள்ளார்.

இந்த தீபாவளி சந்தை நிகழ்வில் ம.இ.காவின் டத்தோ ராமலிங்கம், KARYAWAN தலைவர் பெர்டி பெர்னாண்டஸ், ராகா கோகுல், உதய, கலைஞர் இயக்குநர், தயாரிப்பாளர் தினேஷ், அவரது துணைவியார் இயக்குநர், தயாரிப்பாளர் விமலா பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாங், ஆக.4-
மலேசியாவில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவுகளை வழங்கி வந்த A2BI BISTRO உணவகம் தனது இரண்டாவது கிளையை தற்பொழுது சுபாங் வட்டாரத்தில் திறந்து உள்ளது.

இந்த புதிய கிளையின் திறப்பு விழா நேற்று பிற்பகல் 12 மணி அளவில் பண்டார் பிங்கிரான் சுபாங் எனும் இடத்தில் நடைபெற்றது. சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ  ரமணனின் தலைமையில் இந்த புதிய உணவகம் திறப்பு விழா கண்டதைத் தொடர்ந்து அங்கு 1500 பேருக்கு இலவச உணவுகளும் வழங்கப்பட்டது.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட  இந்த உணவு வியாபாரத்தை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தனது முதல் உணவகத்தை ஆரம்பித்து தற்போது இரண்டாவது கிளையையும் திறந்து விட்டதாக அதன் உரிமையாளர் சுரேஷ் கலியபெருமாள் தெரிவித்தார்.

தனது சக நண்பராகிய வெங்கடசாமி உடன் இணைந்து முதல் முதலில் மோட்டார் சைக்கிளின் மூலம் இந்திய பாரம்பரிய பலகாரங்களை விற்பனை செய்து வந்ததாகவும், அந்த வியாபாரத்தை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் முறையாக ஓர் உணவகத்தை திறந்ததாகவும் அவர் கூறினார்.

அதன்பின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உணவை வழங்க வேண்டும் என்ற முயற்சியில் தங்களின் முதல் உணவகத்தை மிகச் சிறப்பாக நடத்தி தற்போது மற்றொரு கிளையையும் திறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மலேசியாவில் உள்ள அனைத்து இன மக்களும் விரும்பி உண்ணக்கூடிய அனைத்து வகையான உணவுகளும் தனது உணவகத்தில் தயார் செய்து தரப்படும். அதுமட்டுமின்றி ஆரம்ப காலத்தில் தான் வியாபாரம் செய்த இந்திய பாரம்பரிய பலகாரங்களை அதே சுவையில் தனது உணவகத்தில் தயார் செய்து விற்பனை செய்வதாக அவர் தெரிவித்தார்.

A2BI BISTRO உணவகத்தில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு ஹைதராபாத் பிரியாணி மற்றும்  இடியப்பத்தை இந்த புதிய உணவகத்திலும் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம்.  

மேலும் தென்னிந்திய மற்றும் வட இந்திய பாரம்பரிய பலகாரங்களும் எங்களின் உணவகத்தில் கிடைக்கும். மேலும் உணவகம் மட்டுமின்றி கேட்டரிங் சர்வீசும்  எங்களிடம் உண்டு.

இதனை தொடர்ந்து தனது உணவகத்தின் 3 ஆவது கிளையை  சைபர் ஜெயாவில்  திறப்பதற்கு தற்பொழுது திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 3-
பிரிக்பீல்ட்ஸ் டிஎல்கே காம்பிலக்சில் இந்தியர் ஒருவரின் முயற்சியில் சீனர்களின் பிரசித்திப் பெற்ற உணவுகளில் ஒன்றான சிக்கன் ராய்ஸ் உணவு விற்பனை செய்யப்படவுள்ளது.

பல மக்கள் வாழும் இந்நாட்டில் அனவருக்கும் பிடித்த உணவாக சிக்கன் ராய்ஸ் உள்ளது. அந்த வகையில் அந்த உணவை விற்பனை செய்வதற்காக பிரிக்பீல்ட்ஸ்சில் கே.எஸ்.சிக்கன் ராய்ஸ் உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் காளிச்சரண் தெரிவித்தார்.

காலை 9.30 முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படவுள்ள இந்த உணவகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு கழிவு வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி உள்நாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு சிக்கன் ராய்ஸ் ஆடர் வழங்கப்பட்டால் அதற்கும் சிறப்பு கழிவு விலை வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் இந்த உணவகத்தை இன்று காலையில் திறந்து வைத்து பேசிய கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் செயலவை உறுப்பினர் கவிமாறன், சிறுத்தொழில் ஈடுபடும் இந்தியர்களை நாம் வரவேற்பதுடன் அவர்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.

பிரிக்பீல்ட்ஸ் திஎல்கே உணவு மையத்தில் இந்தியர்களின் கடைகள் அதிகம் உண்டு. அதில் நமது பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய மாற்றமாக சிக்கன் ராய்ஸ் உணவும் விற்பனை செய்யப்படவுள்ளது. இது இங்கு வரும் வாடிக்கையாளர்களை கவரும் என அவர் சொன்னார்.

சீனர்களின் இந்த உணவை மலாய்க்காரர்களும் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியரும் இந்த உணவை தயாரித்து விற்பனை செய்ய முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது என கவிமாறன் தெரிவித்தார்.

ஆகையால் பிரிக்பீல்ட்ஸ் திஎல்கே காம்பிலக்ஸில் திறக்கப்பட்டுள்ள கே.எஸ்.சிக்கன் ராய்ஸ் உணவகத்திற்கு மக்கள் ஆதரவை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

கோலாலம்பூர் மார்ச் 22-

Covid-19 காலகட்டத்தில் வியாபாரத்தில் பின்னடைவை அடைந்த சிறு -நடுத்தர இந்திய வியாபாரிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் தங்களது வியாபாரத்தை பழைய நிலைமைக்குக் கொண்டு வர முஹாமலாட் வங்கியின் வாயிலாக கடனுதவி பெற்று தரும் முயற்சியில் மைக்கி  எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக இன்று மைக்கி அலுவலகத்தில் பேங்க் முஹாமலாட் அதிகாரிகளை  தொழில் முனைவர்கள் சந்திக்கும் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

 இதில் சிறு நடுத்தர வியாபாரம் செய்யும் இந்திய தொழில் முனைவர்கள் சுமார் 67 பேர் கலந்துகொண்டு வங்கியில் இருக்கும் வாய்ப்புகள், ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளைக் கேட்டறிந்தனர்.

முதல் கட்டமாக நடத்தப்படும் இந்த சந்திப்பில் இந்த 67 பேரில் வங்கி கடன் எடுக்க விரும்புவோருக்கு மைக்கி வழிகாட்டி, கடனை பெற உறுதுணையாக இருக்கும் என மைக்கியின் தலைவர் டத்தோ  ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனிடையே மைக்கியின் உதவி தலைவரான திருநாவுக்கரசு பேசுகையில் எதிர்வரும் மே மாதம் மைக்கியும் பேங்க் முஹாமலாட்  வங்கியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்ததைச் செய்யப் போவதாகவும் அதன் வழி மாநில ரீதியில் இந்த கடனுதவி திட்டத்தை  இந்திய தொழில் முனைவர்களுக்கு  கொண்டுச் சேர்த்து பயன் அளிக்கும் விதமாக  மைக்கி இது போன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார். இன்று கூட சிலாங்கூர், மலாக்கா, நெகரி செம்பிலான், பினாங்கு, சரவாக் போன்ற மாநிலங்களில் இருந்து  வியாபாரிகள் வந்ததாக அவர் குறிப்பிட்டார் .

இந்தச் சந்திப்பு கூட்டத்தில் வங்கி தரப்பில் இருந்து தொழில்துறைக்கான தலைமை நிர்வாகி டத்தோ  நசீர் மற்றும்  பேங் முஹாமலாட் வங்கியின் கிளைகளுக்கான உதவித் தலைவர் குலா அவர்களும் இன்னும் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம் மார்ச்-22

ஆசியாவில் தீம் பார்க்கின் மையமாக மலேசியா உருவாகும் என்று மாட்ஃபாவின் தலைவர் டான்ஸ்ரீ ரிச்சர்ட்  கோ கூறினார்.

ஃபன்பேர் தொடங்கி இன்று பல பில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் துறையாக இந்த தீம் பார்க்  துறை விளங்கி வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

தரமாகவும் ,நவீனத்துவத்துடனும், பாதுக்கப்பு மற்றும்  நியாயமான கட்டணங்களுடன் இந்த தீம் பார்க்குகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலை நீடிக்கும் வகையில் ஆசியாவிலேயே தீம் பார்க்கின் மையமாக மலேசியா விளங்கும். அதோடு தீம் பார்க் துறையை மேம்படுத்த இந்தோனேசிய  தீம் பார்க் துறை  நம் உதவியை நாடுவது, இதில் மலேசிய நிபுணத்துவம் பெற்றுள்ளது என்பதை காட்டுவதாக ரிச்சர்ட் தெரிவித்தார்.

இந்நிலையில்  நாட்டில் உள்ள டீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தான் மாட்ஃபா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த அமைப்பின் முயற்சியில்  மாட்ஃபா கோல்டன் ஹோர்ஸ் விருது விழா   மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது.

இவ்விழா வரும் ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கெந்திங்மலை ஃபேர்ஸ்வேல்டு தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.

நாட்டில் உள்ள  தீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில்  கிட்டத்தட்ட 15   பிரிவுகளில்  40  விருதுகளை வழங்கவுள்ளதாக டான் ஸ்ரீ ரிச்சர்ட் தெரிவித்தார்.

இந்த விருதுகளுக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். நடுவர் குழுவின் முடிவுக்கு பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் என்று டான்ஸ்ரீ ரிச்சர்ட் கோ தெளிவுபடுத்தினார்.

இந்த விருது விழாவின் அறிமுக நிகழ்வில் மாட்ஃபாவின் ஆலோசகர் டத்தோ டாக்டர் குமரராஜா கலந்து கொண்டார். இவ்வியகத்திற்கு டாக்டர் குமாரராஜா ஆலோசகராக இருப்பது மாட்ஃபா  இயக்கத்தின் பெரும் சக்தியாக இருப்பதாக டான் ஸ்ரீ 
ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர்  மார்ச் 30 : நாட்டின் மொத்த பணவீக்கம் 5.0 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 2020 காலாண்டில் எரிபொருள் விலை குறைந்ததன் அடிப்படையில் பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ நோர் சம்சியா முஹமட் யுனூஸ் தெரிவித்திருக்கிறார்

2021-ஆம் ஆண்டில் சராசரியாக இந்த விகிதம்  2.5 முதல் 4.0 விழுக்காடு வரையில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ நோர் சம்சியா குறிப்பிட்டார்.

கொரோனாவினால் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட போது, 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த பணவீக்கம் 1.2 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது.

கடந்த ஆண்டில் ஒரு வெள்ளி 37  காசாக இருந்த எரிபொருள் விலை இவ்வாண்டில் ஒரு வெள்ளி 95 காசாகப் பதிவாகியிருந்தது. இந்த அதிகரிப்பு தற்காலிகமானது என்றும் டத்தோ நோர் சம்சியா தெரிவித்தார்!

 

 

ஆர். பார்த்திபன்

கோலாலம்பூர் நவம்பர் -27

இந்திய வணிகர்கள் தங்களது வியாபாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கு, ஹலால் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என, மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நம் நாட்டில் மட்டும் அல்லாமல், பிறநாடுகளிலும் தொழிலை விரிவுபடுத்த ஹலால் அங்கீகாரம் உதவி புரியும். இதனை  இந்திய வணிகர்கள்  பெறுவது அவசியமான ஒன்று என அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், இந்திய வணிகர்களுக்கு இலவச வழிகாட்டுதலோடு, ஹலால் அங்கீகாரம் பெறுவதற்கான ஹைப்பர் எனும் பயிற்சியை, ஹலால் மேம்பாட்டு நிறுவனம் வழங்கவிருக்கிறது.

இதில்  இந்திய வணிகர்கள் 200 பேருக்கு  வாய்ப்பு வழங்கப்படும் என்றும், பங்கேற்கும் வணிகர்கள் ஹலால் அங்கீகாரம் பெறுவதோடு, அடுத்தக்கட்டமாக தொழிலை எப்படி வழிநடத்துவது என்பது குறித்து அவர்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கப்படவிருப்பதாக டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹலால் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவித் தலைவர் ஹைனுன் அஸ்மான் மற்றும் ஹைப்பர் பயிற்சியின் நிர்வாகி சுக்கோர் ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, டத்தோ கோபாலகிருஷ்ணன் இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில், ஹலால் மேம்பாட்டு நிறுவனத்துடன் மைக்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்திய வணிகர்கள் ஹலால் அங்கீகாரம் பெறுவதற்குத் துணை புரியும். என்று அவர் கூறினார்.

இதன்மூலம் இந்திய தொழில்முனைவர்களின் தொழில் விருத்தி அடைவதோடு,  இந்திய வர்த்தகச் சமுதாயத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், இந்திய வணிகர்கள் பயன்படுத்திகொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தினார்!

தொடர்புக்கு: 0174745509

கோலாலம்பூர் ஜுலை- 5

(வெற்றி விக்டர்)

உலகத் தமிழர்களை வர்த்தக ரீதியில் ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் முயற்சியை உலகளாவிய நிலையில் ரய்ஸ் அமைப்பு செய்து வருகிறது.

இந்நிலையில் மலேசியா ரய்ஸ் அமைப்பு மலேசியாவில் உள்ள வர்த்தகர்களை  ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ஒரு தளமாகச் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று தலைநகர்  அர்மாடா தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட ரய்ஸ் மாநாட்டில், 102 உள்நாட்டு சிறு வர்த்தகர்களும், 200 வெளிநாட்டு வர்த்தகர்களு 'ஸூம்' எனப்படும்  இணைய தொழில்நுட்பம் வழி கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் ரய்ஸ் மலேசியா தலைவர் சரவணன், மைக்கியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா, எச்.ஆர் .டி. எஃப் தலைமை வாரிய இயக்குனர் டத்தோ நெல்சன்,  எச்.ஆர்.டி.எஃப் முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ விக்னேஸ்வரன், சமூகப் பேச்சாளர் பாண்டித்துரை ஆகியோர் உரையாற்றினர்.

இம்மாநாட்டை தமிழ் வணிகர்கள் ஜீரோவாகப் பார்க்கவேண்டும். வணிக உலகில் (0) ஜீரோவுக்கு அதிக மவுசு உண்டு. காரணம் எந்தளவிற்கு வருமானத்தில் ஜீரோ அதிகரிக்கிறதோ, அந்தளவிற்கு  வணிகத்துறை மேம்பாடு அடையும். அந்த வகையில் பலதரப்பட்ட வர்த்தக வாய்ப்புகளைத் தமிழ் வணிகர்களுக்கு உருவாக்கும் பொருட்டு, ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ள ரய்ஸ் மாநாட்டை, ஜீரோவாக மலேசியத் தமிழ் வர்த்தகச் சமூகம் பார்க்க வேண்டும். இதன் மூல வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வணிகத்தில் ஜீரோக்களை அதிகரிக்கச் செய்யலாம்.

இந்த கோவிட் 19 காலகட்டத்தில் இணையம் வழி வர்த்தகத்தைச் செய்யும் வழிமுறையில் தமிழ் வர்த்தகர்கள்  தீவீரப்படுத்தப்படவேண்டும். அதன் வழி அவர்களுடைய வணிகம் அடுத்த நிலைக்கு உருமாறும். அந்த வகையில் அரசாங்கமும் பல நல்ல திட்டங்களை வணிகர்களுக்கு வகுத்து வருகிறது. 

கோவிட் 19 மலேசியா கையாண்ட விதம், அதில் இருந்து மலேசியா மீண்டு வந்து மீண்டும் வணிகத்தை உயிர்ப்பித்த விதம் பல உலக வணிகர்களைக் கவர்ந்துள்ளது.

ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மலேசியா ஆசியாவின் வணிக மையத் தலமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக ரய்ஸ் மலேசியா தலைவர்  சரவணன் தெரிவித்தார்!

!

 

(வெற்றி விக்டர்- மோகன் ராமசாமி)

கோலாலம்பூர்  ஜனவரி-25

மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) ஏற்பாட்டில் மைக்கி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

இந்நிகழ்வில் சுமூகமாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடிய வர்த்தகர்கள், பிறகு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பொங்கி எழுந்தனர்.

இது குறித்து, மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறுகையில், அடிமட்ட அதிகாரிகள் முதல், அமைச்சர் வரை  சந்தித்து

மாநில ரீதியில் கலந்துரையாடல் நடத்தி   இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையை பிரச்னைகளை எடுத்துரைத்தோம். 

அதோடு பிரதமரிடமும்  சென்று மகஜர் வழங்கி விட்டோம் இன்னும் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றார். 

இந்த நாட்டில் உள்ள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாங்கள் எதிர்நோக்கும் பிரச்னை தெரியுமா தெரியாதா? இல்லை தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை என பிரபாகரன் முன்னிலையில் தெரிவித்தார். 

இந்த நாட்டில் இந்தியச் சமுதாயம் வர்த்தகத்தில் முன்னேற வேண்டும் என்று அரசியல்வாதிக்கள் கூறுவார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கை காட்டுவார்கள் என டத்தோ கோபால் தெரிவித்தார்.

நல்லவேளை மனிதவள அமைச்சர் குலசேகரன்  இத்துறையின் அமைச்சராக உள்ளார். அதனால், அவர் சில முயற்சிகளை எடுக்கிறார். மற்ற அமைச்சர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அமைச்சரவையில்  பேசுறாங்களா? இப்படி ஒரு பிரச்னை அவர்களுக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. அப்படி உள்ளது நிலைமை.

ஆகையால், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக  நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனிடையே  வர்த்தகர்களுடன் கலந்துரையாடிய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பேசுகையில், உங்கள் பிரச்னை உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால், இந்த அரசு புதிய அரசு. பழைய அரசு செய்த தவறுகளை திருத்துவதற்குக் கால அவகாசம் வேண்டும். சில செயல்திட்டங்களைஅரசாங்கம் ஆய்வு செய்துவருகிறது என, பொதுவான அரசியல் கருத்தை வைத்தார்.

இதனையடுத்து, வர்த்தகர்கள் பொங்கி எழுந்தனர். குறிப்பாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் முத்துசாமி பேசுகையில், இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் புதுசு என்ற காரணத்தையே கேட்டுக்கொண்டிருப்பது? இந்த வார்த்தை எப்போது காலாவதி ஆகும் என்றார். எங்களுக்குக் காரணம் வேண்டாம். இந்தத் துறையை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள்? தீர்கமான   முடிவு தேவை.

இது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். எவ்வளவு நாள்கள் நாங்கள் பொறுமை காப்பது? அனைவரும் கடைகளை அடைத்துத் தெருவில் நிற்கிறோம். இந்த அரசு சாவகாசமாக ஆய்வு செய்து, முன்னாள் அரசாங்கத்தைக் குறைசொல்லி காலத்தை கடத்துகிறது என்றார்.

எவ்வளவுதான் முயற்சிகள்  எடுப்பது? ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிவைத்தது போல ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள். இந்த அரசு புதிய அரசு... கால அவகாசம் தேவை... என ஒரேபதிலை திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொல்வீர்கள்?

  இங்கு ஆட்சி மட்டும்தான்  புதுசு. முக்கியப் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் பழுத்த அரசியல்வாதிகள். அவர்கள் நினைத்தால், இந்தப் பிரச்னை தீரும். ஆனால், தீரவில்லை. ஏன் அந்தக் காரபம் தேவை என்றார் முத்துசாமி.

இதற்குப் பதிலளித்த பிரபாகரன் . நீங்கள் சொல்வது  நியாயம். ஆனால், இதற்கான பதில் என்னிடம் இல்லை. அதுவும் உங்களுக்குத் தெரியும் .

மைக்கி தலைவர்  சொன்னது போல் நிச்சயம் நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றார்.

மலேசிய இந்திய நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்தக் குழுவுடன் வர்த்தகர்களைச் சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்!

கோலாலம்பூர் நவம்பர்-22

மைக்கி எனப்படும் இந்திய வர்த்தகச் சம்மேளனத்தின் 68-வது போராளர் மாநாடு தலைநகர் சிட்டிடெல் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

நாடு தாளுவிய அளவில் இருந்து மைக்கி பேராளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

மாநாட்டில் உரையாற்றிய மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் பேசுகையில்,  மைக்கியின் உறுப்பிய சந்தாவை சற்றுக் குறைத்தால் புதிய வர்த்தகர்கள் அதிகமானோரை இவ்வியக்கத்திற்குள் இணைக்கலாம்  எனக் கூறினார். 

மேலும் மைக்கி பொதுச் செயலாளர் டத்தோ ஏ.டி குமாரராஜா அதிகமான இளைஞர்களைச் சங்கத்திற்குள் சேர்த்து வருகிறார்  என்று குறிப்பிட்டார்.

இளம் வர்த்தகர்களுக்கான பயிற்சியை வழங்க மித்ராவிடம் மைக்கி பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இதற்கான சிறப்பு நிதி மித்ராவிடம் இருந்து கிடைக்கும். அதோடு கார்னிவெல் என்ற பெயரில் இங்குச் சட்டவிரோதமாக வியாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகளுக்கு எதிராக வர்த்தகச் சங்கங்களுடன் மைக்கி இணைந்து,  தொடர்ந்து எதிர்க்கும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காத வரை ஓயமாட்டோம் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மைக்கிக்கு  என்று தலைநகரில் புதிய கட்டடம் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும்  இன்று நடைபெற்ற மாநாட்டில் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்!

கோலாலம்பூர் நவம்பர்-20

நிதி அமைச்சு  தேசிய வர்த்தக சம்மேளனம் (என்.சி.சி.ஐ.எம்), மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம் ஏற்பாட்டில், எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதி  தலைநகர் மெட்ரேட் மண்டபத்தில், மாலை 5 மணி முதல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

நிதி அமைச்சர் லிம் குவான் எங் தலைமையில்,  என்.சி.சி.ஐ.எம் தலைவர் டான் ஸ்ரீ தெர் மற்றும் மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன்  ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை அழைப்பதாக  மைக்கியின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார். 

அரசாங்க வர்த்தக அமைப்பின் அதிகாரிகள்,  மாநில வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின்  உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இந்தத் தீபாவளி நிகழ்வு, வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைய உள்ளது.  

ஆகையால், புதிய வர்த்தகர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ள மைக்கி அழைப்பதாக  டாக்டர் குமாரராஜா தெரிவித்தார்.

பல்வேறு சிறப்பு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தீபாவளி உபசரிப்பில், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு

 013-453 1761 என்ற எண்ணில் அழைக்கலாம்!

சென்னை, நவ.16- 

சென்னையில்  நடைபெற்ற மூன்றாம் அனைத்துலக தமிழ்த் தொழிலதிபர்கள்  மாநாட்டில் மலேசியர்கள் ஐவருக்குச் சாதனை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஒரு தனி மனிதனாக மருத்துவக் கல்லூரியை நிறுவியதோடு, உலக நாடுகளிலும் மருத்துவக் கல்லூரியை விரிவுபடுத்தியுள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் தோற்றுநர்  டான்ஸ்ரீ டத்தோ பாலனுக்கு, 'தமிழ் உலக கல்வித் தந்தை 'எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் வழி தவறிச் செல்லும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கைக்கு விடிவெள்ளியாக இருந்து வரும் 'மைஸ்கில்ஸ்' கல்லூரியை நிறுவிய இயக்குநர் வழக்கறிஞர் பசுபதிக்கு 'நம்பிக்கை சுடர்ஒளி' எனும் விருது வழங்கப்பட்டது.

மலேசியாவில் ஏற்றுமதி, இறக்குமதி துறையில்  முன்னோடி வர்த்தகராக இருந்து வரும் டத்தோஸ்ரீ ஆண்டிக்கு :முன்னோடி வர்த்தகர்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஒரு முன்னோடி பெண் வர்த்தகரான பவானி விஸ்வநாதனுக்கு 'பெண் சுடரொளி' எனும் விருது வழங்கப்பட்டது.

மலேசியாவில் தமிழ்த் துறையில் மிகவும் பிரபலமான பாண்டிதுரைக்கு 'தமிழ் உலக படைப்பாற்றல் மேதை' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

'எழுமின் தி ரைஸ்' எனும் அமைப்பு நடத்திய இந்த  மாநாடு, நவம்பர் 14 தொடங்கி 16 வரை சென்னை, நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் 35 நாடுகளைச் சேர்ந்த 1500 பேராளர்கள் பங்கேற்பில் மிகச் சிறப்பாக நடந்தேறியது!

(காளிதாஸ் சுப்ரமணியம்)

சென்னை, நவ.15-

மலேசிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை உலக அளவில் விரிவு படுத்துவதற்கு ஐ.டி எனும் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றி வருவதாக குளோசப் நிறுவன இயக்குநர் ஜீவன் முத்துப்பிள்ளை கூறினார்.

உலக நாடுகள் தகவல் தொழில்நுட்ப முறையில் பயணித்து கொண்டிருக்கிறது. எல்லாம் கணினிமயமாகி விட்டது. நாம் உலகத் தொடர்பை உள்ளங்கைக்கு கொண்டு வந்து விட்டோம். அந்த வகையில் நாம் நமது வர்த்தகத்தை உலகளவில் மேற்கொள்வதற்கு தகவல் தொழில்நுட்ப முறை முக்கியப் பங்காற்றி வருவதாக சென்னையில் தி ரைஸ் மாநாட்டில் கலந்து கொண்ட போது மலேசிய செய்தியாளர்களிடம் ஜீவன் அவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் ஒருவரின் வர்த்தகத்தை உலக அரங்கிற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறோம். அந்த வகையில் மலேசியாவில் பல நிறுவனங்களின் வர்த்தகத்தை உலக அரங்கில் பிரபலப்படுத்தியுள்ளதாக ஜீவன் சொன்னார்.

எங்கள் குளோசப் நிறுவனம் அரசாங்கத்திற்கும் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து வருகிறது. நான் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். அதேநேரத்தில் மலேசிய வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை தகவல் தொழில்நுட்பம் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்ல ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எழுமின் தி ரைஸ் அமைப்பு குறித்த தகவல்களை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பணியையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில் உலகத் தமிழர்களை வர்த்தகம் வழி ஒன்றிணைக்கும் ஒரு தளமாக தி ரைஸ் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் உலகத் தமிழ் வர்த்தகர்களுக்கு ஒரு பாலமாக இருந்து வருகிறது என்று ஜீவன் முத்துப்பிள்ளை பாராட்டினார்!

சென்னை நவ.15- 

உலகத் தமிழர்கள் மத்தியில் ஒரு வர்த்தக உறவை எழுமின் தி ரைஸ் மாநாடு அமைத்துள்ளதாக கிரீன் விஷன் ரிசோர்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ வி.எஸ். மோகன் கூறியுள்ளார்.

இந்த மூன்று நாள் மாநாடு மலேசிய வர்த்தகர்களுக்கு ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தத்தம் நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை மலேசிய வர்த்தகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் குறிப்பாக சீனா, இந்தியா, மியான்மார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன்வழி பல வர்த்தக வாய்ப்புகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக டத்தோ வி.எஸ். மோகன் தெரிவித்தார்.

உலக நாடுகளில் எத்தனையோ மாநாடுகள் நடத்தப்பட்டுள்ள வேளையில், எழுமின் தி ரைஸ் மாநாடு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. உலகத் தமிழர்களை வர்த்தகம் வழி ஒன்றிணைக்கும் ஒரு மாநாடு இதுவாகும்.

இதில் 35 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகத் தமிழர்கள் கலந்து கொண்டு உலக நாடுகளின் வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதற்கு வழி தேடிக் கொண்டுள்ளதாக  டத்தோ வி.எஸ்.மோகன் குறிப்பிட்டுள்ளார்!

(காளிதாஸ் சுப்ரமணியம்)

சென்னை, நவ.14-

எழுமின் தி ரைஸ் என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மாநாடு மலேசியப் பேராளர்களுக்குப் பயனாக அமையும் என்று, தி ரைஸ் மலேசிய கிளைத் தலைவர் சரவணன் சின்னப்பன் கூறியுள்ளார்.

மலேசியாவைப் பிரதிநித்து கலந்து கொண்டுள்ள 65 பேராளர்களுக்கு, குறிப்பாக இளம் தொழில் முனைவர்களுக்கு  பயனளிக்கும் என்று சென்னையில் மலேசிய செய்தியாளர்களிடம் சரவணன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று நவம்பர் 14 வியாழக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி,  நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் தி ரைஸ் மாநாடு தொடங்கியது.

இம்மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், மியான்மார், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், கத்தார், குவைத், பஹ்ரைன், இலங்கை மொரீசியஸ் உள்ளிட்ட 35-க்கும் மேலான உலக நாடுகளில் இருந்து தமிழ்த் தொழிலதிபர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து 65 பேராளர்கள், குறிப்பாக இளம் வர்த்தகர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்கள் பல்வேறு வர்த்தக வாய்ப்புகளை அமைத்துக் கொள்ள  தி ரைஸ் மாநாடு ஒரு தளமாக அமையும் என்றும் சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.

இந்த மாநாடு திறனாளிகளைச் சந்திக்கவும், தொழில்– வணிக உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக அமையும்.

எழுமின் அமைப்பு முதல் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டினை கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாநகரிலும், இரண்டாம் மாநாட்டினை மலேசியா கோலாலம்பூர், சைபர் ஜெயா பல்கலைக்கழகத்திலும் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது!

(வெற்றி விக்டர்- மகேன்)

 

கோலாலம்பூர் அக்டோபர்-23

நாட்டில் நடக்கும் சில கார்னிவெல்களில்  சுற்றுலா விசாவுடனும், புரொபெஷனல் விசிட் பாஸ்சுடனும் அந்நியத் தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வருவதாக  உள்நாட்டு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று மைக்கி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மைக்கி செயலாளர் டத்தோ  டாக்டர் ஏ.டி. குமாரராஜா, பிரிமாஸ் தலைவர் முத்துசாமி, மீதா செயலாளார் டத்தின் மகேஸ்வரி மற்றும் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர்  தற்போது புக்கிட் ஜாலிலில் நடக்கும் தீபாவளி கார்னிவெலில் அதிகமான அந்நிய வியாபாரிகள் வியாபாரம் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

உள்நாட்டு வியாபாரிகளை ஊக்குவிக்கவேண்டும் என மேடைக்கு மேடை பேசும் கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தகர் சங்கம் இந்த கார்னிவெலை ஆதரித்திருப்பது வருத்தமாக உள்ளது என பல வருடமாக அச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் முத்துசாமி, டத்தின் மகேஸ்வரி மற்றும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விளக்கம் கேட்டு அச்சங்கத்தின் தலைவருக்கு 

குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் வரவில்லை என முத்துசாமி மற்றும் டத்தின் மகேஸ்வரி தெரிவித்தனர்.  

அந்நிய வியாபாரிகளை ஊக்குவிப்பதுதான் அவர்களின் நோக்கமா? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே ஒரு முறை புகார் கொடுத்து மிட்வெலியில் நடந்த கார்னிவெலில்  அதிகாரிகள் சோதனையிட்டு சிலரைக் கைது செய்தனார். அதன் பின் இப்படிப்பட்ட கார்னிவெல் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன? பிரதமர், உள்துறை அமைச்சர், உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் அமைச்சர் என  அனைவரிடமும் மகஜர் வழங்கியுள்ளோம்.

இருப்பினும் இன்னமும் தைரியமாக வெறோரு யுக்தியைப் பயன்படுத்தி அந்நிய வியாபாரிகளுக்கு வாய்ப்புக். கொடுத்துள்ளனர் இதை யார்தான் தட்டிக் கேட்பது என டத்தின் மகேஸ்வரி  தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எங்கள் பிரச்னை புரியவில்லையா?  அங்கு வியாபரம் செய்யும் அந்நிய வியாபாரிகள் முறையான நிறுவனப் பதிவு வைத்துள்ளனரா? வரி கட்டுகிறார்களா?  முறையான வழியில் வந்து இங்கு வியாபாரம் செய்கிறார்களா?என்பதை அரசாங்கமும் அதிகாரிகளும் கண்டறிய வேண்டும். அதற்கு அதிரடிச் சோதனையை நடத்த வேண்டும் என டத்தின் மகேஸ்வரி, முத்துசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்!

புதுடில்லி (அக் .21): காஷ்மீர் மோதல் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது கூறியதை அடுத்து, புதுடெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து எண்ணெய் வித்து நொறுக்குபவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும  இந்திய வர்த்தக அமைப்பு, நேற்று (21.10.2019) திங்களன்று தனது உறுப்பினர்களுக்கு மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மலேசியாவிலிருந்து பாமாயிலை பெருமளவில் இறக்குமதி செய்தாலும், இப்போதைக்கு மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த SEA அமைப்பின் தலைவர் அதுல் சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான  இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளைத்தான் அதன் பாமாயில் விநியோகத்திற்காக நம்பியுள்ளது.

ஆனால்,  ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து

ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தனது உரையில் "ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. தீர்மானம் இருந்தபோதிலும், நாடு படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்றும், "இந்த பிரச்சினையைத் தீர்க்க பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்றும் இந்தியாவுக்குக் கோரிக்கை வைத்தார். இதன் எதிரொலியாக இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

கோலாலம்பூர் : 2020 பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என, மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (MIER) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி என்பது அனைத்து தரப்புக்கும் ஏற்புடையது என்று வர்ணித்த MIER தலைவர் டான் ஸ்ரீ கமல் சாலி, ஜிஎஸ்டி என்பது 2015 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 36 அமெரிக்க டாலருக்கும் குறைந்தபோது அரசாங்கத்தைத் தற்காக்க வைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி ஒரு நியாயமான திட்டம்தானே தவிர, சிலர் சொல்வதுபோல் இது பிற்போக்குத்தனமானது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும்  B40 பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், அதற்கான விலக்கு மற்றும் விதிமுறைகள் உள்ளதாகவும் கமல் சாலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஜிஎஸ்டியை நீக்கிவிட்டு எஸ்எஸ்டி-யைக் கொண்டுவந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொருளாதார வல்லுனர்களில் கமல் சாலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது!

 

கோலாலம்பூர் செப்டம்பர் -24

இந்த நாட்டில் முறையாக நிறுவனத்தைத் தொடங்கி, வருமான வரி முறைப்படி  செலுத்தி தொழில் செய்து வரும் எங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது, சட்டவிரோதமாகத் தொழில் செய்யும் அந்நிய நாட்டவர்கள்தான் என மலேசியத் தோட்டத் தொழில் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ ஆனந்த்  தெரிவித்தார்.

இன்று ஆள்பல இலாகாவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட மலேசிய தோட்டத் தொழில் உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் அதன் பின் செய்தியாளார்களைச் சந்தித்தனர்.

ஒரு புறம் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையால் எங்கள் தொழில் மந்தமாக உள்ள நிலையில், இன்னொரு புறம் சட்டவிரோதமாக அந்நிய நாட்டவர்கள் மிகவும் குறைந்த விலையில்  சேவைகளை வழங்கி, எங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிறார்கள். 

முறையாக வரி செலுத்த இயலாத அவர்கள், இஷ்டத்திற்கு விலையைக் குறைப்பதால், நமது நாட்டுத் தொழிற்துறையினரின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. 

அவர்கள் பகுதி நேரத் தொழிலாகத் தோட்டத் தொழிலைச் செய்து வருகிறார்கள். இப்படிச் சட்டவிரோதமாக தொழில் நடத்தும் அந்நிய நாட்டவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என டத்தோ ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில், நீண்ட காலமாக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையால்  எங்கள் துறை சரிவுநிலையை எட்டியுள்ளதால், இதற்கு உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும் என,  நாடுதளுவிய நிலையில் உள்ள தோட்டத் தொழில் உரிமையாளர்களை ஒருங்கிணைத்து, கடந்த ஏப்ரல் மாதம் மனிதவள அமைச்சர் குலசேகரனிடம் எங்கள் பிரச்னைகளை எடுத்துரைத்து மகஜரை வழங்கினோம்.

அந்த வகையில் இன்று, ஆள் பல இலாகாவின் துணை இயக்குனர்  துவான் ஹாஜி அஸ்ரி பின் அப்துல் ரஹ்மானைச் சந்தித்து இவ்விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறோம். இதன் வழி விரைவில் எங்கள் பிரச்னைக்குத் தீர்வுகிடைக்கும் எனத் தாம் நம்புவதாக டத்தோ ஆனந்த் தெரிவித்தார்.

எங்களுக்கு 1000 அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி கிடைத்தால் போதுமானது.

நம் நாட்டவர்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட, குறிப்பாக வெயில் மழையில் வேலை செய்யத் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் எங்கள் துறை அந்நியத் தொழிலாளர்களை நம்பித்தான் உள்ளது.

அதே நேரத்தில் வங்காளதேசம், பாகிஸ்தான், மியன்மார் நாட்டைச் சேர்ந்த அந்நியர்கள் சட்டவிரோதமாகத் தொழிலைத் தொடங்கியதோடு அல்லாமல், சட்ட விரோத அந்நியத் தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி, இத்துறையை ஆக்கரமித்துள்ளனர்.  இது நாட்டின் வருமானத்திற்குப் பெரிய பாதிப்பை எற்படுத்துவதோடு, எங்கள் பிழைப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இவர்கள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என டத்தோ ஆனந்த் கேட்டுக்கொண்டார்!

கோலாலம்பூர் செப்டம்பர் - 20

இந்தியத்  தொழில்முனைவர்கள் தங்களது வியாபாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில்   300 மில்லியன் சிறப்புக் கடன் நிதியை, இந்தியத் தொழில்முனைவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என,  பிரதமரிடம் மைக்கி பரிந்துரைத்துள்ளது.

மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமையில் மைக்கி நிர்வாகக் குழுவினர், பிரதமர் துன் டாக்டர் மகாதீரை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தனர்.

இதனையடுத்து பிரதமரிடம் 5 பரிந்துரைகளை மைக்கி முன்வைத்துள்ளது. அதில், அரசாங்கம் பட்ஜெட்டில்  தொழில்முனைவர்கள் முன்னேற்றத்திற்காக அரசாங்க அமைப்பின் வயிலாக கடன் உதவிகளை வழங்கி வருகிறது என்றும், அந்த வகையில் பூமி புத்ராவிற்கு 2 பில்லியன் கடன் உதவியும் , பூமி புத்ரா அல்லாதவர்களுக்கு 3 பில்லியன் கடன் உதவிகளையும் ஒதுக்கி வருவதாகவும், இது வரவேற்கத் தக்க ஒன்று  என்றாலும், பூமி புத்ரா அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியால் இந்தியச் சமுதாயம் அதிகம் பயன் அடைகிறதா? என்பது கேள்விகுறியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த 3 பில்லியன் நிதியில் இருந்து 300 மில்லியன் நிதியை இந்தியத்  தொழில்முனைவர்களுக்காக ஒதுக்கும்படி  மைக்கி  பிரதமரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் மைக்கி தலைவர்  டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னையையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும்  பிரதமரிடம் விளக்கி, இந்தியத் தொழில்முனைவர்கள் தங்களது  தொழிலை மூன்று வருடங்கள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடத்த, 30 ஆயிரம்  அந்நியத் தொழிலாளர்களைத்  தருவிக்க அனுமதி வழங்க வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டதாகவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதிய தொழில் முனைவர்களை உருவாக்கும் நோக்கில் தொழில் சார்ந்த பயிற்சிகளை நடத்த மைக்கிக்கு ஆண்டு தோறும் சிறப்பு நிதியினை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டதாக,  இன்று பிரதமரைச் சந்தித்த பின்  செய்தியாளர்களிடம்  டத்தோ கோபாலகிருஷ்ணன்  தெரிவித்தார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9:

புதிய பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டுமே தவிர, இன அடிப்படையில் இருக்கக்கூடாது என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

அண்மையில் நிதி அமைச்சர் துன் டாய்ம்  வெளியிட்ட கருத்தினை மைக்கி முழுமையாக வரவேற்பதாக தெரிவித்த மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந. கோபாலகிருஷ்ணன்,  புதிய மலேசியா, புதிய சித்தாந்தத்துடன் புதிய கொள்கைகளை வழிவகுத்து மக்களின் வாழ்க்கை முறை மேம்படும்படி செயல்படவேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்குபெற்று பயன்பெற வேண்டும் எனக் கூறினார்.     

பிரதமர் திறமைமிக்கவர், கடுமையான உழைப்பாளி, அவரின் தலைமைத்துவத்தில் பழைய கொள்கைகளில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிப்படுத்த வேண்டும். நாட்டின் நிலைமையை மைக்கி நன்கு அறியும்.  நிறைந்த அனுபவமும்  திறைமையும் கொண்ட நமது பிரதமரால், அனைத்தையும் மாற்றி அமைத்து மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த முடியும் என டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மலேசியாவிற்கென தனி பலம் உள்ளது. சமமான வாய்ப்புகள் அனைத்து மலேசியர்களுக்கும்  அரசாங்கம் வழங்கும் பட்சத்தில், அனைத்துலக ரீதியில் நாம் பீடு நடை போடமுடியும்.  அதனால் நாட்டிற்கும் நமக்கும் நன்மையே. அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து புதிய கொள்கைகளை  உருவாக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை மைக்கி வழங்கும் என்றும், புதிய கொள்கைகளுக்குத் தேவையான அனைத்து கருத்துக்களையும், யோசனைகளையும் கொடுப்பதற்கு மைக்கி எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும்   அவர் தெரிவித்தார்!

 

 

கோலாலம்பூர், ஜூலை 31-

படிவம் 3 கல்வியோடு பள்ளி வாழ்க்கைக்கு முழுக்கு போட்டவர். ஒரு நிறுவனத்தில் சாதாரண ஓடும் பிள்ளை (டிஸ்பேட்ச்) வேலையில் வெறும் 400 வெள்ளி சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கியவர். இன்று இவரது வளர்ச்சி பார்ப்பவர்களை மலைக்க வைக்கிறது.

மெரிடைம் நெட்வொர்க் சென். பெர்ஹாட் எனும் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரராக வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார். இவரது வர்த்தகமோ ஏற்றுமதி - இறக்குமதி தொழிலைச் சார்ந்தது.

தினசரி சரக்குக் கப்பலோடு வர்த்தகத்தில் ஈடுபடும் இவரது நிறுவனம், தற்போது புருணை, சிங்கப்பூர், பேரா லுமூட், மலாக்கா, பாசீர் கூடாங், குவாந்தான் போன்ற துறைமுகங்களுக்கு தன்னுடைய வர்த்தக கிளைகளை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது.

வாழ்க்கையில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், இறுதியில் எதையுமே எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. இருக்கும் வரையில் நமக்காக உழைப்பவர்களையும் நமக்காக வாழ்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்த வேண்டுமென்ற ஒரு கொள்கை மட்டுமே நம்மை நிலைத்து வெற்றி பெறச் செய்யும் என்ற கருத்தை மட்டும் விடாமல் கடைப்பிடித்து வருவது தான் தம்முடைய அபாரமான வெற்றிக்கு காரணம் என்கிறார் போர்ட்கிள்ளான் துறைமுகத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்திருக்கும் டத்தோஸ்ரீ ஆர்.ஜெயேந்திரன்.

இனி வரப்போகும் காலங்களில் தம்முடைய இந்த நிறுவனத்தின் முழு பொறுப்புகளையும் தம்மோடு இது நாள் வரை இணைந்து பணியாற்றியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தனது 5 வயது மகளுடன் வாழ்நாளை கழிக்க வேண்டும் என்பது தான் மிகப் பெரிய ஆசை என்றும் அவர் கூறுகிறார். இந்த உலகத்தில் தம்முடைய மகளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாம் பக்கத்தில் இருந்து செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.

இது நாள் வரையில் தமக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய குருவாகவும் போதகராகவும் இருந்த தம்முடைய காலஞ்சென்ற தகப்பனார் கடந்த 19 ஆண்டுகளாக தம்மோடு இல்லை என்றும் தாம் அனுபவிக்கும் எல்லா சுகபோகங்களையும் உடனிருந்து அனுபவிப்பதற்கு அவர் இல்லை என்பது தமக்கு மிகப் பெரிய வருத்தமாக இருந்தாலும் தினசரி தம்முடைய தாயாரோடு நேரம் செலவிடுவதற்கு தவறியதில்லை.

வாழும் காலத்திலேயே நமது பெற்றோர்களையும் முன்னோர்களையும் வாழ்த்திவிட வேண்டும். இன்று தன்னுடைய தகப்பனார் தன்னோடு இல்லை என்று வருத்தப்படுவது ஒருபுறம் இருந்தாலும் தாயார், மனைவி, மகள் ஆகிய மூன்று உறவுகளுடனும் வாழ்கின்ற நாளை முழுமையாக செலவிடுவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்பதையும் அவர் கூறுகிறார்.

எல்லாவற்றையும் விட வயது முதிர்ந்த தாயாரோடு நேரம் செலவிடுவது மட்டும் தான் தம்முடைய வாழ்நாளில் மிக முக்கியமான நடவடிக்கையாக கருதுவதாகவும் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் கூறுகிறார்.

ஆண்டு ஒன்றுக்கு 1,000க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்களை கையாள வேண்டிய சூழல். இதனால் உலகம் முழுவதும் உள்ள துறைமுகம், அதன் நடத்துநர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் நல்லதொரு தொடர்பு இருக்கிறது.

இந்நாட்டில் இருக்கின்ற ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனங்களில்  முதல் நிலைப் பட்டியலில் மெரிடைம் நெட்வொர்க் சென். பெர்ஹாட் இடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் 10 நிலையில் இடம் பிடித்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் நாள் தொடங்கி இவர்களோடு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆகும்.

நம்பகத்தன்மை, பாதுகாப்பான சேவை இவற்றையும் கடந்து வாடிக்கையாளர்களுடனான வர்த்தக ரீதியிலான உறவு, இவை எல்லாம் தான் இந்நிறுவனத்தின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது என்றார் அவர்.

சுமார் 40 பணியாளர்களோடு இந்நிறுவனம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் வேண்டியது எல்லாம் பெற்றுவிட்டதாக கூறும் அவர், வாழ்க்கையில் மனிதநேயத்தோடு செயல்படுவது, இனம் - மதம் கடந்து சேவையாற்றுவது, போட்டி - பொறாமை- கோவம் கடந்த வாழ்க்கை இவையெல்லாம் தான் தமது வாழ்நாளில் தமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் கூறுகிறார்.

வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் வருகின்ற வாய்ப்பை உதாசீனப்படுத்திவிடக் கூடாது. இது மலேசியர்களுக்கு தாம் சொல்ல விரும்பும் கருத்து எனவும் அவர் கூறுகிறார்.

வாழ்க்கையில் தாம் ஒரு காலகட்டத்தில் தினசரி வீட்டிலிருந்து 26 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்ற நிலை இருந்தது. ஆனால் இன்று அதே காலம் தம்மை ‘ரோல்ஸ் ராய்ஸ்’ எனும் உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றில் பயணிக்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது.

அந்த கார் மட்டுமல்ல, அது போல இவரிடம் பல விலையுயர்ந்த கார்கள் இன்று இருக்கின்றன. இவர் இந்நாட்டின் வர்த்தகர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்வீபா எனப்படும் சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச இந்திய வர்த்தகர் இயக்கம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஏற்பாடு செய்திருக்கும் விருது விழாவில் ஜீரோ டு ஹீரோ எனும் விருது வழங்கி கௌரவிக்கிறது.

இந்த நாட்டு இளைஞர்களுக்கு டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் ஒரு முன்னுதாரணமாக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது!

விளம்பரம்:

கோலாலம்பூர், ஜூலை 29-

நாடு தொழில்நுட்ப வளர்ச்சியில் மிளிர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்திய சமூகமும் மற்ற சமூகங்களுக்கு நிகராக பொருளாதாரத்தில் மட்டுமின்றி, முதலீட்டிலும் பலமிக்க சமுதாயமாகச் சிறக்க வேண்டும்.

நாடு தழுவிய அளவில் வர்த்தக வாய்ப்புகளும் முதலீடுகளும் பல கோணங்களிலும் பல அம்சங்களிலும் நிறைந்துள்ளன. ஆனால், நம் இந்திய சமுதாயத்திற்கு இது குறித்த தகவல்கள் சரியாகக் கிடைக்கப் பெறாததால் அவர்கள் எப்படி முதலீடு செய்வது? எங்கு முதலீடு செய்வது போன்ற தகவல் அறியாமல் உள்ளனர்.

சாதாரண மக்கள் தொடங்கி பெரிய அளவிலான வணிகர்கள்,  சிறு - நடுத்தர வர்த்தகர்கள் கூட இன்னும் இது குறித்து அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும் என்ற வகையில் , 1 மைன்ட் எனப்படும்   மலேசிய இந்திய வர்த்தக தொடர்புச் சங்கம் அரசாங்கத்தைக் சார்ந்த மைடாவுடன் கைகோர்த்து, முதலீட்டு வர்த்தக கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக, 1 மைன்ட் அமைப்பின் தலைவர் டத்தோ எஸ்.கோபிநாத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வு வரும் 2.8.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி நண்பகல் 12.30 மணியளவில் கேஎல் சென்ட்ரலில் அமைந்துள்ள மைடா சென்ட்ரலில் நடைபெறவிருக்கிறது.

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த சிறப்புக் கலந்துரையாடலில் வர்த்தகர்கள், சிறுதொழில் வணிகர்கள், வர்த்தகத் துறையில் பீடுநடைப் போட வேண்டும் என்று விரும்புபவர்கள், உற்பத்திதுறையில் உள்ளவர்கள், நிர்வாகப் பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொள்வதுடன், முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து தங்களின் ஐயங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

வெறும்  பணம் மட்டுமின்றி பொருள் முதலீடும் இன்னும் இதர மூதலீடுகளைப் பற்றியும் இந்தக் கூட்டத்தில்  விளக்கமளிக்கப்படும். குறிப்பாக நிதி ஒதுக்கீடு பற்றி இதில் தீவிரமாக விளக்கப்படும். வருங்கால சூழ்நிலைக்கு நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் அவசியமானது என்பதை முன்னிறுத்தியே இது குறித்து விளக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முதலில் பதிவு செய்யும் 200 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலில் இந்தியர்கள் மட்டுமின்றி, மற்ற இனத்தவர்களும் கலந்து கொள்ளவிருப்பதால் ஆங்கில மொழியிலும், தேசிய மொழியிலும் கலந்துரையாடல் இடம்பெறும். 

மைடாவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்தக் கலந்துரையாடலைத் தலைமையேற்று நடத்துவர். 

பல சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்த வர்த்தக மூதலீட்டுக் கலந்துரையாடல் நிகழ்வில் அனைவரும் திரளாகக் கலந்து ஆதரவு தருவதோடு, வர்த்தக உலகில் மற்ற இனத்தவர்களுக்கு நிகராக நாமும் மேலோங்க வேண்டும் என்று டத்தோ கோபிநாத் கேட்டுக் கொண்டார்.

வாட்ஸப் தொடர்புக்கு: 016 4028144

விளம்பரம்:

கோலாலம்பூர்26 ஜூலை 2019 - நாட்டின் 16-வது மாமன்னர், சுல்தான் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வதை முன்னிட்டு, எதிர்வரும் ஜுலை 30-ஆம் தேதி ஆஸ்ட்ரோ அவானி இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தங்களுடைய நேயர்களுக்காக ஒளியேற்றவுள்ளது.

பிற்பகல் 12 மணிக்கு #AgongKita எனும் தலைப்பில் ஒளியேறவுள்ள நிகழ்ச்சியில் மாமன்னரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் எவ்வாறு பதில் அளிக்கின்றார் என்பதைக் கண்டு களிக்கலாம். #AgongKita நிகழ்ச்சி www.astroawani.com அகப்பக்கத்தில் பிரத்தியேகமாக ஒளியேறும்.     

#AgongKita விளம்பரக் காணொளிகள்

இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ அவானி வழங்கும், “Eksklusif Bersama Yang di-Pertuan Agong XVI” நிகழ்ச்சியில், மாமன்னர் தனது தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகளில் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளவுள்ளார். இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ அவானி (அலைவரிசை 501), ஆஸ்ட்ரோ ரியா (அலைவரிசை 104), ஆஸ்ட்ரோ ரியா எச்.டி (அலைவரிசை 123), ஆஸ்ட்ரோ AEC (அலைவரிசை 301), ஆஸ்ட்ரோ AEC எச்.டி (அலைவரிசை 306), ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஹலோ (அலைவரிசை 110) ஒளியேற்றவுள்ளது.   

  

“Eksklusif Bersama Yang di-Pertuan Agong XVI” விளம்பரக் காணொளிகள்

 ஆஸ்ட்ரோ அவானி ஜூலை 30-ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மாமன்னர் அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வதை நேரலையாகக் கொண்டு வரவுள்ளது!

 

விளம்பரம்:

 

 

கோலாலம்பூர் ஜுலை 26-

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் (KLSICCI) 90-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாபெரும் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக அதன் தலைவர் டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க பிகே ஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரியவிருக்கிறார்.

எதிர்வரும்  செப்டம்பர் 7-ஆம் தேதி தலைநகரில் பிரம்மாண்ட மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில், நாடுதழுவிய நிலையில் சுமார் 1,200 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விருதளிப்பு முதன்மை அங்கமாக இடம்பெறும். இந்நிகழ்வில், மூவருக்கு பிளாட்டினம் விருதும், ஐவருக்கு இவ்வாண்டின் சிறந்த தொழில்முனைவர் விருதும், 40 பேருக்குத் தலைசிறந்த தொழில்முனைவருக்கான தங்க விருதும் வழங்கி சிறப்பிக்கப்படும் என்று டத்தோ ராமநாதன் குறிப்பிட்டார்.

சுற்றுலா, உலோகப் பொருள் தொழில்துறை, கட்டுமானத் துறை போன்ற 24 துறைகளில் சிறந்து விளங்கும் தொழில்முனைவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படுவர். இது வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவர்களுக்கு ஓர் ஊக்குவிப்பாக அமையும் என்று, நேற்று  கேஎல்எஸ்ஐசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் விவரித்தார்.

“நாங்கள் 90 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளோம். இந்தக் கொண்டாட்டத்தில் தகுதியான இந்திய  தொழில்முனைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.  இந்தியர்கள் வர்த்தகத்தில் பீடு நடைபோட்டு நாட்டின் மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்காற்றி வருகின்றனர் என்பதற்கு இந்த விழா சான்றாக அமையும் என்பது திண்ணம்” என்று அவர் மேலும் சொன்னார்.

அதே வேளையில், வர்த்தகர்கள் மற்ற வர்த்தகர்களோடு தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, இதர துறைகளில் காணப்படும் வாய்ப்புகளையும் இந்நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம். புதிய அறிமுகங்கள் வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும் என்றும் ராமநாதன் குறிப்பிட்டார்.

விருது பெறத் தகுதியான தொழில்முனைவர்களை ‘பிகேஎஃப்’ என்றழைக்கப்படும் மிகப் பெரிய கணக்காய்வாளர் நிறுவனம் தேர்வு செய்யும். இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் KLSICCI.com.my எனும் அகப்பக்கத்தின் வாயிலாக அல்லது 03-26931033 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு விருதுக்கான பாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்!

விளம்பரம்:

கோலாலம்பூர் ஜூலை -2

மலேசிய இந்திய பொற்கொல்லார் நகை வணிகர் சங்கத்தின் தலைவராக டத்தோ அப்துல் ரசூல் போட்டியின்றி மீண்டும் தேர்வு பெற்றார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அச்சங்கத்தின் 24-வது ஆண்டுக் கூட்டம் தலைநகர் இஸ்தானா தங்கும் விடுதியில் நடைபெற்றது. தேர்தல் ஆண்டான  இவ்வாண்டில் வழக்கம் போல் சில சலசலப்புகள்  ஆண்டு கூட்டத்தில் காணப்பட்டன.

அதன் பின் நடைபெற்ற புதிய தலைமைத்துவ தேர்தலில், டத்தோ அப்துல் ரசூல்  தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவராக சண்முகராசு தேர்வு செய்யப்பட்ட நிலையில், செயலாளர் பதவிக்கு போட்டி நிலவியது. இதில் வீரபாலம் 44 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். டத்தோ முகமட் இப்ராஹிம் சங்கத்தின் துணைச் செயலாளராகத் தேர்வுபெற்ற நிலையில், மனோகரன் பொருளாளராகத் தேர்வு பெற்றார்.

புஷ்பநாதன், சைட், வி.கே.என் பாலா,  கசாலி ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிர்வாகக் குழு தேர்தல் தேவன் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் உள்ள இந்திய  பொற்கொல்லர்கள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவதியுற்று வருகின்றனர். இப்பிரச்னையைக் களைய சங்கம் தீவிரமாகச் செயல்பட்டுவருவதாக டத்தோ அப்துல் ரசூல் தெரிவித்தார்!

கோலாலம்பூர் ஜூன் 20-

கடந்த ஜூன் 11 மைக்கி ஏற்பாட்டில் தலைநகரில் மனிதவள அமைச்சருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அமைச்சர் குலசேகரனிடம் இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னை தொடர்பாக ஒரு மகஜரும் வழங்கப்பட்டது. கிட்டதட்ட 38 வர்த்தகச் சங்கங்கள் ஒருங்கிணைந்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தொகுத்து மகஜராக வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மைக்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமையில், வர்த்தகச் சங்கத் தலைவர்கள்  பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

மைக்கி தலைவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டு காலமாக  இந்தியர்கள் அதிகம் ஈடுபட்டுவரும் 7 துறைகளுக்கு, அந்நிய தொழிலாளர்கள் அனுமதி வழங்காமல் முடக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நாங்கள் அமைச்சர் குலசேகரனிடம் விளக்கியுள்ளோம். அவரும் எங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க பிரதமரிடம் பேசவிருப்பதாகவும், அமைச்சரவையில் விவாதிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் மைக்கி வர்த்தகச் சங்கங்களுடன் பிரதமரைச் சந்திக்க உள்ளோம். அவரிடம் நிலைமையை எடுதுரைக்க உள்ளோம். எங்கள் பிரச்னையைச் செவிசாய்த்து நல்ல தீர்வினை விரைந்து எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூன் 20-

நாட்டில் நடக்கும் விற்பனைப் பெருவிழாவில் சட்டவிரோத அந்நிய வியாபரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதே எங்கள் கண்டனமே தவிர,  விற்பனைப் பெருவிழா ஏற்பாட்டு நிறுவனம் வரி கட்டுகிறதா இல்லையா? லைசென்ஸ் இருக்கிறதா? இல்லையா?  என்பது அல்ல என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத் தலைவர்  டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்கு வந்து வியாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகள் முறையாக அனுமதி பெற்று , வரிச்  செலுத்தி வியாபாரம் செய்கிறார்களா? இவர்களின் லாபக் கணக்கு  என்ன? அதற்கான வரி  என்ன? என்பதே எங்கள் கேள்வி. இப்படிக் கூடாரம் அமைத்துப் பணத்தைச் சம்பாதிக்கும் இவர்களால், நாட்டிற்கு என்ன லாபம்? என அரசாங்கத்திடம் கேட்டோமே தவிர, உங்களிடம் அல்ல என டத்தோ கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்.

எங்கள் கேள்வியின் பிரதிபலிப்பாக உடனடி நடவடிக்கை எடுத்த அரசு, ஒரு விற்பனைப்  பெருவிழாவில் அதிரடிச் சோதனை நடத்தியது. அங்குச் சில நபர்களையும் கைது செய்ததது. அவர்கள் சொல்வதுபோல் எல்லாம் முறைப்படி நடந்தால், பிறகு ஏன் அச்சோதனை சமயத்தில் மூன்றில் இரண்டு வளாகத்தை மூடினீர்கள்? எனவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

நாங்கள் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை. முறையாக வரி செலுத்தி வியாபாரம் செய்வதால்,  நாங்கள் அரசாங்கத்திடம் கேள்வி கேட்டோம்.  அரசு முறையான நடவடிக்கையை அல்லது பதிலை எங்களுக்கு வழங்கும்.  எங்களைத் தெருவில் வந்து வியாபாரம் செய்யச் சொல்ல நீங்கள் யார்? பல லட்சம் செலவில் முறையாக அனுமதி பெற்று வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து, தொழிலாளர்களைக் கொண்டு நாங்கள் வியாபாரம் செய்கிறோம். இலக்கவியல் முறையில் தொழில் நடக்கிறது. நாங்கள் அதையெல்லாம் வரவேற்கிறோம். அது அரசின் விடுமுறைகளைப் பின்பற்றி நடக்கும் நவீன வணிகம்.  ஆனால் எந்த ஒரு வரியையும் கட்டாமல் சட்டவிரோதமாக நடக்கும் வியாபாரங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்தப் பெருவிழா நிறுவனங்கள் தளத்தை வாடைக்கு விட்டு, அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தைத்தான் அரசுக்கு வரியாகக் கட்டுகிறார்கள். ஆனால், அங்கு வியாபாராம் செய்யும் அந்நிய வியாபாரிகளின் விற்பனை லாபத்திற்கு

யார் வரி கட்டுவது? என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

எல்லாம் முறையாக நடந்தால், நடுக்கம் வேண்டாம்.  உள்நாட்டு வியாபாரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்ட விரோத அந்நிய வியாபாரிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறினார்!

நூற்றுக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன!

தொழிலாளர் பற்றாக்குறையால் இந்திய வியாபாரம் முடக்கம்!

 

அந்நியத் தொழிலாளர் விவகாரம் நாட்டில் பெரிய பிரச்னையாய் உருவெடுத்துள்ளது. தொடர்ச்சியான தொழிலாளர் பற்றாக்குறையால் நூற்றுக்கும் அதிகமான இந்தியர் வியாபாரம் தொடர்பான கடைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிகை அலங்காரக் கடைகளைப் பொருத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுவிட்டதாக ‘மிண்டாஸ்’ எனப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையால் 3000 தொழிலாளர்களை வழங்க அரசு முன்வர வேண்டும் என மகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

‘மிண்டாஸ்’ அமைப்பில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் சொந்தமாக சிகை அலங்கார நிலையங்களை வைத்துள்ளனர். அனவைருமே பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையால் அவர்கள் வாழ்வாதார ரீதியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அரசாங்கம் இச்சிக்கலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

இது குறித்துப் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும், இதுவரைக்கும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை.

சங்க ஆண்டுக்கூட்டத்திற்கு வருகை தந்த, கெ அடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா, குடிநுழைவு இலாகா நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் முகமட் ஃபூசி ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பாரம்பரியமாக நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடைகளை மூடும் இந்த நேரத்தில், சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் தற்போது சிகை அலங்கார நிலையங்களை இயக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் வேதனையான விஷயம்தான் என மகேந்திரன் தெரிவித்தார்.

தலைநகரில் இச்சங்கத்திற்காக நடைபெற்ற ஆண்டுக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் ஆர்.ராஜசேகரன், பொருளாளர் ஜெயக்குமார், உதவித் தலைவர்கள் டாக்டர் சுந்தரம், கனதீபன், விஜயகுமார், ஆசைத்தம்பி, சூர்யகுமார், மீனா குமார், காப்பாளர் டாக்டர் மதிராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்!

அந்நிய நாட்டு வர்த்தகர்களின் ஆதிக்கம் உள்நாட்டு கார்னிவெல்களில் அதிகரித்து விட்டது எனச் சிலர் குற்றஞ்சாட்டுவது அடிப்படையற்றக் குற்றச்சாட்டு என அஜென்டா சூரியா நிறுவனத்தின் தலைவர் ஜெகாராவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில், அஜென்டா சூரியா ஏற்பாடு செய்யக்கூடிய கார்னிவெல்களில் மலேசியாவைச் சேர்ந்த 'பி 40' வர்த்தகர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மலேசிய நிறுவனங்களான டிவைன் ஹோம், ஈப்போ காச்சாங் பூத்தே, லிபாஸ் ஃபேஷன், அஸ்ப்ரா ஈவெண்ட்ஸ், மயூரா கிரியேஷன், ஜஸால் ஸ்வீட், மோகுல் பஞ்சாப் ஸ்வீட் உள்ளிட்ட பல உள்ளூர் வர்த்தகர்களுக்கு ஆண்டுதோறும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

பல முன்னணி வர்த்தகர்களுக்கும் அழைப்புக் கொடுத்து வாய்ப்புகளை வழங்கினால்கூட, யாரும் முன் வருவதில்லை. குறைகளை மட்டுமே சொல்கின்றனர்.

பி 40 பிரிவைச் சேர்ந்த வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்குச் சரியான தளம் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால், அஜெண்டா சூரியா நிறுவனம் குறைந்த விலையில் அவர்களுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. இது போன்ற கார்னிவெல்கள்தான் வர்த்தகர்களுக்கு வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தருகிறது. எனவே கார்னிவெல் நடத்துபவர்கள் மீதான குறைகூறலை,  இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என நேற்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெகாராவ்  தெரிவித்தார்.
கார்னிவெல்கள் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் எழுந்ததால், மிட்வேலி பேரங்காடியில் அஜெண்டா சூரியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த வர்த்தக கார்னிவெலில் குடிநுழைவுத் துறை சோதனை நடத்தி, 90 அந்நிய வர்த்தகர்களை விசாரித்து 16 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் ஏழு பேர் நிபுணத்துவ விஸிட் பாஸ் உடையவர்கள். நால்வர் சோஷியல் பாஸ் உடையவர்கள். மற்ற 5 அந்நியத் தொழிலாளர்கள் யார் என்று தெரியவில்லை.

கார்னிவெல்களில் வர்த்தகம் செய்ய வரும் அந்நிய வியாபாரிகள் நிபுணத்துவ பாஸை பெற்றிருக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை விதிமுறை வகுத்துள்ளது. அந்த முறைப்படிதான் இத்தனை ஆண்டுகள் கார்னிவெல் நடத்தப்பட்டு வருகின்றன.
இது முறையல்ல என்று குடிநுழைவுத் துறையினர் எங்களுக்கு விளக்கம் அளித்தால்தான் எங்களுக்கும் விஷயம் தெரியவரும்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரக்கூடிய பொருட்களுக்கு வரி தள்ளுபடி கிடைக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொருட்களைக் கொண்டு வர முறையான வரி செலுத்தப்படுகிறது. அதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகளை மலேசியாவிற்குக் கொண்டு வருவதில், கார்னிவெல் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால், இதன் உண்மைத் தன்மை தெரியாமல் வர்த்தகத்தைக் கெடுக்கும் நோக்கில் குற்றஞ்சாட்டுவது முறையானதல்ல.
கடந்த 17 ஆண்டுகளாகச் சிறப்பான முறையில் கார்னிவெல்களை நடத்தி வருகிறது அஜெண்டா சூரியா நிறுவனம். ஆனால், அர்த்தமில்லாமல் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படி அவதூறு பரப்பும் தரப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
இது தொடர்பாகக் கடந்த ஜூன் 12-ஆம் தேதி போலீஸ் புகாரும் செய்யப்பட்டுள்ளது என ஜெகாராவ் தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில், குடிநுழைவுத் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜெகாராவ் தெரிவித்தார்!

‘Persatuan Masyarakat Pelita Hidup Malaysia’ (PMPHM) அமைப்பின் ஏற்பாட்டில் வரும் ஜூன் 29-ஆம் தேதி, இந்திய மகளிருக்கான ‘நெட்வொர்க்கிங்’  ஒன்றுகூடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி திரட்டும் நிகழ்வு மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை MCNCC

No 15, Jalan 18/16, 46000 Peatling Jaya, Selangor என்ற முகவரியில் நடைபெறவிருக்கிறது.

இதன் முக்கிய நோக்கம்  பல்வேறு தொழில்துறையில் ஈடுபட்டு வரும் நம் இந்திய மகளிரை ஒருங்கிணைத்து, அவர்கள் சம்பந்தப்பட்ட தொழில்துறையை மேம்படச் செய்வதற்காகப் பலவித நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும்.

புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள், அதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதில் சிரமம் மேற்கொண்டால், அதை எப்படி திறம்பட  நகர்த்திச் செல்வது, அதற்கான வழிவகைகள் என்ன என்பதையெல்லாம் முறைப்படி ஏற்படுத்திக் கொடுக்கவே இந்த ‘நெட்வொர்க்கிங்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறையைப் பொருத்தவரை நெட்வொர்க்கிங் என்பதுமிக மிக அவசியம்.

நம் மகளிர் தொழில் முனைவர்கள், தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விவரங்கள், அதற்கான விளம்பரங்கள் என எதைப்பற்றியும் இந்த நெட்வொர்க்கில் தெரிவித்தால், உடனே அவர்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் இந்த ஒருங்கிணைப்பின் மூலம் வழங்கப்படும்.

இல்லத்தரசிகள் பலருக்கு நிறைய திறமை இருக்கும். ஆனால் அதை வெளிக்காட்ட சரியான தளம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களின் திறனை வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்கிறோம் என்கிறார்,  ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் டாக்டர் உமா ராமசாமி.

மேலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதற்காகவே இதுபோன்ற நிதி திரட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து 10 வருடங்களாக இயங்கி வரும் இவர்களின் ஆறாவது நிகழ்ச்சி, இந்த மகளிர் நெட்வொர்க்கிங் நிகழ்ச்சி.

சுமார் 250 பேர் கலந்துகொள்ளும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மகளிர் ஒருங்கிணைப்பு நிகழ்வில், நமது சமுதாயத்தின் தொழில் முனைவர்கள், இல்லத்தரசிகள், புதிய தொழிலில் சாதிக்க விரும்புகிறவர்கள் கலந்துகொள்ளலாம்!

தொடர்புக்கு: 012 - 8750199 (டாக்டர் உமா ராமசாமி)

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர் ஜூன் 10-

 

பேராக் தைப்பிங்கில் எதிர்வரும் ஜுன் 12 முதல் 16-ஆம் தேதி வரை நடக்கவிருந்த இந்திய விற்பனைப் பெருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத்  தகவல் கசிந்துள்ளது.

 

விற்பனைப் பெருவிழாவில் அந்நிய வியாபாரிகள் முறையான அனுமதி பெறாமல், வரியையும் செலுத்தாமல் வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் உள்நாட்டு வியாபாரிகள் பாதிப்படைவதாகவும் அண்மையில், மலேசிய ஜவுளி விற்பனை உரிமையாளர் சங்கம் மற்றும் உள்நாட்டு வணிகச் சங்கங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. அதோடு  மலேசிய ஜவுளி விற்பனை உரிமையாளர் சங்கச் செயலாளர் டத்தின் மகேஸ்வரி இது தொடர்பாக போலீஸ் புகார் செய்து, இப்படிப்பட்ட விற்பனைப் பெருவிழாவில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை செய்ய வேண்டும் எனவும், சட்ட விரோதமாக நாட்டில் வியாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வலியுறுத்தினார்.

 

உள்நாட்டு வணிகர்களின் எதிர்ப்பு அலை விற்பனைப் பெருவிழா நடத்துனர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ? இப்போது ரத்து செய்யப்போவதாகத் தெரிய வந்துள்ளது. விற்பனைப் பெருவிழா ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.   இந்தப் பெருவிழா தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதன் காரணம் என்ன?

அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையா?  இல்லை அதிகமான அந்நிய வியாபாரிகள் வியாபாரம் செய்வது சோதனையில் அம்பலம் ஆகிவிடும் என்கிற அச்சமா? இல்லை ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா? என்பது தெரியவில்லை.

 

ஆனால், இதுபோன்ற விற்பனைப் பெருவிழாக்களை இப்போது அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்பது மட்டும் உண்மை.

விரைவில் அதிரடிச் சோதனை ஆரம்பமாகலாம்!

(வெற்றி விக்டர்- சத்யா ஃபிரான்சிஸ்)

கோலாலம்பூர் ஜூன் 7-

நம் நாட்டில் பல விதமான விற்பனைப் பெருவிழா கண்காட்சிகள் நாடு தளுவிய அளவில்  நடைபெறுகிறது. இதில் வியாபாரம் செய்யும் பலர் அந்நிய நாட்டவர்கள்.

இவர்கள் முறையான அனுமதி பெற்றுத்தான் வியாபாரம் செய்கிறார்களா? இதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்க முடியுமா? விற்பனை வரிகள் உண்டா?  போன்ற கேள்விகளை மலேசிய ஜவுளி விற்பனை உரிமையாளர் சங்கச் செயலாளார் டத்தின் மகேஸ்வரி எழுப்பியுள்ளார்.

நேற்று மைக்கி அலுவலகத்தில்,  மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் உள்பட, பல உள்நாட்டு வணிக சங்கங்கள் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில் டத்தின் மகேஸ்வரி இவ்வாறு தெரிவித்தார்.

விற்பனைப் பெருவிழா என்ற பெயரில் அந்நிய நாட்டு வணிகர்கள்,  முறையான அனுமதி பெறாமல் வியாபரம் செய்து அதிக லாபம் அடைந்து நாடு திரும்புகிறார்கள். இந்த அட்டகாசம் ரொம்பக் காலமாக அரங்கேறி வருகிறது.

இதற்கு யார் அனுமதி கொடுத்தது? இவர்கள் எப்படி பொருட்களுடன் வந்து,  இவ்வளவு எளிதாக வருமானம் ஈட்டி நமது நாட்டுப் பணத்தை வெளியே கொண்டு போகிறார்கள்? விற்பனைப் பெருவிழாவில் வியாபாரம் செய்வதற்கு இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? அரசாங்கத்திற்கு இவர்கள் வரி ஏதும் செலுத்துகிறார்களா? போன்ற கேள்விகளை முன் வைத்த டத்தின் மகேஸ்வரி, விற்பனைப் பெருவிழாவில்  சட்ட விரோதமாக வியாபரம் செய்யும் அந்நிய விற்பனையாளர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூன் 4 -ஆம் தேதி போலீஸ் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படி ஒரு சட்ட விரோத நடவடிக்கை நடப்பது உள்துறை அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்குத் தெரியுமா?  எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டிற்கு இவர்களால்  பேரிழப்பு எற்படுகிறது என்பதை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் தாம் போலீஸ் புகார் செய்ததாக டத்தின் மகேஸ்வரி தெரிவித்தார்.

 

சட்ட விரோத அந்நிய விற்பனையாளர்களால்  உள்நாட்டு வணிகர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம் நாட்டினர் இங்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், நிறுவனப் பதிவு இலாகாவில்  பதிவு செய்து, மாநகர மன்றத்திடம் அனுமதி பெற்று, அதன் பின் வியாபரம் செய்யவேண்டும். ஆனால் அந்நியர்கள் விவகாரத்தில் அப்படி இல்லை. அவர்கள் வருகிறார்கள், கூடாரத்தில் வியாபரம் செய்கிறார்கள், பாக்கெட்டை நிரப்பி விட்டுச் சந்தோசமாகச் சொந்த நாடு திரும்புகிறார்கள். இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?  என டத்தின் மகேஸ்வரி தெரிவித்தார்.

 

 

இந்த விவகாரத்தில் அரசாங்கம் சற்றுக் கடுமையாக இருந்து, இப்படிப்பட்ட விற்பனைப் பெருவிழாவில் அதிரடிச் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக விற்பனை செய்யும் அந்நிய நாட்டு விற்பனையாளர் மீதும், அவர்களுக்கு அனுமதி வழங்கும் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் முறையான அனுமதி இல்லாமல் யாரும் வர

மாட்டார்கள்; நிகழ்ச்சி நடத்துபவர்களும் முறையாக நடந்துகொள்வார்கள் என மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். அதோடு இப்படிப்பட்ட விற்பனைப் பெருவிழாவில் உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்!

நெகிரி செம்பிலான் ஜூன் -3

நெகிரி செம்பிலானில், பல இந்திய வர்த்தகர்களை உருவாக்கி வருவதோடு, அவர்கள் வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம்.

அதிகமான இளம் வர்த்தகர்களைக் கொண்டு துடிப்புடன் செயல்பட்டு வரும், இச்சங்கத்தின் 33-வது ஆண்டுக் கூட்டம், நெகிரி செம்பிலான் சிட்டி கிங்டம் கொன்வென்ஷன் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகர்  ரவி, மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் டத்தோ ராஜசேகரன், பொதுச் செயலாளர் டத்தோ ஏ.டி குமாரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஆண்டான இவ்வாண்டு,  நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்திற்கு மீண்டும்   ஆர்.ராஜேந்திரன் போட்டியின்றித் தேர்வு பெற்றார். இவ்வியக்கத்தின் புதிய துணைத்தலைவராக  எம்.திருநாவுக்கரசு தேர்வு பெற்ற நிலையில், உதவித் தலைவர்களாக கருடா சிவா , பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக தெய்வீய முகுந்தன், துணைப் பொதுச்செயலாளராக ராஜசேகரன், பொருளாளராக மணிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜேந்திரன், நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம் எப்போதும் இளம்  இந்திய தொழில்முனைவர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகமான இந்திய இளைஞர்கள், மகளிருக்குப் பலவிதமான பயிற்சிகளை வழங்கி, அவர்களைத் தொழில் தொடங்கவும் உதவி செய்து வருகிறது.

அந்த வகையில் இந்த நடவடிக்கைகள் தொடச்சியாக முன்னெடுக்கப்படும். அதற்கு எங்களுக்கு உறுதுணையாக மாநில அரசும், மைக்கியும் இருக்கவேண்டும்  எனக் கேட்டுக்கொண்டார்!

 

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர் ஜூன் 1-

அந்நிய தொழிலாளர்களுக்கான தடை முழுமையாக நீங்க வேண்டும் என்று  இந்திய பாரம்பரிய தொழில்துறை சங்கங்கள் அண்மைய காலமாகப் போராடி வந்தனர்.

 

இந்திய பாரம்பரிய தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கையை, அரசு முழுமையாக முடக்கியதைத் தொடர்ந்து வியாபாரிகள் திக்கு முக்காடினர். பலர் தங்களது தொழிலை விட்டே ஒதுங்கிப் போகும் சூழல் எற்பட்டது.

 

இதனையடுத்து இவ்விவகாரத்திற்குத் தீர்வு கிடைக்கும் நோக்கில், மைக்கி உட்பட தொழில் துறைச் சங்கங்கள் பிரதமர் இலாகா, உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு என, மேலும் சில அமைச்சுகளுக்குச் சென்று மனுக்களை வழங்கினர்.

அதே சமயம், ஊடகங்கள் வாயிலாகத் தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

இதன் பலனாக  மாற்றுத் தொழிலாளர்களுக்கான தடையை மத்திய அரசு முழுமையாக நீக்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பை மனிதவள அமைச்சர்  குலசேகரன் ஓர் அறிக்கையின் வழி அறிவித்துள்ளார்.

இதன் வழி, அந்நிய  தொழிலாளர் ஒருவர், தமது சொந்த ஊருக்குத் திரும்பினால், அவருக்கு மாற்றாக இன்னொருவரை  வியாபாரிகள் வேலைக்கு அமர்த்தும் பழைய அனுமதி மீண்டும் தடையின்றி செயல்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் வியாபாரத்தை நடத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

இத்தடையை அரசு நீக்கியதால்,  இந்திய பாரம்பரிய தொழில் துறையில் ஈடுபட்டு வருபவர்களின் சுமை சற்றுக் குறைந்துள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குறிப்பாக மனிதவள அமைச்சர் குலசேகரனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், இந்திய வியாபார சங்கங்களின் தலைவர்களான டத்தோ ரசூல் அப்துல் ரசாக், ஹாஜி அயூப் கான், முத்துசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

 

எனினும், 7 அல்லது 8 தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களைக் கொண்டு வரும் நடவடிக்கையை அரசு  இன்னும் முடக்கி வைத்துள்ளது.

இந்தத் தடையும் முழுமையாக நீங்கினால் மட்டுமே இவ்விவகாரத்திற்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்று மைக்கியின் தேசியத் தலைவர் டத்தொ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

ஒரு வியாபாரத்திற்குத் தொழிலாளர் தேவை என்றால், அதன் உரிமையாளர் நேரடியாக விண்ணப்பம் செய்யும் நடைமுறையை அரசு அமலுக்குக் கொண்டு வரவேண்டும். இவ்விவகாரத்தில் இனி இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது.

அப்போதுதான் அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் குளறுபடிகள் ஏற்படாது.

இந்த நடைமுறையை அரசு உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தால், வருங்காலங்களில் அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் எந்த ஒரு சர்ச்சையும் ஏற்படாது.

 

அதே வேளை, மைக்கி திட்டமிட்டபடி, வரும் ஜூன் 11-ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸில் இந்திய பாரம்பரிய தொழில்துறையில் ஈடுபட்டும் வருபவர்களுடன் நேரடியாகச் சந்தித்து பேசவுள்ளோம்.

அங்குத் தொகுக்கப்படும் விஷயங்கள் ஒரு மகஜராக நான்கு முக்கிய அமைச்சுகளிடம் வழங்கப்படும். மேலும், அனைத்து தொழில் துறைகளுக்கான தடைகள் நீக்கப்படும் வரை மைக்கி நடவடிக்கைகள் தொடரும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

கடந்த ஆட்சியில் உள்துறை அமைச்சர்  தனது சுயநலத்திற்காக அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் நடவடிக்கையை முடக்கினார். இப்போது 'கந்தியான்' எனப்படும் மாற்று தொழிலாளர்களுக்கான முடக்கம் நீக்கப்படுவதாக இந்த ரமலான் மாதத்தில் ஓர் இனிப்பான செய்தியை மனிதவள அமைச்சர் வழங்கியுள்ளார்.

எஞ்சியுள்ள துறைகளுக்கான தடைகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என, 'பிரிஸ்மா' தலைவர் ஹாஜி ஆயூப் கான் தெரிவித்தார்!

விளம்பரம்:

15.7  மில்லியன் நேயர்கள்....

ஆஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை

 

கோலாலம்பூர், 28 மே 2019 - அண்மையில், GfK நிறுவனம் மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவைக் கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், ஆஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகக் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது..

வாரந்தோறும் 77.2 சதவிகிதம், அதாவது 15.7 மில்லியன் நேயர்கள் ஆஸ்ட்ரோ வானொலியின் 11 வானொலி அலைவரிசைகளைக் கேட்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

‘எரா’, ‘ஹிட்ஸ்’, ‘மை’ மற்றும் ‘ராகா’ முறையே மலாய், ஆங்கிலம், சீன, தமிழ் மொழிகளில் தொடர்ந்து முதல் நிலை வானொலி  எனும் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வாரந்தோறும் 1.6 மில்லியன் நேயர்களைக் கொண்டு ‘ராகா’ நம் நாட்டின் முன்னணி தமிழ் வானொலியாக விளங்குகிறது.

இது குறித்து ஆஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜேக் அப்துல்லா கூறுகையில், “ஆஸ்ட்ரோ வானொலி அனைத்து வகையிலும் 15.7 மில்லியன் நேயர்களுக்கு, எங்களுடைய வானொலியின் முழுமையான பிராண்ட் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்து வருகிறோம். அவ்வகையில், எங்களுடைய சமூக வலைத்தளங்கள் 26.1 மில்லியன் நேயர்களைக் கொண்டு, எங்களுடைய டிஜிட்டல் அகப்பக்கங்களைச் சுமார் 13.2 மில்லியன் பேர் ஒவ்வொரு மாதமும் கண்டு களிக்கிறார்கள்” என்றார்!

விளம்பரம்:

 

 

 

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே 28-

இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை, அதனால் அவர்களுக்கு எற்பட்டுள்ள நஷ்டம், தொடர்ந்து அவர்களைச் சூழ்ந்து வரும் இழப்புகள் போன்றவற்றால், இந்திய பாரம்பரியத் துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக விவாதித்து, நான்கு முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில், மைக்கி மற்றும் 20 இந்திய வர்த்தகச் சங்கங்கள் ஒருங்கிணைந்து  மகஜர் வழங்க உள்ளதாக, மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) மைக்கி தலைமையகத்தில் இந்திய வர்த்தகச் சங்கங்களுடன் மைக்கி சிறப்பு கலந்துரையாடல் சந்திப்பை நடத்தியது.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய  டத்தோ கோபாலகிருஷ்ணன், மைக்கியின் சார்பில் பல வகையில், பல அமைச்சுகளுடன் பல கலந்துரையாடல் நடத்தியும் இன்னும் எந்த ஒரு சாதகமான பதிலும் அரசாங்கத் தரப்பிடம் இருந்து வரவில்லை என்று தெரிவித்தார். இதனால், கத்திமேல் நடப்பது போல் வியாபாரத்தை நடத்தி வருவதாகவும்,  பல வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை நிறுத்தி வைத்துக் கடைகளை மூடிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வியாபாரத்தைத் தொடங்கினாலும், மூடிவிட்டாலும் பணம் இழப்பு ஏற்படும். அதேபோல் திரும்பத் திறந்தாலும் பணம் செலவாகும்.

இந்திய வர்த்தகத் துறையைப் பொறுத்தவரை, அந்நிய தொழிலாளர்களை  விரைவில் தருவிப்போம் என்று ஆசை காட்டி, பிறகு ஆய்வு செய்கிறோம் என்று சொன்னார்கள். அதன் பின் உள்நாட்டவர்களைப்  பயன்படுத்துங்கள் என்றார்கள். அதன் பின் மீண்டும் ஆய்வு செய்வதாகச் சொல்லி, இப்போது நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதாக முன்னுக்குப் பின் முரணாகச் சொல்கிறார்கள்.

இப்படியே நிலையில்லாமல் சொல்லிக்கொண்டே போனால், எத்தனை முறைதான் தற்காலிகமாக மூடி முடித் திறப்பது?  எவ்வளவு நாள்கள்தான் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வாடகை கட்டிக்கொண்டு காத்திருப்பது?

இந்த நாட்டில் 3 மில்லியன் அந்நிய நாட்டவர்கள் முறையாகவும், 2 மில்லியன் அந்நிய தொழிலாளர்கள் சட்டவிரோதமாகவும் உள்ளனர். ஆக மொத்தம் 5 மில்லியன் அந்நிய தொழிலாளர்கள் உள்ள நிலையில்,  இந்திய வியாபாரிகளின் தொழில்துறைக்கு 50 ஆயிரம் அந்நிய தொழிலாளர்களைத்தான் தருவிக்கச் சொல்லிக் கேட்கிறோம். அது மொத்தமுள்ள அந்நிய தொழிலாளர்களில் 1 விழுக்காடுதான்.

இதை முறையாக அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க, வருகிற ஜூன் 11-ஆம் தேதி, பிரிக்பீல்ட்ஸ் கந்தய்யா மண்டபத்தில்,  மாபெரும் கூட்டத்தை எற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் 4 முக்கிய அமைச்சர்களிடமும் எங்கள் நிலைமையை எடுத்துரைத்து, பிரதமர் துறை, மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு, உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் மேம்பாட்டு விவகார அமைச்சுகளுடன் மகஜர் வழங்க உள்ளதாக, டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

இந்திய வர்த்தகச் சமுதாயத்தைக் காக்கவும், இந்திய பாரம்பரிய வர்த்தகத் துறையை அழியவிடாமல் காப்பாற்றவும் அனைத்து இந்திய வர்த்தகர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

 

பிரதமர் எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. எங்கள் பிரச்னையை பிரதமர் பார்வைக்குக் கொண்டுசெல்லவே இந்த க்கூட்டம் என்றும் அவர் தெரிவித்தார்!

கோலாலம்பூர் மே 21-

தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் 39-வது  ஆண்டு  பேராளர் மாநாடு, எதிர்வரும் மே 26-ஆம் தேதி முத்தியாரா வணிக வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

சுமார் 450-க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், பி20 பிரிவு மக்களுக்கு  உதவும் நோக்கில் வியாபார மேம்பாட்டுச் சேவை மையம் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ஏழ்மையில் வாழும் இந்தியக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படும் என தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின்  தலைவர் டாக்டர் ஆறுமுகம் சாமிநாதன் தெரிவித்தார்.

ஏழ்மையில் வாழும் தனித்து வாழும் தாய்மார்கள், மிக ஏழ்மையில் உள்ள குடும்பங்களை கே.கே.பி-யின் அங்கத்தினராகச் சேர்த்து, இந்த மையத்தின் வயிலாக அவர்கள் சிறு தொழில் செய்வதற்கு மிகக் குறைந்த  வட்டியில் கடன் உதவி வழங்கவிருப்பதாகவும் டாக்டர் ஆறுமுகம் தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்பாக நிர்வாகக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டு, இம்மாநாட்டில் போராளர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.

இத்தகைய திட்டத்தின் வழி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, சேமிப்புப் பழக்கத்தையும் உருவாக்க முடியும்.

கே.கே.பி-யின் பங்குதாரர்களுக்கு இம்முறை 5 சதவிகிதத்திற்கும் மேலாக ஈவுத்தொகை  வழங்கப்படவிருப்பதாகவும், அதன் விவரங்கள் மாநாட்டில் தெரிவிக்கப்படும் எனவும் டாக்டர் ஆறுமுகம்  கூறினார்.

அதோடு பேராளர்கள் இணைந்து,  3 ஆண்டுகளுக்கு ஒரு மாணவரைத் தத்தெடுத்து, அம்மாணவர்கள் பட்டதாரி ஆவதற்கான முழு செலவீனங்களையும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானமும் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

ஏழ்மையான  குடும்பச் சூழலில் உள்ள மாணவர்கள் அல்லது  படிப்பறிவு இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கி, மேற்கல்வி படிக்க வசதி இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கே.கே.பி சிறந்த அடைவுநிலையைப் பெற்று, வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் அதே வேளையில், சமுதாய அக்கறையுடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

முன்பு 5 ஆயிரம் வெள்ளி வரை கடன் உதவிகளை வழங்கிய கே.கே.பி, இப்போது 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வெள்ளி வரை சாதாரண கடனையும், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வெள்ளி வரை வியாபாரக் கடனையும் வழங்கி வருகிறது.
இது வரை 270 மில்லியன் கடன் உதவிகளை
கே.கே.பி வழங்கியுள்ளது. இது இந்தக் கூட்டுறவுக் கழகம் வளர்ச்சி அடைந்து வருவதைக் காட்டுகிறது. அதோடு இவ்வாண்டு 6 மாடி கொண்ட இரண்டு கட்டடங்களையும் கே.கே.பி சொத்துடைமையாக்கியது இன்னொரு சாதனை என்றார், டாக்டர் ஆறுமுகம் சாமிநாதன்.

சேமிக்கும் பழக்கமே சமுதாயத்தை உயர்த்தும். நீங்களும் கே.கே.பி-யில் இணைந்து சேமிப்பைத் தொடங்க நினைத்தால், கீழ்க்காணும் எண்களில் அழைக்கலாம் அல்லது மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ளலாம்!

03-92129633
மின்னஞ்சல்: kkpberhad80@gmail.com

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர் மே 21-

 

உணவகத் துறைக்கு ஒரு சில காரணங்களைக் கூறி, அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு  விண்ணப்பத்தை நிராகரித்து வந்த அரசு, கடந்த 10 வருட காலமாக எந்த ஒரு காரணத்தையும் வழங்காமல், தங்கள் துறைக்கு அந்நிய தொழிலாளர்களை வழங்காமல் முடக்கியுள்ளதாக மலேசிய முஸ்லிம் மொத்த, சில்லறை விற்பனையாளர் சங்கத்தினர் (மாவார்) தெரிவித்துள்ளனர்.

 

தேசிய முன்னணி அரசுடன் பல வருடங்களாகப் போராடித் தீர்வு கிடைக்காத பட்சத்தில், புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தோம் . ஆனால் அவர்களுடைய செயலும் எங்களை நம்பிக்கை இழக்க வைத்துள்ளது . அதிலும் சில அமைச்சர்களின் ஆலோசனை, 'போகாத ஊருக்கு வழி சொல்வது' போல் உள்ளது என மாவாரின் ஆலோசகர் பஷிர் அஹ்மட் தெரிவித்தார்.

 

நாடு தழுவிய நிலையில் சுமார் 1800 மளிகைக் கடைகள் (மினி மார்கெட்) வைத்திருப்பவர்கள் மாவார் உறுப்பினராக உள்ளனர்.

கடந்த 10 வருடங்களாக இத்துறைக்கு அந்நிய தொழிலாளர்களைக் கொண்டு வரும் முயற்சி முடக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் .

ஆனால் 20 -24 மணிநேரம் செயல்படும் பெறுநிறுவனங்களுக்கு எப்படி அந்நிய தொழிலாளர்கள் தருவிக்கப் படுகிறது? அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? எனக் கேள்வி எழுப்பிய பஷிர் அஹ்மட், நாங்களும் அவர்களைப் போல்தான் முறையாகத் தொழிலை நடத்துகிறோம், பிறகு ஏன் இந்த ஓர வஞ்சனை? என்பதை அரசு விளக்க வேண்டும்.

இந்த நாட்டின் முதுகெலும்பே சிறு நடுத்தர வியாபாரிகள்தான் என்பது அரசுக்குத் தெரியும். இந்த அரசு புதிய அரசுதான், அமைச்சர்களும் புதியவர்கள்தான், ஆனால் ஒரு வருடம் ஆகியும் அவரவர் துறை சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளாமல், வெறும் சாக்குப் போக்கு சொல்லி தப்பித்தால், நாங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். இதைத்தான் இந்த அரசு விரும்புகிறதா?

இனி இத்துறையில் பெருநிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டால் போதும் என அரசு விரும்புகிறதா? அதனால்தான் எங்களுக்கு இந்தத் தண்டனையா?

 

5000 பேருக்கும் மேல் விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர் கேட்கும் பொருள்களை எடுத்துக் கொடுப்பதற்கு, கடைகளுக்கான மற்ற வேலைகளுக்கு என எங்களுக்கு ஆட்கள் நிச்சயம் தேவை. இந்த வேலைகளுக்கு உள்நாட்டவர்  வர மறுக்கிறார்கள். அது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது? என்பதுதான் எங்களுக்கு விளங்கவில்லை.

 

இது தொடர்பாக பல அமைச்சுகளுக்குச் சென்று மகஜர் வழங்கியுள்ளோம். பல அமைச்சர்களைச் சந்தித்துள்ளோம். ஆனால், ஒரு பயனும் இல்லை. இன்னும் காலில் விழாததுதான்  மிச்சம் என பஷிர் அஹமட் தெரிவித்தார்.

 

நாங்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். எங்கள் குறையைத் தீர்க்க வேண்டும். ஒருவேளை இத்துறை மீதான அக்கறை அரசுக்கு இல்லை என்றால், எங்கள் கடைகளை மூடிவிட்டு, பாதுகாவலர் வேலைக்குச் சென்று பிழைப்பை நடத்திக்கொள்கிறோம்.  

நாங்கள் இத்துறையை விட்டு விலகினால், பாதிக்கப்படப் போவது அரசும் மக்களும்தான். காரணம்,  இந்த வியாபாரத்தைக் கையில் எடுக்க வங்காளதேசிகள் தயார் நிலையில் இருக்கிறார்கள். இப்பவே அவர்கள் சட்டவிரோதமாக ஆட்களைத் தருவித்துக் கடைகளை நடத்தி வருகிறார்கள். இத்துறை அவர்கள் வசம் சென்றால், அரசுக்கு வரியும் இல்லை, சட்ட விரோத வாசிகளின்  எண்ணிக்கையும் உயர்ந்துவிடும். அதோடு, பெருநிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்தால், விலைவாசியை அவர்கள் நிர்ணயிப்பார்கள். இதனால் மக்கள் அவதிப்படுவார்கள். எங்களைப் போன்ற சிறு வியாபாரிகள் எல்லாம் கடையை அடைத்தால், இந்த நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் பாதிப்படையும். இதைத்தான் அரசு விரும்புகிறதா? என பஷிர் அஹ்மட் கேள்வி எழுப்பியுள்ளார்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே-17

தலைநகர், லெபோ அம்பாங்கில் உள்ள பல இந்திய பாரம்பரிய கடைகள் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையினால்  மூடு விழா கண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரபலமான ஜவுளி மாளிகையான சென்னை  ‘போத்தீஸி’ன், லெபோ அம்பாங் கிளை கடையும்  அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையால் அடைக்கப்பட்டு, தற்போது அந்தக் கடை வெறிச்சோடிக் கிடப்பதுதான் உச்சக்கட்ட சோகம்.

அதுமட்டுமன்றி அப்பகுதியில் உள்ள ‘லக்ஷ்மி விலாஸ்’ உணவகம் , அப்துல் ரசாக் நகைக்கடைக்கு அருகே உள்ள பத்து பஹாட் நகைக்கடை, இன்னும் சில உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலை நீடித்தால் மேலும் பல கடைகள் மூடப்பட்டு, இந்தியர்கள் பலர் தங்கள் சுய தொழிலை கைவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பதே வர்த்தகர்களின் கவலையாய் இருக்கிறது.

அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையால் சென்னை போத்தீஸ்  நிறுவனம் லெபோ அம்பாங் கிளை உட்பட, மேலும் ஆறு கிளைகளை மூடியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்,  பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் பார்வைக்கு இப்பிரச்னையைக் கொண்டு செல்லப் போவதாகவும் வணிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பல வணிகர் சங்கங்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நாட்டில் இந்தியர்கள் தொழில்துறையில் மிளிர வேண்டும் என்பதே சமுதாயத்தின்  நோக்கம். நம் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்னையால், தொழில் துறையில் இருக்கும் சிறிய எண்ணிக்கையிலான தொழில்முனைவர்களும் காணாமல் போய் விடுவார்கள் என்கிற அச்சம் நிலவுகிறது. அரசியலுக்கு அப்பால், அனைத்து இந்திய தலைவர்களும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்திய பாரம்பரிய வியாபாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்திற்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என்பதே வணிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே-15

அந்நிய தொழிலாளர் விவகாரம் தொடர்பாக, தற்போது வர்த்தகச் சங்கங்கள் ஒன்றுகூடி பிரதமர் அலுவலகத்திற்கு முன் கருப்புக் கொடி  காட்டி அமைதி மறியல் நடத்தப் போவதாக அறிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய  மைக்கி' தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் "இது சரியான அணுகுமுறை இல்லை" என ' தமது கருத்தினை வெளியிட்டுள்ளார் .

வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், அவர்களது நிலைமை  அதனால் எழுந்துள்ள ஆதங்கம்  அனைத்தும் நியாமானதுதான். இதற்கு, மைக்கியும் எப்போதும் துணை நிற்கும். ஆனால், வீதியில் கருப்புக் கொடி காட்டி அமைதி மறியல் நடத்தும் அணுகுமுறையால், யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஆகையால், வர்த்தகர்கள் சற்று அமைதி காக்கும் படி டத்தோ கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

94 வயதான நமது பிரதமர் துன் டாக்டர் மகாதீர், அரசியல் சாணக்கியர். அவரைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். அவரிடம் உருட்டல் மிரட்டல் எல்லாம் செல்லாது. அதற்கெல்லாம் அவர் அஞ்சவும் மாட்டார் என்பதை, வர்த்தகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆதங்கத்தில் அவசரப்பட்டு நாம் எடுக்கும் முடிவால், பாதிப்பு நமக்குத்தான் ஏற்படும் என்றார் அவர்.

மைக்கி பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா கூறுகையில், மைக்கி உள்துறை அமைச்சர்  டான் ஸ்ரீ முகிடீன் யாசின், மனிதவள அமைச்சர் குலசேகரன், உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அதோடு உள்துறை அமைச்சருடன் இப்பிரச்னையைக் களைய தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். வெண்ணை திரண்டு வருவதற்குள் தாழியை உடைத்துவிடாதீர்கள் என வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்னையை நாம் நீண்டகாலமாக முந்தய அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் இருந்து எதிர்நோக்கி வருகிறோம். பக்காத்தான் அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உள்நாட்டவருக்கே முன்னுரிமை என்பதும், உள்நாட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதும்தான்  இலக்காக உள்ளது. இருந்தபோதும் நாம் எதிர்நோக்கும் பிரச்னைக்குச் செவிசாய்த்து, மனிதவள அமைச்சு பல கலந்துரையாடல்களை மாநில ரீதியில் நடத்தி, இப்பிரச்னையைக் களைய ஆய்வு செய்து வருகிறது.

நாம் கொஞ்ச காலம் அமைதியாக இருந்தால், நல்ல தீர்வு பிறக்கும். இப்போதுள்ள அரசியல் சூழலில், நாம் அவசரப்பட்டு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு, அதைச் சிலர் தங்களது அரசியல் ஆதாயமாக்கிவிடக்கூடாது. அதனால் வர்த்தகர்கள் சற்று அமைதி காக்க வேண்டும் என, டத்தோ கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்!

கோலாலம்பூர் மே -15

இது வரையில் 15 தடவைக்கும் மேல் மனிதவள அமைச்சர் குலசேகரனைச் சந்தித்தும், இந்திய பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு வரும் வணிகர்கள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வே பிறக்கவில்லை என, மலேசிய இந்திய கொல்லர்கள் - நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நகைக்கடை என்பது பாரம்பரியமிக்க தொழில். இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே ஈடுபட முடியும். ஆனால், இப்போது அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையால், எங்களால்  தொழிலை நடத்தச் சிரமமாக உள்ளது எனக் கூறிய டத்தோ அப்துல் ரசூல், லெபோ அம்பாங்கில் சில நகைக்கடைகள்  உட்பட, உணவகம், ஜவுளிக் கடைகளும் அடைக்கபட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் இது தொடர்ந்தால், லெபோ அம்பாங் தனது வணிகத் தோற்றத்தையே இழக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.

நாங்கள் பிரதமரை நம்பித்தான் இருக்கிறோம். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒருவரால் மட்டுமே இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணமுடியும்.  எனவே, இந்திய பாரம்பரிய  தொழில்துறை எதிர்நோக்கியுள்ள அபாயத்தை பிரதமர் பார்வைக்குக் கொண்டு செல்வோம். இந்திய வர்த்தகச் சமூகத்தின் கடைசி ஆயுதம்  பிரதமர் அலுவலகத்தின் முன் கருப்புக் கொடி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான். இதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழி தெரியவில்லை என டத்தோ அப்தூல் ரசூல் தெரிவித்தார்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே -14

அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையால் பல இந்தியத் தொழில்முனைவர்கள் தத்தளித்து வருவதால், தொழில்கள் முடங்க ஆரம்பித்துள்ளன. ஆனால், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண வேண்டிய மனிதவள அமைச்சு, இன்னும்  ஒரு நல்ல பதிலை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என,  மலேசிய இந்திய சிகை அலங்கார உரிமையாளர் சங்கத் தலைவர் டாக்டர் மகேந்திரன் தெரிவித்தார்.

பல மகஜர் வழங்கியும் இன்னும் தீர்வு பிறக்கவில்லை எனவும், தங்களின் பாரம்பரியத் தொழிலை அழித்துவிட வேண்டாம் எனவும் சங்கச் செயலாளர்  ராஜ சேகரன் வருத்தத்துடன் கூறினார்.

சிகை அலங்காரத் துறையைப் பொருத்தவரை இதுவரை 30 விழுக்காடு கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடைகளுக்கு வாடகை மட்டும் செலுத்தி வருகிறோம் எனக்  கூறிய ராஜசேகரன், இன்னும் எத்தனை காலம் இப்படிக் கடைகளை அடைத்து வைத்துக் காத்திருப்பது என்ற கேள்வியையும் எழுப்பினார். தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1996-ல் துன் சாமிவேலு , பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் பேச்சு வார்த்தை நடத்தி  பல இந்திய வர்த்தகர்களுக்கு அந்நியத் தொழிலாளர் அனுமதியைப் பெற்றுத் தந்தார். அது மட்டுமின்றி சிகை அலங்காரத் துறைக்குச்  சிறப்புக் கடன் உதவியும் பெற்றுத் தந்தார்.  பின்னர் அது சிகை அலங்காரத் துறைக்கான அரசு உதவி நிதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஒரு அமைச்சர் எங்கள் பிரச்னையை அமைச்சரவையில் பேசினார். இப்போது அதே பிரதமர்தான், ஆனால் 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும்,  எங்கள் பிரச்னைக்கு முடிவு சொல்லாமல் காலத்தைக் கடத்துகின்றனர்.

நாங்கள் எங்கள் பாரம்பரியத் துறையைக் காப்பாற்ற பாடுபடுகிறோம். எங்கள் பிரச்னைக்கு விரைந்து அரசு தீர்வு காணவேண்டும். இனியும் காத்திருக்கமுடியாது.
எங்கள் பிரச்னைக்குத் தீர்வு பிறக்காவிடில் பிரிஸ்மா தலைவர் அயூப் கான் சொன்னதுபோல், பிரதமர் அலுவலகம் முன் அமைதிப் போராட்டம் வெடிக்கும் என சிகை அலங்கார உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் ஒரு மனதாகத் தெரிவித்தனர்.
பாரம்பரியத் தொழிலை அழித்து விடாதீர்கள் என, அரசாங்கத்திடம் வேண்டுகோளையும் விடுத்தனர்!

(இ.எஸ்.காளிதாசன்)

கோலாலம்பூர். ஏப்:7-

தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் டி.எல்.கே கட்டடத்தில் அமைந்திருக்கும் எஸ் டபள்யூ மண்டபத்தில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை திருமண கண்காட்சி  நடைபெற்று வருகிறது.
எஸ் டபள்யூ நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்காட்சியில், திருமணத்திற்குத் தேவையான அலங்காரம், டிஜே, புகைப்பட சேவை, உணவு, சிகை அலங்காரம், முக ஒப்பனை போன்ற துறையைச் சார்ந்தவர்கள் கண்காட்சி நடத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்தியர்களின் ஆடை விற்பனையும் இங்கே உண்டு.
இந்நிலையில், நாளை அக்கண்காட்சியில் சிறப்புக் கலை நிகழ்ச்சியையும் ஏற்பாட்டுக் குழுவினர் நடத்தவிருக்கின்றனர். தொடர்ச்சியாக எஸ் டபள்யூ பெங்கியூட் மண்டபத்தில் இன்னும் சில கண்காட்சிகள் நடத்தப்படவிருப்பதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஏப்ரல்- 27

இந்திய சமுதாயத்திற்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்த மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் பல வழக்குகளைச் சந்தித்து, பின் 2010-ல் அந்நிறுவனத்தில் பங்கு வகித்த சுமார் 60 ஆயிரம் பங்குதாரர்களின் பங்கை ஒரு பங்குக்கு 80 காசு என்ற நிலையில், பங்குகளுக்கான பணத்தைக் கொடுத்து ஜி-டீம் என்ற நிறுவனம் சுமார் 93 விழுக்காடு பங்கினை வாங்கியது.
அந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் பல பங்குதாரர்கள் தங்கள் பங்கினை விற்றனர். ஆனால், அதில் இன்னும் 7 விழுக்காட்டினர் அதாவது சுமார் 5000 பங்குதாரர்கள் தங்களின் பங்கை விற்காமால், இன்று வரை பங்குதாரர்களாக உள்ளனர் என ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் புனிதன் தெரிவித்தார்

ஜி-டீம்  மைக்கா ஹோல்டிங்ஸைக் கையில் எடுத்த பிறகு, அதன் செயல்பாடு, வரவு செலவு, விற்பனை மற்றும் புதிய சொத்துக்கள் வாங்குவது  தொடர்பான எந்தத் தகவலையும் பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என புனிதன் கூறினார்.

அந்த வகையில் அந்த 7விழுக்காடு பங்குதாரர்களில் பலருக்கு விளக்கமளிக்கத் தவறியதால், கடந்த புதன் கிழமை 6 பேர் மீது மூன்று பங்குதாரர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
டத்தோ எஸ்.எம் முத்து, டத்தோ இளங்கோவன், அலமேலு ஆகிய மூன்று பங்குதாரர்களும்
ஜி -டீம் நிறுவனம், டான் ஸ்ரீ ஞானலிங்கம், டான் ஸ்ரீ குணசிங்கம், அரசு, ரமேஷ் மற்றும் மைக்கா ஹோல்டிங்ஸ் மீது வழக்குத் தொடுத்துள்ளனர் என புனிதன் கூறினார்.

ம.இ.கா, மைக்கா ஹோல்டிங்ஸ் மீது வழக்கு தொடுக்கவில்லை எனவும், பங்குதாரர்கள்தான் தொடுத்துள்ளனர் என்றும், ம.இ.கா பங்குதாரர்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார். இந்த வழக்கில் பங்குதாரர்களுக்காக  வாதாட வழக்கறிஞர்களான டத்தோ டேவிட் குருபாதம், முரளி, வசந்தி, தினேஷ் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

இந்த 9 ஆண்டு காலத்தில், பல பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. சொத்துக்களும் விற்கப்பட்டுள்ளது. லாபங்களையும் அந்நிறுவனம் அடைந்தது. ஆனால் எங்களுக்கு எந்த லாப ஈடும் தரவில்லை. என்ன நடக்கிறது? என்றும் தெரியவில்லை.
இந்த முறைகேட்டை விசாரிக்கவே வழக்குத் தொடுத்தோம் என டத்தோ இளங்கோ  தெரிவித்தார்.

ஆரம்பத்தில் மைக்காவின் மிகப் பெரிய சொத்துக்களான  ஓரியண்டல் காப்புறுதி நிறுவனம் மற்றும்  தும்போக் தோட்டம் ஆகியவற்றில் ஏதோ தில்லு முல்லு நடந்துள்ளது.
ஆரம்பத்தில் 78 மில்லயன் மதிப்பு என பங்குதாரர்களிடம்  கூறப்பட்ட   ஓரியண்டல் காப்புறுதி நிறுவனம், பிறகு 148 மில்லியனுக்கு தியூன் என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது.  அதேபோல் 10 மில்லியன் மதிப்பு என்று சொல்லப்பட்ட தும்போக் தோட்டம், 28 மில்லியனுக்கு ஒரு நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது.
97 விழுக்காடு பஙகுகளை விற்பனை செய்த பங்குதாரர்களிடம், சொத்து மதிப்பைச் சரியான முறையில் ஆய்வு  செய்து, கெனங்கா என்ற சொத்து ஆய்வு நிறுவனம் தரவில்லை என்ற சந்தேகம் உள்ளது. காரணம் ஓரியண்டல் காப்புறுதி நிறுவனத்தை வாங்கிய தியூன் நிறுவனத்தில் கெனங்கா பங்கு வைத்துள்ளது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் டான் ஸ்ரீ ஞானலிங்கம் உட்பட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவரும் என வழக்குத் தொடுத்த பங்குதாரர்களும், புனிதனும் தெரிவித்தனர்.

இந்த விற்பனை லாபம் மைக்கா ஹோல்டிங்ஸுக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு நிறுவனத்திற்குப் போனது எப்படி? எங்கள் லாப ஈடு எங்கே? எங்களுக்கு எதையும் தெரியப்படுத்தாமல் செயல்படுவது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகப் பங்குதாரர்கள் தெரிவித்தனர்.

மைக்கா ஹோல்டிங்ஸ் சர்ச்சை மீண்டும் தொடங்கிவிட்டது. இப்போது 'மைக்கா ஹோல்டிங்ஸ் 2.0' -வாக உருவெடுத்துள்ளது. இதில் என்னென்ன உண்மைகள் புதைந்து கிடக்கின்றன?... யார் யார் ஏமாற்றப்பட்டனர்? என்பதற்கான விடை மே 2 -ஆம் தேதி தொடங்கப்போகும் விசாரணையின் வழி தெரிந்துவிடும்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஏப்ரல் 26-

ராகாவின் நட்சத்திரங்களான ராம் - ஆனந்தா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நிகழ்ச்சி படைத்து வருகின்றனர். இணைபிரியா சகோதரர்களை மீண்டும் ராகவில் நிகழ்ச்சி படைக்க ராம் - ஆனந்தாவுடன் கைகோர்த்துள்ளது எம்சிஐஎஸ்  காப்புறுதி நிறுவனம்.

நீண்ட காலமாக ராகாவில் பயணம் செய்த ராம் மற்றும் ஆனந்தா, பல நேயர்களின் மனம் கவர்ந்த அறிவிப்பாளர்கள் ஆவார்கள். அதிலும் ராகாவின் துவக்கக் காலத்தில் இந்த இரு சகோதரர்களின் இணைப் படைப்பு பலருக்கு விருந்து. அதன் பின் ராம் -ரேவதி கூட்டணி, ஆனந்தா -உதயா என்ற இணைப்பில் தனி-தனி நிகழ்ச்சியில் வெற்றிநடை போட்டனர். இந்த இரு சகோதரர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதியவர்களுக்கு வழிவிட்டு ராகாவில் இருந்து ஒய்வு பெற்றனர்.

‘கலக்கல் காலை’யில் ஆனந்தா -உதயா கூட்டணியையும், ‘ஹைப்பர் மாலை’ ராம் - ரேவதி கூட்டணியையும் இழந்தது நோயர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதற்கு மருந்தாக இந்த இரு சகோதர்களும் இணைந்து இப்போது எம்சிஐஎஸ் ஆதரவில் ராகவில் புதிய நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

காப்புறுதி பாதுகாப்புத் துறையில் பல ஆண்டுகளாக மலேசியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எம்சிஐஎஸ், புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கத் தெடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 41 வயதான பிரஷேம் ஷிப்ரன் பொறுப்பேற்றுள்ளார்.

நிதிச் சேவைத் துறையில் பல ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்ட இவர், எம்சிஐஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பது அந்நிறுவனத்திற்குப் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவின் முதன்மை காப்புறுதி நிறுவனமாக எம்சிஐஎஸ் நிறுவனத்தைக் கொண்டுவருவதுதான் தமது நோக்கம் என அவர் தெரிவித்தார். பெட்டாலிங் ஜெயா ஷெரட்டன் தங்கும் விடுதியில், புதிய நியமனம் அதோடு  ராம் ஆனந்தா படைக்கும் நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவின் முதன்மை காப்புறுதி நிறுவனமான ‘சன்லம்’ குழுமத்துடன் இணைந்து, எம்சிஐஎஸ் காப்புறுதி நிறுவனம் செயல்படுவதால், புதிய மாற்றங்கள் நிச்சயம் உருவாகும் என பிரஷேம் கூறினார்.

தமது நிறுவனத்தின் செயல் திட்டங்கள்  குறித்து மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதற்கும், அவர்களுக்கு உதவும் மனப்பான்மையிலும், ராகா வானொலியுடன் இணைந்து  புதிய நிகழ்ச்சி வழங்க தமது நிறுவனம் தயார் என்றார்.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ராம் – ஆனந்தா இருவரும்,  வாரம் தோறும் சனி-ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

ஒலிபரப்புத் துறையில் இருந்தாலும், மக்களுக்கு உதவும் மனப்பான்மையை நாங்கள் கொண்டுள்ளோம். எங்கள் நிகழ்ச்சியில் எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இயலாதவர்களுக்கு உதவுவதை குறிக்கோளாக கொண்டு இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் எங்கள் ரகளை வேறு வண்ணத்தில் இருக்கும். அதேவேளை புதிய காப்புறுதி குறித்த விளக்கங்கள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என ராம் -ஆனந்தா தெரிவித்தனர்!

கோலாலம்பூர் ஏப்ரல் 22-

ஹுவாய் போன் வைத்திருப்பவர்களுக்காக அதிரடிப் பரிசுப் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது ஹுவாய் நிறுவனம்.

ஹுவாய் தங்களது வாடிக்கையாளர்களுக்காகப் புகைப்பட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

‘புகைப்பட விதிகளை மாற்றி எழுதும் ஹுவாய்’ (Huawei Rewrites the Rules of Photography) என்ற கருப்பொருளில், ஹுவாய் அறிமுகப்படுத்தியிருக்கும் போட்டியின்  மூலமாக,  ‘ஹுவாய் பி 30 புரோ’ தொலைபேசி  மற்றும் 82,960 வெள்ளி ரொக்கம் வெல்லும் வாய்ப்பும் ஹுவாய் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது.

நீங்கள் ஹுவாய் போனுக்குச் சொந்தக்காரர் என்றால், நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்கள் ஹுவாய்போனில்  புகைப்படம் எடுத்து, கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கிற்கு அனுப்பிவைப்பதுதான்.  

போட்டியில் வென்றால், பி 30 புரோ , ஹுவாய் நோவா 4,  ஹுவாய் ஜிடி கடிகாரம் மற்றும் இன்னும் பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களும்  ‘நெக்ஸ்ட் இ மேச்’ விருதுக்குத் தகுதிபெறும். இதன் வயிலாகச் சிறந்த புகைப்படத்தின் வெற்றியாளர் 82,960 வெள்ளி (USD 20,000) ரொக்கத் தொகையைப் பரிசாகப் பெறலாம். அதோடு இன்னும் நிறைய பரிசுகளும் உண்டு .

இந்தப் புகைப்படப் போட்டி 6 பிரிவுகளாகப் பிரிக்கபட்டுள்ள நிலையில்,   ஒரு போட்டியாளர் தனது பதிவுபெற்ற கணக்கிலிருந்து 30 புகைப்படம் வரை அனுப்பி வைக்கலாம்.

இந்த போட்டியின் ஆறு பிரிவுகள் :

1‘faces’,

2‘going the distance’

3‘hello, life’

4‘storyboard’

5 #emotion tag’

6 ‘life now’

இந்த ஆறு பிரிவுகளில் ஒரு போட்டியாளர் 30 புகைப்படங்களை அனுப்பலாம்.

மேல் விவரங்களைப்  பெற கீழ்க்காணும் லிங்கை அழுத்தி விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்!

anda boleh layari

https://consumer.huawei.com/my/

atau HUAWEI’s official Facebook

www.facebook.com/HuaweiMobileMY.

Semua penyertaan akan mendapat baucer RM50 daripada HUAWEI Online Store Shop.

(சண்)

மலேசியத் தொழிலாளர்களை HSBC வங்கி நிர்வாகம் ஏமாற்றுவதாக, இன்று தலைநகர் HSBC வங்கியின் முன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போரட்டம் நடத்தினர்.

வங்கி ஊழியர்களின் தேசிய சங்கம் (NUBE) என்பது மலேசியாவில் உள்ள நிதிச் சேவைகள் துறையில், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களைப் பிரதிநிதிக்கும் ஒரு தொழிற்சங்கம். இந்தச் சங்கத்தில் தற்போது 20,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் சுமார் 200 உறுப்பினர்கள் வாடிக்கையாளர் சேவை வங்கியாளர் பிரிவில் (Customer Service Banker) உள்ளவர்கள்.

HSBC கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொழிற்சங்கத்தை முடக்கவும், பிளவுப்படுத்துவதற்குமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த எச்.எஸ்.பி.சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டூவர்ட் மில்னே அச்சங்கத்தை முடக்கும் வேளையில் ஈடுபட்டதாக எதிர்ப்பாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது தற்காலிக வேலை நிறுத்தம் மற்றும் காரணம் கோரும் கடிதங்களை வெளியிட்டு அந்த அதிகாரி அச்சுறுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் முன்னோர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் என்ன செய்தார்களோ அதையே ஸ்டூவர்ட் மில்னே செய்வதாகவும் அந்த துண்டறிக்கை கூறுகிறது.
ஒரு சிலரை மகிழ்விக்கவும், மலேசியர்களின் செல்வத்தை அபகரிக்கவும், பிளவு ஏற்படுத்தி மலேசியத் தொழிலாளர்களை ஏழ்மைப்படுத்துகின்றனர்.
குறிப்பாக ஏழ்மையான மலேசியத் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்ய,  அயல்நாட்டில் இருக்கும் தலைமை அதிகாரியாகிய மலேசியர் ஒருவர், ஸ்டூவர்ட் மில்னேவின் குற்றச் செயலுக்குத் துணையிருப்பதாக அந்த அறிக்கை பகர்கிறது.

அவரது குற்றச் செயல்கள் என்ன?
1. HSBC  B40 தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துகிறது
2. தொழிற்சங்கத்தைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
3. மலேசிய சட்டங்களை அவமதிக்கிறது
4. மலேசிய அரசாங்கத்தை அவமதிக்கிறது
5. வங்கி வாடிக்கையாளர்களை பாரபட்சப்படுத்துகிறது
6. தேசிய மொழியான மலாயை அவமானப்படுத்துகிறது
என, குற்றச்சாட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன அந்த அறிக்கையில்.
HSBCயில் இருக்கும் அனைத்து B 40 ஊழியர்கள் முன்வைக்கும் இந்த முறையீட்டை, மலேசியர்கள் கவனத்தில் கொண்டு ஆதரவு தருமாறும் அவ்வூழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதன் மூலம் மலேசியாவில் பணிபுரியும் அயல்நாட்டவர்கள், மலேசிய சட்டதிட்டத்தையும்,  மலேசியத் தொழிலாளர்களையும் மதிக்கவும், நன்முறையில் நடத்தவும் உறுதுணையாக அமையும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்!

புதிய தோற்றத்தில்
பாரம்பரிய தைப்பிங் சந்தை!

தைப்பிங் ஏப்ரல் 17-

1880 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தைப்பிங் சந்தை, மலேசியாவின் பழைமை வாய்ந்த சந்தையாக வர்ணிக்கப்படுகிறது. இச்சந்தையை அரசு அதன் பாரம்பரிய வடிவமைப்பு மாறாமல்
புதுப்பிக்கவுள்ளதாக வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சுரைடா தெரிவித்தார்.
இதன்வழி அங்கு வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
212 லோட் கடைகள் அமைக்கப்பட்டு, 2 வகையான கட்டடங்களில் ஈரமான பொருள்களின் வியாபாரம் தனிப் பிரிவிலும், இதரப் பெருள்களின் வியாபாரம் தனிப்பிரிவிலும் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சந்தை பயணிகளின் வருகையை ஈர்க்கும் வண்ணம் அதன் பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்கப்படும். அடுத்த ஆண்டு இதன் தொடக்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு,  சுமார் 3 ஆண்டுகளில் இதன் கட்டுமானப்பணிகள்  நிறைவு பெறும் எனவும், தற்போது தொடக்கக் கட்டமாக 10 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதுப்பிக்கப்படும் வேலைகளுக்குக் கட்டம் கட்டமாக மானியம் வழங்கப்பட்டு,  2- 3 ஆண்டுகளில் இச்சந்தை கட்டிமுடிக்கப்படும் என,  சந்தையைப் பார்வையிட்ட பின் அமைச்சர் சுரைடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, அரசின் இந்த முயற்சியை அங்குள்ள வியாபாரிகள் வரவேற்பதாகவும், தற்போது 80 வெள்ளி வாடகை செலுத்துவதாகவும், ஒருவேளை   புதுப்பிக்கப்பட்ட பின், தைப்பிங் நகராண்மைக் கழகம்  வாடகையை உயர்த்தினால், அதனால் பதிப்பு எதுவும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர்! 

தனது சொந்த தயாரிப்பில் உருவான மசாலைப் பொருள்களைக் கொண்டு, தரமான சைவ – அசைவ பிரியாணி வழங்கி அசத்தி வருகிறது பத்துமலை போலீஸ் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள பெரியாச்சி உணவகம்.

தமிழ்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட  ஸ்பெஷல் ஃபில்டர் காபி பொடியைக் கொண்டு தயாரிக்கப்படும் காஃபி இங்கு பலராலும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது.

கோழி, ஆடு, மீன், இறால், முட்டை என வகை வகையான அசைவ பிரியாணியை வழங்குவதோடு, சைவ பிரியர்களுக்கு என பிரத்யேகமாக சைவ பிரியாணியும் செய்து அசத்துகிறார்கள் இங்கே. அதுமட்டுமல்லாது பொன்னி அரிசியில் தயாரான, சுவையான சைவ – அசைவ சாப்பாடும் இங்கே கிடைக்கிறது. விதவிதமான வகைகளில், பாரம்பரியச் சுவையில் மணக்க மணக்கத் தயாரகும் இவர்களின் உணவு வகைகளில் ‘அஜினோ மோட்டோ’ எனும் வேதியல் பொருள் கலக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியாச்சி பிரியாணி ‘வித்’ ஃபில்டார்காபி-ன்னா செமையா இருக்கும் என்கிறனர் ருசி பார்த்தவர்கள்.

குளுகுளு ஏர்கண்டிஷன் வசதியுடன், சுத்தமான சூழலில் வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் வண்ணத்தில் அமைந்துள்ள பெரியாச்சி உணவகம், அண்மையில்தான் திறப்பு விழா கண்டது.

இப்போதே தயாராகுங்கள் பெரியாச்சி உணவகத்தின் ‘கம’கம அசத்தல்’ சுவையை குடும்பத்தோடு ருசிக்க!

 

 

 

Recent News