loader
காற்றில் உயிருடன் உலாவும் கொரோனா!? என்ன சொல்கிறது WHO?

காற்றில் உயிருடன் உலாவும் கொரோனா!? என்ன சொல்கிறது WHO?

 

காற்றில் கொரோனா 8 மணி நேரம் உயிர் வாழும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வாட்ஸப்பில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து சி.என்.பி.சி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட இந்த கட்டுரையில், "கொரோனா வைரஸ் மருத்துவப் பணியாளர்களுக்கு 'காற்று வழியாக பரவுமா' என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆராய்ந்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.

"ஒரு குறிப்பிட்ட பரப்பு அதற்கு ஏற்றாற்போல் இருந்தால், கொரோனா வைரஸ் காற்றில் உயிர்வாழ முடியும் என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மார்ச் 17-ஆம் தேதியன்று, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மூன்று முதல் நான்கு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சுகாதார வசதிகள்

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய WHO தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கிப்ரியேசோஸ், "கொரோனாவும் இபோலாவும் ஒரே மாதிரியானவை அல்ல, கொரோனா என்பது காற்றின் மூலமாகப் பரவும் ஒரு வைரஸ். எனவே இது அதிகம் ஆபத்தானது, மிகக்குறுகிய காலத்திலேயே 24 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

மேலும், மார்ச் 16-ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ந்து வரும் நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் மரியா கெர்கோவ், "கொரோனா வைரஸ் சிறிது நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்று கூறினார். அதாவது இந்த வைரஸ்கள் இயல்பைவிட அதிக நேரம் காற்றில் உயிருடன் இருக்க முடியும்.

"மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சுகாதார வசதிகள் அதிக ஆபத்தில் உள்ளன. எனவே, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், காற்று மூலம் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஆனால் சாதாரண மக்களுக்கு தொற்று இல்லை என்றால் மருத்துவ முகக்கவசங்களை எப்போதும் அணிய வேண்டியதில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட நபருடன் வாழ்கிறீர்கள் என்றால் முகக்கவசத்தை பயன்படுத்தலாம்," என்றார் அவர்.

மார்ச் 23 அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங், "இதுவரை காற்று மூலம் பரவியதால் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோவிட் -19 காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீன அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக மருத்துவமனைகளின் ஐ.சி.யு மற்றும் சி.சி.யுக்களில், இந்த ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள, கூடுதல் தரவுகள் தேவை," என்று தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மலின்போது வெளியே வரும் நீர்த்துளிகளே, அத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு பரவக் காரணமாக இருந்தன. எனவே மற்றவர்களிடம் இருந்து சற்று தூரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். அதோடு, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்."

உண்மையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்கள், இதுபோன்ற தூசுப்படலம் (Aersol) தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

தூசுப்படலத்தில் உள்ள நீர் துகள்கள் நீர்த்துளிகளைவிட லேசானவை. மேலும் அவை காற்றில் நீடித்து இருக்கக்கூடியவை.

இத்தகைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ், காற்று மூலம் நோயை தொற்றச் செய்யும் ஆபத்தான நீர் துகள்களை உருவாக்கும் என்பதும், இது சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் நிராகரிக்கவில்லை என்றே தெரிகிறது.

ஆனால் இந்த ஆபத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News