loader
ஒரே அறிவிப்பு.... ஓடோடி வந்த மக்கள்! - இலங்கை மக்களின் நிஜ முகம்!

ஒரே அறிவிப்பு.... ஓடோடி வந்த மக்கள்! - இலங்கை மக்களின் நிஜ முகம்!

இலங்கையில் குண்டுவெடித்த தினத்தன்று ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கையில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பல்வேறு மக்கள் காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நிறைய பேருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இதனால் இலங்கை தேசிய ரத்த வங்கி சார்பில் ரத்தம் தேவை என அறிவிப்பு செய்யப்பட்டது. வலைதளங்கள் வாயிலாகவும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் இந்த அறிவிப்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்திலேயே நூற்றுக்கணக்கான மக்கள் இலங்கை தேசிய ரத்த வங்கியில் குவியத் தொடங்கினர். அப்போதும் தொடர்ந்து குண்டுகள் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருந்தது. இதனால் அரசு சார்பில் ``மக்கள் ஓர் இடத்தில் அதிகமாகக் கூட வேண்டாம்; பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதைக் கண்டுகொள்ளாத மக்கள் ரத்த வங்கியில் குவியத் தொடங்கினர். ஒருகட்டத்தில் அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் திணறியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என அங்கு காத்திருந்து தானம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகப் பரவ, இந்தத் துயரத்திலும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய இலங்கை மக்களைப் பலரும் பாராட்டினர். ``இதுதான் இலங்கை மக்களின் நிஜ முகம். இந்த மனிதம் இருக்கும் வரை இலங்கை என்றும் வீழாது" எனப் பலரும் மக்களைப் பாராட்டி வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News