loader
வாடகைக்கு இருப்பவர்களுக்கு நலத் திட்டம் அறிவிக்க வேண்டும்!

வாடகைக்கு இருப்பவர்களுக்கு நலத் திட்டம் அறிவிக்க வேண்டும்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்.5

கோவிட்-19 பாதிப்பால் உலகம் முழுக்கப் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதிலிருந்து வர்த்தர்களும், பொது மக்களும் மீண்டு வருவதற்கான ஊக்குவிப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. வாகனக் கடன் மற்றும் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் தங்களுக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகைக்கு  இருப்பவர்கள் 6 மாத காலத்திற்கு வாடகை செலுத்த வேண்டியதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்.

அதே சமயத்தில் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களிலும் வீடுகளிலும் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட  வேண்டும் என்று மலேசிய புறநகர் மனித வள மேம்பாட்டு இயக்கமான டிரா மலேசியாவின் சரவணன் சின்னப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடு மற்றும் வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு விட்டிருப்பவர்கள் தற்போதைய சூழ்நிலையை அறிந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என்று சலுகை கொடுத்துள்ளனர்.

அது போல 30 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு வரை வாடகையைக் குறைத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனாலும், ஒரு சிலர் தங்கள் கட்டடங்களில் வாடகைக்கு இருப்பவர்களைக் கட்டாயம் வாடகை செலுத்த வேண்டும் என்று கூறியிருப்பது அவர்களது உரிமை  என்றாலும், இது குறித்து மக்களின் சுமையைத் தீர்க்கும் வகையிலான திட்டத்தை அல்லது அறிவிப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார்.

தனியாருக்குச் சொந்தமான வீடு மற்றும் கடைகளை வாடகைக்குப் பெற்றிருப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு கால கட்டத்திற்கு வாடகை செலுத்தத் தேவையில்லை என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  தொலைக்காட்சியிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது போல மலேசியர்களுக்கும் நல்லதோர் அறிவிப்பு வந்தால் சிறப்பாக இருக்கும்.

வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு விட்டிருக்கும் தனி நபர்கள் அந்தக் கட்டடங்களுக்கு வங்கி கடன் பெற்று அதை இன்னும் செலுத்தி முடிக்காமல் இருந்தால், இந்த காலகட்டத்தில் அவர்கள் வங்கிக்கு கடனைத் திரும்பச்  செலுத்துவதில் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

எனவே மக்கள் நலன் கருதி வாடகை  வீட்டில் குடியிருப்போருக்கு ஒரு சிறப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டியது இப்போதைய அவசியத் தேவை என சரவணன் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News