loader
இந்து ஆலயங்கள் நலிந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்! - பொன்.வேதமூர்த்தி

இந்து ஆலயங்கள் நலிந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்! - பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், மார்ச் 26:

இந்த நாட்டில் வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் சவாலையும் சிரமத்தையும் ஒருசேர எதிர்நோக்குகின்ற இந்த நேரத்தில், இந்து ஆலயங்கள் ஒதுங்கி நிற்காமல் நலிந்த இந்தியர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) சார்பில் அதன் தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை இந்துக்கள் நம் ஆலயங்களுக்கு அள்ளிக் கொடுத்து வருகின்றனர். கொடிய நச்சுக்கிருமியான கொரோனா வைரஸ் பரவலால் நாடு மிகவும் பாதித்துள்ள தற்போதைய நிலையில், நலிந்த நிலையில் இருக்கின்ற நம் மக்களின் அடிப்படைத் தேவைக்காக நம் ஆலயங்கள் கொடை அளிக்க முன்வர வேண்டிய நேரமிது.

அன்றாட வாழ்வுக்காக அல்லல்படும் பி-40 மக்களுக்கு ஏற்கெனவே உதவிக்கரம் நீட்டிவரும் எம்ஏபி கட்சியுடன் அதிகமான அரசுசாரா அமைப்பினரும் இணைந்துள்ளனர். அந்தத் தரப்பினரின் மூலம் ஆலய நிர்வாகத் தரப்பினர் நிதியளித்து தங்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தலாம்.
ஆன்மாக்கள் அத்தனையும் பரம்பொருளின் கூறு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நமக்கெல்லாம் அன்பையும் மனித தன்மையைப் போதித்துவரும் சனாதன தரும கோட்பாட்டின் அடிப்படையில் ஆலயங்கள் தங்களின் நிதியை அளிக்கலாம்.

ஆலயமும் சமுதாயத்தில் ஓர் அங்கமாகும். எனவே, ஆலயத் தலைவர்கள் தங்களின் கனிவையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவதற்கு இது ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாகும். அத்துடன் மற்ற ஆலயங்களின் பொறுப்பாளர்களுக்கும் இதைப் பற்றி எடுத்துரைக்கும்படி கேட்டுக் கொள்வதாக நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான பொன்.வேதமூர்த்தி, இதன்தொடர்பில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News