loader
உலகை அச்சுறுத்தும் ‘டே ஜீரோ’     தண்ணீர் பஞ்சத்தை நோக்கி உலகம்!!  சிலாங்கூர் – பினாங்கு கொஞ்சம் கவனம்!

உலகை அச்சுறுத்தும் ‘டே ஜீரோ’    தண்ணீர் பஞ்சத்தை நோக்கி உலகம்!! சிலாங்கூர் – பினாங்கு கொஞ்சம் கவனம்!

(சிவாலெனின்)

வறண்ட நிலம், ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. தண்ணீருக்காக மக்கள் அங்கும் இங்கும் அலைந்து நா வறண்டு விட்டது. தண்ணீர் பஞ்சத்தில் மரண ஓலங்கள். இப்படியொரு சூழ்நிலையைக்  கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆனால், இது கற்பனையல்ல. உலகை அச்சுறுத்தும் மிரட்டலாக இது நிகழும் சாத்தியம் வெகுதூரத்தில் இல்லை.

‘டே ஜீரோ’ ( DAY ZERO) குறித்து உலகில் பெரும்பான்மையோர் அறிந்திருக்கவில்லை. இது என்னமோ ஆங்கிலப் படத்தின் பெயர் என நினைத்து விடாதீர்கள். உலகை அச்சுறுத்தும் தண்ணீர் வறட்சியைதான் ‘டே ஜீரோ’ எனக்  கூறுகிறார்கள்.

    உலகின் பெரும் பகுதி நீரால் சூழ்ந்திருப்பதால் தண்ணீர் பஞ்சம் என்பது கனவு என நினைத்து விடாதீர்கள். உலக பரப்பளவில் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அவற்றில் 97 விழுக்காடு நீர் உப்பு நீராகும்.  மீதமுள்ள 3 விழுக்காடு தூய்மையான நீராக  இருந்தாலும், மக்கள் பயன்பாட்டுக்கு 1 விழுக்காடு நீர் மட்டுமே உகர்ந்த நிலையில் உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

   உலக சுகாதார அமைப்பின் ஆய்வியல் படி தற்போதைய நிலையில் 18 விழுக்காடு பேருக்கு மட்டுமே பாதுகாப்பான நீர் கிடைப்பதாகக் கூறும் அதேவேளையில் , வரும் 2025-ல்  உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு மக்கள்  பாதுகாப்பான நீர் கிடைக்காமல் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குவார்கள் என எச்சரிக்கிறது. மேலும், உலகில் 80 விழுக்காடு மரணங்கள் மற்றும் உடல் உபாதைகள் தண்ணீர் தொடர்பான நோய்களால் நிகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

   ‘டே ஜீரோ’ வால் பாதிக்கப்படும் உலகின் முதல் நகரமாய்  தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன்  (CAPE TOWN) விரைவில் அந்த பரிதாப நிலைக்கு ஆளாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப் டவுன் தென் ஆப்ரிக்காவின் முக்கிய சுற்றுலா நகரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் தண்ணீர் பஞ்சத்தால் கண்ணீரில் மிதக்கும் நகரமாய் உருமாறியுள்ளது.

  கடந்த  2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்  அந்நகரில் வாழும் சுமார் 40 லட்சம் மக்களுக்கு முற்றிலும் தண்ணீர் கிடைக்காமல் போகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசாங்கம் அந்நகரில் 200 குடிநீர் மையங்களை அமைத்து ஒவ்வொரு மையங்களிலிருந்தும் 20,000 வீடுகளுக்குக் குடிநீர்  வழங்கியுள்ளது. இது வெறும் தற்காலிகம் மட்டுமே. இவ்வாண்டில் உலகின் தண்ணீர் இல்லாத நகரமாய் கேப் டவுன் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்பிரச்னைக்கு கையில் எந்தவொரு தீர்வும் இல்லை என்பதால், இனி இயற்கையையின் அதிசயங்கள் எதுவும் நிகழ்ந்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு என்பது குறிப்பிடத்தக்கது. கேப் டவுனை அடுத்து உலகில் மேலும் 8 பெரும் நகரங்கள் இந்த ‘டே ஜீரோ’ வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. அவற்றில் இந்தியாவின் பெங்களூர் உட்பட பிரேசிலின் ஸா பாலொ, சீனாவின் பெய்ஜிங், எகிப்தின் கெய்ரோ, இந்தொனேசியாவின் ஜகர்த்தா ஆகியவற்றோடு மெக்சிகோ நகரமும் இஸ்தான்புல் நகரும் அதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகில் 100 மில்லியன் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் கிடைக்காமல் போவதற்கு பருவநிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு எனப் பல காரணங்கள் இருக்கும் நிலையில், நீர் விரயமும் அதில் அடங்கும். நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து இன்னமும் மக்களிடையே தீவிர விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

   ஒரு தனிநபருக்கு ஆண்டுக்கு 1700 கனமீட்டர் நீர் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கவில்லையெனில் அங்குத் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக உலக நீர் வங்கி கூறுகிறது. ஆனால், சில நகரங்களிலும் நாடுகளிலும் இதைவிடக் குறைவான பயன்பாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

 

மலேசியா விதிவிலக்கு அல்ல !

    இயற்கை வளமும் நீர் வளமும் செழித்து விளங்குவதோடு, அதிக மழையும் பெய்து வரும் மலேசியாவிற்கு ‘டே ஜீரோ’ வெறும் கனவு என்று நினைத்து விடாதீர்கள். அந்த அச்சுறுத்தலில் மலேசியாவும் பாதிக்ககூடிய சாத்தியம் இருப்பதை நாம் உணரத்தான் வேண்டும். நீர் பயன்பாட்டில் மலேசியர்கள் காட்டி வரும் அலட்சியமும், அக்கறையின்மையும் நமது அடுத்த தலைமுறைக்கு பெரும் பாதிப்பினை உருவாக்கும் என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.

   உலக சுகாதார அமைப்பு வரையறுத்திருக்கும் நீர் பயன்பாட்டோடு ஒப்பிடுகையில், இரண்டு மடங்கு அதிகமாக ஒவ்வொரு நாளும் மலேசியர்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 லீட்டர் நீரை மட்டுமே தனிமனிதர் ஒருவர் பயன்படுத்த வேண்டும். ஆனால், மலேசியாவில் நாள் ஒன்றுக்குத் தனி மனிதரின் நீர் பயன்பாடு என்பது 221 லிட்டராகும்.

     தென்கிழக்காசியாவிலேயே அதிகமான நீரைப் பயன்படுத்தும் நாடாக மலேசியா விளங்குகிறது. இச்செயல்பாடு மிகவும் விவேகமற்றது.மலேசியர்கள் நீர் பயன்பாட்டு விவகாரத்தில் இன்னமும் விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியப் போக்கினைக் கடைபிடித்து வருகிறார்கள்.

   மலேசியாவில் பயன்படுத்தப்படும் நீரில் 30 விழுக்காடு நீர் மட்டுமே அருந்துவதற்கும் ,சமையல் போன்ற உன்னத நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 70 விழுக்காடு நீர் கார் கழுவதற்கு, துணி துவைப்பதற்கு, செடிகளுக்குப் பாய்ச்சுவதற்கு உட்பட பிற காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. நீரை விவேகமாய் பயன்படுத்துவதை மலேசியர்கள் இப்போதிலிருந்தே வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    மலேசியாவில் இப்பிரச்னையில் சிக்கப் போகும் முதல் மாநிலமாக சிலாங்கூரும், அதனைத் தொடர்ந்து பினாங்கும் பாதிக்ககூடிய பெரும் சாத்தியம் உள்ளது. நாட்டில் அதிகமான நீரைப் பயன்படுத்தும் மாநிலமாக இவ்விரு மாநிலங்களும் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொள்ளும் போது வருங்காலத்தில் இம்மாநிலத்தின் நீர் வாழும் மக்களுக்குப் போதுமானதாக இருக்காது என்பதுதான் உண்மை.

   சிலாங்கூர் மட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் நாம் பார்க்கும் போதும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஜனத்தொகையின் எண்ணிக்கை தண்ணீர் பயன்பாட்டோடு ஒப்பிடுகையில், அதன் தேவையும் பயன்பாடும் பன்மடங்கு உயர்ந்திருக்கும். போதுமான தண்ணீர் இல்லாமல் திண்டாடும் சூழல் மலேசியாவைச் சூழ்ந்து கொள்ளும் அபாயம் நம்மை நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

    தண்ணீர் பற்றாக்குறையால் மனிதர்கள் மட்டுமின்றி இயற்கை மற்றும் இயற்கை வாழ் உயிரினங்களும் பெரும் பாதிப்புகுள்ளாகின்றன. காடுகளும் இயற்கை வளங்களும் அதன் தன்மையை தொலைத்திடும்  அதேவேளையில் விலங்குகளும் பிராணிகளும் கூட பெரும் பாதிப்பை அடைவதோடு மடிந்தும் போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

   முன்பெல்லாம் ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிக்கப்படும்.அந்த நீரில்தான் துணி துவைப்பது, கார் கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்தல், பாத்திரங்கள் கழுவுவது, குளிப்பது போன்றவை மேற்கொள்ளப்படும். ஆனால், இன்றைய  நவீன சூழலில் அதனை யாரும் பின்பற்றுவது இல்லை.

 

    இதற்கிடையில், வீட்டிலேயோ அல்லது பொது இடங்களிலோ நீர்க் கசிவு ஏற்பட்டிருந்தால், அதனை உடனடியாகச் சரி செய்தல் அல்லது உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று பழுதுபார்த்தல் வேண்டும். குழாய் கசிவினால் ஏற்படும் நீர் விரயம் மலேசியா மட்டுமின்றி உலகின் பெரும் நாடுகளின் தலைவலி என்றுதான் கூற வேண்டும். வினாடிக்கு ஒரு சொட்டு வீதம் நீர் விரயமானால் ஆண்டுக்கு அது 10,200 லிட்டராக வீணாகிறது என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.

   அரசாங்கம் தண்ணீர் பயன்பாட்டுக்கு எதிராகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். எந்தவொரு வரையறையும் இல்லாத நிலையினால்தான் மலேசியாவில் தண்ணீர் பயன்பாடு வரையறுக்கப்பட்ட நிலையை காட்டிலும் அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது.

   அதேவேளையில், தொழிற்சாலைகள் அதன் கழிவுகளை ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலப்பதை தடுப்பதோடு, அவர்கள் பயன்படுத்தும் தண்ணீருக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மலேசியாவில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு இல்லாததால், அவை அளவுக்கு மிதமிஞ்சிய நிலையில் பயன்படுத்தப்படுகிறது.

   தனி மனித அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் கணக்கியல் நிலையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிகையைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு குடும்பமும் நீரைப் பயன்படுத்த வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவைக்  காட்டிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நீருக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விவேகமாகவும் சிக்கனமாகவும் நீரைப் பயன்படுத்த மலேசியர்கள் முன் வருவார்கள்.

    நீர்ப் பற்றாக்குறையினால்  உலகில் சுமார் 240 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாத கால அளவு   பாதிக்கப்படும் அதேவேளையில், அசுத்தமான நீரைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் உலகில் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள் என்பது பெரும் துயரம். தண்ணீர் பயன்பாட்டில் விவேகமும் அக்கறையும் இல்லையெனில் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் இந்த உலகம் பெரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என்பது மட்டும் மறுத்திட முடியாத உண்மையாகும்.

   அதுமட்டுமா?ஆசைக்கும், பேராசைக்கும், ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் நிகழ்ந்த உலகப் போர், வருங்காலத்தில் தண்ணீருக்காகவும் நிகழலாம் என்பதை மறுத்திட முடியாது. உணவிற்காக மூன்றாம் உலகப் போர் நிகழும் சாத்தியம் உண்மையானால், அது தண்ணீருக்கான முதன்மையைக் கொண்டிருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

      ஒவ்வொரு தனி மனிதனிடஇருந்து தொடங்கும் விவேகமும் அக்கறையும் நம் நாட்டை மட்டுமின்றி இந்த உலகத்தையே அழிவிலிருந்து பாதுகாக்கும். தண்ணீரை விவேகமாய் பயன்படுத்துவோம். மனிதத் தன்மையோடு வாழ்வியல் கொள்வோம். தண்ணீர் பஞ்சத்தை தன்நிலை சிந்தனையோடு முறியடிப்போம்!

 (சிவா லெனின்)

 

0 Comments

leave a reply

Recent News