loader
தோட்டப்புற, புறநகர் பி-40 ஏழைக் குடும்பங்களுக்கு அரசின் பொருளாதார உதவித்திட்டம் சேரவில்லை!  - எம்.ஏ.பி. குற்றச்சாட்டு

தோட்டப்புற, புறநகர் பி-40 ஏழைக் குடும்பங்களுக்கு அரசின் பொருளாதார உதவித்திட்டம் சேரவில்லை! - எம்.ஏ.பி. குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப்ரல் 08:

அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் ஏழை, எளிய மக்களான பி-40 குடும்பங்கள் வருமானம் இன்றி அடிப்படைத் தேவைக்கும் உணவுக்கும் சிரமப்படுவதை உணர்ந்த மத்திய அரசு, அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் அண்மையில் ‘பிரிஹாத்தின்’ பொருளாதா உதவித் திட்டத்தை அறிவித்தது. 

அரசின் இந்த முயற்சி வரவேற்புக்குரியது என்றாலும், தோட்டப்புற மற்றும் புறநகர் பி-40 ஏழைக் குடும்பங்களுக்கு அரசின் பொருளாதார உதவித்திட்டம் சேரவில்லை என்று மக்கள் முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் அ.குமரன் தெரிவித்துள்ளார்.

பிரிஹாத்தின் உதவித் திட்டம் மட்டுமல்ல; மற்ற சமூக நலத் திட்டங்களின் பயனும் பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. முதலில் இதைப் பற்றி தோட்டப்புற, புறநகர் பி-40 ஏழைக் குடும்பங்களுக்குத் தெரியவே இல்லை.

மலேசிய இந்திய சமுதாயத்தில் உள்ள நலிந்த பிரிவு மக்களுடன் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் எம்ஏபி உறுப்பினர்கள். அந்த அடிப்படையில், அண்மையில் கட்சி சார்பில் அடிப்படைத் தேவைக்கான உணவுப் பொருட்களை வழங்குவதற்காகத்ன் தற்பொழுது தோட்டம் தோட்டமாக செல்லும்போது, அரசாங்கம் அறிவித்துள்ள பெரும்பாலான நலத்திட்டங்கள் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று அத்தகைய குடும்பத்தினர் முறையிடுவதாக குமரன் சொன்னார்.

‘நக்மா’ போன்ற அரசுசார் நிறுவனங்களைப் பற்றிகூட இந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட அரசாங்க அமைப்புகளும் இந்த மக்களை அணுகுவதில்லை. குறிப்பாக, மிகவும் நெருக்கடியைச் சந்திக்கும் இந்த நேரத்தில்கூட பிரிஹாத்தின் உதவித் திட்டங்கள் ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கும் இந்த மக்களைச் சென்றடையவில்லை என்று எம்.ஏ.பி. கட்சியின் பொருளாளர் சி.மணிமாறன் வருத்தம் தெரிவித்தார்.

எனவே, பி-40 தரப்பைச் சேர்ந்த அனைத்துக் குடும்பங்களையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் பொழுதெல்லாம் அனைத்து தோட்டப்புற, புறநகர் பி-40 ஏழைக் குடும்பங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் மணிமாறன் மேலும் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News