loader
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் முடிதிருத்தும் தொழிலில் மிகப்பெரும் பின்னடைவு!  முடி திருத்தும் நிலைய உரிமையாளர் சங்கம்!

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் முடிதிருத்தும் தொழிலில் மிகப்பெரும் பின்னடைவு! முடி திருத்தும் நிலைய உரிமையாளர் சங்கம்!

(நக்கீரன்)

கோலாலம்பூர், ஏப்.07:

1969 மே சம்பவத்திற்குப் பின் சிகை அலங்காரத் தொழில் தற்பொழுது மிகவும் பின்னடைவையும் பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளதாக மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தின் புரவலரும் ஆலோசகருமான டாக்டர் த.மதிராசன் வருத்தம் தெரிவிக்கிறார்.

அந்தச் சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பின் நிலைமை மெல்ல மெல்லச் சீரடையத் தொடங்கியது. அப்போது எழுந்த கடுமையான சூழ்நிலையைக் கையாளுவதற்கும், மக்களிடையே பொது அமைதியை நிலைநாட்டவும் அந்தச் சமயத்தில் தேசிய அளவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின், வர்த்தக நடவடிக்கைக்கும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் ஒரு கட்டுப்பாட்டுடன் அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மற்ற வர்த்தக நடவடிக்கையைப் போல முடி திருத்தும் கடைகளும் காலை 8:00 மணியளவில் திறக்கப்பட்டு, அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் கடையை மூடி விடுவோம். இதனால், பெரிய அளவில் தொழில் பாதிக்கப்பட வில்லை. வருமானத்திலும் பெரிய இழப்பு ஏற்படவில்லை. வாடிக்கையாளர்களும் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.

ஆனால், தற்போது அரசு பிறப்பித்துள்ள ஆள் நடமாட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தால் முடிதிருத்தும் நிலையங்களைச் சாத்தி இருக்கும் நிலை நான்காவது வாரத்தை எட்டுவதால், நாட்டில் உள்ள முடி திருத்தும் நிலைய உரிமையாளர்கள்  பெரிதும் வருமான இழப்பை எதிர்கொண்டுள்ளனர் என்று சங்கத்தின் முன்னாள் தலைவருமான மதிராசன் தெரிவித்தார்.

கோவிட்-19 சிக்கலால் உலக நாடுகளைப் போல மலேசியாவும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் மக்களின் பொருளாதார சிரமத்தைத் தணிப்பதற்காக அரசு அறிவித்துள்ள ‘பிரிஹாத்தின்’ திட்டம் பி-40 தரப்பு மக்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும் என்பது உண்மைதான் எனினும், முடி திருத்தும் நிலையங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு அரசாங்கத்தின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. இதனால் எங்களின் சுமை கூடுதலாக உள்ளது.

முதலாளிகள் தங்களின் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில், குறிப்பாக மனித வள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளதை நிறைவேற்ற வழி இல்லாமல் தடுமாறி நிற்கிறோம் என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் வெ. மகேந்திரன் கூறுகிறார். 

கடந்த மூன்று வாரங்களாக முடி திருத்தும் நிலையங்கள் சாத்தி இருப்பதால் அடியோடு வருமானம் இல்லை; அதேவேளை தொழிலாளர்களைத் தற்காக்க வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால், அந்தக் கடப்பாட்டை எப்படித் தீர்ப்பது என்று வழி தெரியவில்லை என்று மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.

முடி திருத்தும் தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கடை உரிமையாளர்கள் வருமானம் இன்றி பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் இந்த நேரத்தில், குடும்பங்களைப் பராமரிக்கவும், தொழிலாளர்களின் நலம் பேணவும் தடுமாறிக்கொண்டு இருக்கிறோம் என்று சங்கத்தின் செயலாளர் இரா. இராஜசேகரன் கூறுகிறார்.

தீபகற்ப மலேசியா முழுவதும் சங்கத்தில் பதிவு பெற்ற இரண்டாயிரம் முடிதிருத்தக் கடை உரிமையாளர்களும் பதிவு பெறாமல் சுமார் ஆயிரம் கடை உரிமையாளர்களும் இருக்கின்ற வேளையில், அந்தந்தக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் பெரும்பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்த நெருக்கடியான நேரத்தில், எங்களுக்கும் மாற்றுவழி எதுவும் தெரியவில்லை என்று சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் த.சுதந்திரன் தெரிவிக்கிறார். 

இருந்தபோதும் கடந்த 6-ஆம் நாள் பிரதமர் அறிவித்துள்ள சில அணுகூலங்கள் எங்களுக்கு ஆறுதலைத் தறுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுத் தொழிலாளர்-களுக்கான லெவிக் கட்டணத்தில் அரசு அறிவித்துள்ள 25% சலுகை, சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களின் நிர்வாகச் சுமையை ஓரளவு தணிக்கும் என்று கூறும் த.சுதந்திரன், தொழிலே நடைபெறாத நிலையில் தனியார் கட்டடங்களுக்கு வாடகைப் பணம் செலுத்தவேண்டி உள்ளது; தொழிலாளர்-களின் ஊதியப் பிரச்சினை பெரும் சுமையாக இருக்கிறது; எல்லாவற்றுக்கும் மேலாக, இலட்சக் கணக்கான வாடிக்கையாளர்களின் இக்கட்டான நிலைக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

 

ஒரு சில வாடிக்காளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முகச்சவரம் செய்து கொள்ள வருவார்கள். அதைப்போல ஒரு சிலர் ஒரு வாரத்திற்கு ஒரு முறையும், இன்னும் சிலர் பத்து நாட்களுக்கு ஒரு முறைகூட  முடி திருத்த வருவார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம், தாடி மீசையுடன் மிகுந்த அசௌகரியத்துடன் இருப்பதாக சுதந்திரன் தெரிவிக்கிறார்.

 

இன்னும் பல வாடிக்கையாளர்கள் முடி வளர்ந்து தலை சூடாக இருப்பதாகவும், அதனால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை, முடிதிருத்தும் நிலைய உரிமையாளர்களும்  கடையைத் திறந்து தொழிலைப் பார்க்கக் காத்திருப்பதாகவும் சுதந்திரன் தெரிவித்தார்.

அப்படி அரசு ஏதும் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்தால், உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன், மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அனுமதித்து  கைகளை கிருமி நாசினி திரவத்தின் மூலம் கழுவ வைத்தும், சுவாசக் கவசத்தை அணியவைத்தும் முடி திருத்தம் செய்ய கடை உரிமையாளர்களைத் தயார்ப்படுத்துவோம். 

 

ஒரு சில இடங்களில் தனிப்பட்டவர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும்  முடி திருத்தம் செய்வதை நாங்கள் அறிவோம். ஆனால், முடிதிருத்தும் காரணத்திற்காக வெளியில் சென்றால் காவல் துறை அனுமதிப்பதில்லை. உணவு, மருந்து ஆகிய இரு காரணங்களுக்காக மட்டுமே காவல்துறை அனுமதிப்பதால், ஒரு சிலர் தற்காலிகமாக தங்கள் வசிப்பிட அளவில் முடிதிருத்திக் கொண்டு சமாளிப்பதும் நடைபெறுகிறது.

எனவே, இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று மலேசிய சிகை அலங்கார உரிமையாளர் சங்கத்தின் சார்பில் எதிர்பார்ப்பதாக சுதந்திரன் மேலும் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News