loader
லிங்கேஸ்வரனுக்கு  நடிகர் என்ற திமிரா?

லிங்கேஸ்வரனுக்கு நடிகர் என்ற திமிரா?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஏப்ரல் - 9

நாட்டில் இப்போது கோவிட்-19 பாதிப்பினால், வருமானம் குறைவான பல குடும்பங்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல இளைஞர்கள்  களத்தில் இறங்கி உதவி செய்கிறார்கள்; பாராட்டுக்கள். ஆனால் நாட்டில் ஒரு விவாதம் நடக்கிறது. உதவி செய்வதை ஏன் படம் பிடித்துப் போடவேண்டும்? என்று ஒரு தரப்பும். ஏன் போடக்கூடாது? என ஒரு தரப்பும்  சொல்கிறது. இரு தரப்பும் சொல்லும் நியாயங்கள் ஏற்புடையதுதான். இதில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை நான் கூறுகிறேன் என் பார்வையில் . 

சிலர் மக்களிடம் இருந்து பெற்ற நன்கொடையில் உதவி செய்கிறோம்,  அதற்கான சாட்சி இப்படிப்பட்ட படம் என்கிறார்கள். இன்னும் பலருக்கு உதவிகளைச் செய்ய, இம்மாதிரியான விஷயங்கள் ஊன்றுகோலாக இருக்கும் என  சொல்கிறார்கள். ஏற்புடைய காரணம்தான். இவர்கள் அரசியல் காரணத்திற்காகச் செய்யவில்லை. இவர்களுக்கு அங்குச் சீட்டும் இல்லை.

அதே போல் ,  உதவி பெறுபவர்களின் படத்தைப் போட்டு  ஏன் அவர்களை இன்னும் குறுக வைக்கிறீர்கள்  என்று சிலர் கேள்வி கேட்பதிலும் நியாயம் உண்டு. 

காரணம் நமது சமூக கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்றால்,  பல உறவுகளின் பிணைப்பில் உள்ளது. அவர்கள் என்ன சொல்வார்கள், இவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயம் நம் சமுதாயத்தில் உண்டு. அதோடு புரணி பேசும் ஒரு சமூகத்தின் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்பதும் நிதர்சன உண்மை.

இப்படிப்பட்ட சூழலில்  இருதரப்பின் நியாங்களும் ஏற்புடையவை. ஆனால் இந்தப் புரணி பேசும் கும்பல்  நமக்கு எந்தக் காலத்திலும் உதவியாக இருக்கமாட்டார்கள். ஆனால், புகைப்படம் எடுத்த குழு எல்லா நேரத்திலும் யாருக்காவது பிரயோஜனமாக இருப்பார்கள். இதில் எதை ஏற்பது, எதைத் தவிர்ப்பது என்பது அறிவார்ந்த சமூகத்திற்கு தெரியும்.

சரி இப்போது ஒரு நடிகரின் ஆதங்கத்திற்கு வருவோம்.  பேய் வேட்டை நிகழ்ச்சி புகழ் லிங்கேஸ்வரன் அண்மையில்  ஒரு அமைப்போடு இணைந்து இப்படி ஒரு தொண்டூழியத்தில் ஈடுபட்டுருக்கிறார்.  

அவர் பதிவு செய்த படத்திற்கு ஒரு விமர்சனம். பிரபலத்தைத் தேடி நகர்கிறார்  என்ற கீறல் அவரைக் காயப்படுத்தி உள்ளது. அதனால் சற்று அதிகமாகவே மனதில் தேங்கி இருந்த ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். அதோடு அவர் மற்ற தொண்டூழியர்களுக்கும் ஆதரவாகப் பேசியிருந்தார். 

நடிகர்கள் உதவி செய்யவில்லை என்றால், ஏன் செய்யவில்லை? என்ற கேள்வி. செய்தால் புகழுக்காக என நையாண்டி. உண்மையைச் சொன்னால் நடிகர் என்ற திமிர் என்கிறார்கள். அமைதியாக இருந்தால் கர்வம், மண்டகனம் எனச் சொல்கிறார்கள்.  

என்னதான் உங்கள் பிரச்னை? நான் நாட்ட விட்டுப் போய்விடவா?  என்று அந்த ஆதங்கத்தில் மலேசியக் கலைத்துறையைச் சார்ந்த சிலரின் கசமுசா கலாட்டாவையும் கொட்டித் தீர்த்துவிட்டார், கொஞ்சம் அதிகமாக.

சகோதரர் லிங்கேஸ்வரன்  ஆதங்கத்தில் சிலரின் குறைகளும், அதிலும் கலைத்துறையைச் சார்ந்த சிலரின் கீழறுப்பு வேலையும்  இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால்தான் அவரது ஆதங்கம் கொஞ்சம் அதிகமாகஒ பேச வைத்துள்ளது. 

நண்பருக்கு எனது அறிவுரை.  உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். ஆனால் உங்கள் கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகள் சற்று நிதானத்தை இழக்கின்றது. அதைத் தவிர்த்து உண்மையைப் பொறுமையாக ஆணித்தரமாகவும் தைரியமாக இன் முகத்துடனும் கூறலாம் என்பதே  என் கருத்து ஒரு நண்பனாக. தொடரட்டும் உங்கள் பணி.

மற்றபடி  உதவி பெறுபவர்களின் அனுமதி இருந்தால் தைரியமாகப்  புகைப்படத்தைப் போடலாம். காரணம் இது சிலருக்கு வெறும் புகைப்படம். ஆனால் இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின் வாழப்போகும்  நம் சந்ததிக்கு இது பொக்கிஷம்.

இங்கு நாம் வாழும் காலத்தில் பத்திரப்படுத்தி வைக்கும் ஒவ்வொரு ஆவணங்களும் குறிப்புகளும், புகைப்படங்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.  குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் நமது பதிவுகள் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் என்னென்ன நடவடிக்கையில் ஈடுபட்டோம் என்பதனை அந்தத் தலைமுறை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

நம் முன்னோர்கள் நமக்குப் பத்திரப்படுத்திய பதிவுகள் எப்படி   நமக்குப் பயன் அளிக்கிறதோ அதேபோல் தான் இதுவும்.

ஆகையால், புரணி பேசுபவர்களைப் பின்னால் ஒதுக்கிவிட்டு, முன்னால் அடிவைத்து அடுத்தக்கட்ட நகர்வை  நோக்கிப் பயணியுங்கள் சகோதார சகோதரிகளே.

மேலே உள்ள தலைப்பு உங்களை ஈர்க்க போடப்பட்ட மந்திரக்கோல்.  அதுவும் லிங்கேஸ்வரன் சொன்ன ஆதங்கத்தில் ஒன்று என்பதைத் தெரிவிக்கின்றோம்!

1 Comments

  • SP Saravanan
    2020-04-10 11:21:26

    நானும் அந்த வீடியோவை மிழுமையாக பார்த்தேன். நியாயத்தை வெளிப்படுத்த அவர் சொன்னல் ஒரு சில விஷயங்கள் ஏற்புடையதாக தெரியவில்லை. உதவி செய்து நல்ல காரியமே. ஏன் செய்தோம் எதற்கு செய்தோம் என்று விளக்கம் கூறியதில் ஒரு சில இடங்களில் எல்லை மீறிய பேச்சு முகம் சுழிக்க வைத்தது.

leave a reply

Recent News