loader
தலைநகரில் அனைத்துலக எம்.ஜி.ஆர் சேவை மையம்! தமிழக அமைச்சர் திறந்து வைக்கிறார்!

தலைநகரில் அனைத்துலக எம்.ஜி.ஆர் சேவை மையம்! தமிழக அமைச்சர் திறந்து வைக்கிறார்!

தமிழகத்திற்கு அப்பால், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், அனைத்துலக எம்.ஜி.ஆர் சேவை மையம் வரும் 9.11.2019 (சனிக்கிழமை) அன்று உதயமாகிறது. இதன் அதிகாரப்பூர்வ துவக்க விழாவில், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜா கலந்துகொண்டு, இம்மையத்தைத் திறந்து வைக்கிறார்.

2017-ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, கோலாலம்பூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சென்னை விஜிபி குழுமத்தின் தலைவர் செவாலியர் டாக்டர் விஜிபி சந்தோசம் கலந்துகொண்டதோடு, ஆறரை அடி எம்.ஜி.ஆர் உருவச்சிலையை அன்பளிப்பாக வழங்கினார். இச்சிலையினை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்குழு தலைவர் எஸ்.பி.மணிவாசகம் பெற்றுக்கொண்டார்.

எஸ்.பி.மணிவாசகத்தின் தொடர் முயற்சியால் அனைத்துலக மலேசியா எம்.ஜி.ஆர் சேவை மையம், பிரிக்பீல்ட்ஸில் நிறுவப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா நவம்பர் 9, சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
ம.இ.காவின் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினருமான டத்தோ டி.மோகன், விஜிபி சந்தோசம், கிம்மா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சையது இப்ராஹிம், தமிழகத்தின் கெங்கா நிறுவன தலைவர் 'உழைப்பின் சிகரம்'  செந்தில்குமார், கலைமகள் பத்திரிகை ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம், உரிமையாளர் ராஜன், மாமல்லபுரம் பூபதி, சுவாமி மகேந்திரன், சுவாமி சாய் ரவிச்சந்திரன், பாபுஜி, ஆனந்த சுவாமிகள், தமிழக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், லேடர் செழியன், மீடியா பாஸ்கர், டாக்டர் சுபாஷ் ஆகியோர் இவ்விழாவிற்குச் சிறப்பு வருகை புரியவிருக்கின்றனர்.
மலேசிய எம்.ஜி.ஆர் ரசிகர்கள், எம்.ஜி.ஆர் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு எஸ்.பி.மணிவாசகம் கேட்டுக்கொண்டுள்ளார்!
 

0 Comments

leave a reply

Recent News