loader
டெல்லி சட்டசபை தேர்தல் தொடங்கியது! பிஜேபி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மும்முனை போட்டி!

டெல்லி சட்டசபை தேர்தல் தொடங்கியது! பிஜேபி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மும்முனை போட்டி!

டெல்லி: தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தலைநகர் டெல்லியைக் கைப்பற்றுவதில் காலம்காலமாக கட்சியினரிடையே போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள ஆம் ஆத்மி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டது.

நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தமட்டில் டெல்லியில் அதிக இடங்களை எந்தக் கட்சி கைப்பற்றுகிறதோ அந்தகட்சியே மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜகவே வென்றது.

இதையடுத்து அந்தக் கட்சியே மத்தியிலும் ஆட்சியைஒ பிடித்தது. அப்படி மத்தியில் ஆளும் அரசை தீர்மானிக்கும் டெல்லியை ஆளப்போவது யார் என்பது வரும் 11-ஆம் தேதி தெரியவரும். 1.47 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில் 2.32 லட்சம் பேர் 18 முதல் 19 வயதுடைய வாக்காளர்கள் ஆவர்.

ஆண் வாக்காளர்கள் 81,05,236 பேரும், பெண் வாக்காளர்கள் 66,80,277 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 869 பேரும் மூத்த குடிமக்கள் 2,04,830 பேரும் உள்ளனர். 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் டெல்லி முழுவதும் 2,689 இடங்களில் 13,750 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 516 இடங்களில் உள்ள 3,704 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 40 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெறும் ஷாகீன்பாக் ஓக்லா சட்டசபை தொகுதியின் கீழ் வருகிறது.

கடந்த 2015-இல் ஆம் ஆத்மி கட்சி 54.3 சதவீத வாக்குகளை பெற்றது. பாஜகவோ 32 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 9.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. இந்த முறை டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு சரி என்பது 11-ஆம் தேதி தெரியவரும்!

0 Comments

leave a reply

Recent News