loader
நிர்பயா வழக்கு 4 பேருக்கு இன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றம்!

நிர்பயா வழக்கு 4 பேருக்கு இன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றம்!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவ்வழக்கில் கடும் போராட்டத்திற்குப் பிறகு நிர்பயாவின் தாய்க்கு நீதி கிடைத்துள்ளது. தண்டனையில் இருந்து தப்புவதற்கு, குற்றவாளிகள் மேற்கொண்ட கடைசி கட்ட முயற்சிகளும், இன்று அதிகாலையில் தோல்வியில் முடிந்தன.

டெல்லியில் துணை மருத்துவ மாணவி நிர்பயா, 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடுமையாகச் சித்தரவதை செய்து தாக்கப்பட்டதோடு, பேருந்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.  இச்சம்பவம பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணவி நிர்பயாவுக்கு, சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29ஆம் தேதி அந்த மாணவி உயிரிழந்தார். இதனால் கொந்தளித்த மாணவியரும், சமூக ஆர்வலர்களும், குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி போராட்டம் நடத்தினர்.

இந்த வழக்கில், ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

நிர்பயா வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இதை டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன.
மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக, இவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மாறி மாறி மனு தாக்கல் செய்தனர். இதனால், அவர்களைத் தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, தனது கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக ஏற்று, உச்சநீதிமன்றம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விசாரித்தது. இறுதியில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இதன்மூலம், அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து தடைகளும் தகர்ந்தன. இதையடுத்து, டெல்லியில் உள்ள திகார் சிறையில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் என்பவர் தான் நிறைவேற்றினார்.

முன்னதாக அதிகாலையில் இருந்தே திகார் சிறை வளாகம் பரபரப்பாக இருந்தது. சிறைக்கு முன்பு ஏராளமானோர் கூடியிருந்தனர். இதையொட்டி சிறை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்திய வரலாற்றில் இடம் பிடித்த நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, நிர்பயாவின் தாய் மேற்கொண்டு வந்த நீதிப் போராட்டம் கடும் சவால்களுக்கு மத்தியில் வென்றுள்ளது. காமக்கயவர்களுக்கு இந்த வழக்கு தக்க பாடமாக இருக்க வேண்டும். நிர்பயா நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்பதற்கு, இன்றைய விடியலே ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக ஒலிக்கிறது!

0 Comments

leave a reply

Recent News