loader
தமிழகத் தேர்தலில் 70.90 சதவிகித வாக்குகள் பதிவானது!

தமிழகத் தேர்தலில் 70.90 சதவிகித வாக்குகள் பதிவானது!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தவிர மற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது. இதேபோல் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கும், அங்கு காலியாக இருக்கும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். முதல் முறையாக ஓட்டுப் போடும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர்.

ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சற்றுத் தாமதமாகத் தொடங்கியது.

சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த போது எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்கப் பட்டது.

தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தமிழக போலீசாருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, துணை ராணுவ படையினரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இதனால் ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு இடைவேளை இன்றி மாலை வரை நடைபெற்றது. சித்திரை திருவிழா காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மாநிலம் முழுவதும் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

அதிகபட்சமாக நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் 79.75 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.

மத்திய சென்னையில் 57.86 சதவீத வாக்குகளும், வட சென்னையில் 61.76 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சராசரியாக 73.68 சதவீத வாக்குகள் பதிவாயின.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

ஓட்டு எண்ணிக்கை வருகிற மே மாதம் 23-ந் தேதி நடைபெறுகிறது. வெற்றி யாருக்கு? என்பது அப்போது தெரிந்துவிடும்!

0 Comments

leave a reply

Recent News