loader
மலேசியத் திரைப்படத்தின் வசூல் குறைந்தது!  30 ஆயிரத்தைக் கூட எட்ட முடியாத சோகம்...

மலேசியத் திரைப்படத்தின் வசூல் குறைந்தது! 30 ஆயிரத்தைக் கூட எட்ட முடியாத சோகம்...

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஆகஸ்ட் 7-

கடந்த 2018-ஆம் ஆண்டு 8  மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அதில் 7 திரைப்படங்கள் வசூலில் லட்சத்தை எட்டிப்பிடித்தன. ஆனால், இவ்வாண்டு 3 மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, 30 ஆயிரம் வரைக்கும் கூட வசூலை ஈட்டவில்லை என ஃபினாஸ் வெளியிட்டிருக்கும் மலேசியத் திரைப்பட வசூல் பட்டியல் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

'சட்ட' திரைப்படம் 27,637.50 வெள்ளி வசூலையும், 'அழகிய தீ'  26,851.00 வெள்ளி வசூலையும், 'குற்றம் செய்யேல்' 14,615.00 வெள்ளி வசூலையும் பெற்றுள்ளதாக அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'காளி முனி தரிசனம்' திரைப்படம்  2 லட்சத்தைத் தாண்டி வெற்றி நடை போடுவதாகத் திரைப்படக் குழுவினர் கூறிவருகின்றனர். 

ஃபினாஸ் வெளியிடும் வசூல் பட்டியலுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் முழு வசூல் என்ன என்பது தெரியவரும். 

ஆனால், தற்போது பட்டியலில் உள்ள இந்த மூன்று திரைப்படங்களும் வசூலில் மிகப்பெரிய சரிவைக் கொடுத்துள்ளது. 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வசூல் மலேசியக் கலை உலகத்திற்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். அந்த வகையில் வசூல் ரீதியில் இந்த முன்று திரைப்படங்களும் தோல்விப்  படங்களே.

கடந்த ஆண்டு '33km from Kl' திரைப்படம்  18,779.00 வெள்ளி வசூலை எட்டிய நிலையில்,  மாபெரும் வெற்றிப் படமாக 'வெடிகுண்டு பசங்க' திரைப்படம் அமைந்தது. 1,330,302.40 வெள்ளி வசூலை அப்படம் குவித்தது. அதைத் தொடர்ந்து 'திருடாதே பாப்பா திருடதே' திரைப்படம் 314,524.00 வெள்ளி வசூலையும்,  'நீயும் நானும்' திரைப்படம் 307,956.96 வெள்ளி வசூலையும், 'வில்லவன்' திரைப்படம் 194,484.50 வெள்ளி வசூலையும், 'சுகமாய் சுப்புலட்சுமி' 138,970.00 வெள்ளி வசூலையும், 'கோரா' திரைப்படம் 129,815.75 வெள்ளி வசூலையும், 'அச்சம் தவிர்' திரைப்படம் 120,396.70 வெள்ளி வசூலையும்  பெற்றுள்ளன.

அந்த வகையில், கடந்த ஆண்டு மலேசியத் திரைப்படங்கள் வசூலில் லட்சத்தை எட்டத் தொடங்கிய நிலையில், இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து  30 ஆயிரத்தைக் கூட எட்டாததற்கு என்ன காரணம் என்பதை, மலேசியத் திரை உலகத்தினர் சற்று ஆராய வேண்டும். தங்களுக்குப் பிடித்த படைப்புகளுக்கு மக்கள் வெகுவாக ஆதரவு வழங்கி வருகிறார்கள் என்பதற்கு வசூலே சாட்சி.  

கூடுதல் கவனத்துடன் மலேசியத் திரை உலகம் செயல்படவேண்டிய காலகட்டம் இது. மக்களுக்குப் பிடிக்கும் படைப்புகள் கொண்டாடப்படுகிறது.  ஆகையால், தவறு எங்கே எனபதைச் சற்று ஆய்வு செய்யுங்கள்.

இவ்வாண்டு, இதுவரை மலேசியக் கலை உலகத்தின் அடைவு நிலை வசூல் ரீதியிலும், மக்கள் மனம் கவர்ந்ததிலும் மிகப்பெரிய சரிவு  என்பதனை 'தமிழ் லென்ஸ்' வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது!

0 Comments

leave a reply

Recent News