loader
சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச இந்திய வர்த்தக இயக்கத்தின்  ஸீரோ டு ஹீரோ விருது பெறுகிறார் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன்

சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச இந்திய வர்த்தக இயக்கத்தின் ஸீரோ டு ஹீரோ விருது பெறுகிறார் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன்

கோலாலம்பூர், ஜூலை 31-

படிவம் 3 கல்வியோடு பள்ளி வாழ்க்கைக்கு முழுக்கு போட்டவர். ஒரு நிறுவனத்தில் சாதாரண ஓடும் பிள்ளை (டிஸ்பேட்ச்) வேலையில் வெறும் 400 வெள்ளி சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கியவர். இன்று இவரது வளர்ச்சி பார்ப்பவர்களை மலைக்க வைக்கிறது.

மெரிடைம் நெட்வொர்க் சென். பெர்ஹாட் எனும் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரராக வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார். இவரது வர்த்தகமோ ஏற்றுமதி - இறக்குமதி தொழிலைச் சார்ந்தது.

தினசரி சரக்குக் கப்பலோடு வர்த்தகத்தில் ஈடுபடும் இவரது நிறுவனம், தற்போது புருணை, சிங்கப்பூர், பேரா லுமூட், மலாக்கா, பாசீர் கூடாங், குவாந்தான் போன்ற துறைமுகங்களுக்கு தன்னுடைய வர்த்தக கிளைகளை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது.

வாழ்க்கையில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், இறுதியில் எதையுமே எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. இருக்கும் வரையில் நமக்காக உழைப்பவர்களையும் நமக்காக வாழ்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்த வேண்டுமென்ற ஒரு கொள்கை மட்டுமே நம்மை நிலைத்து வெற்றி பெறச் செய்யும் என்ற கருத்தை மட்டும் விடாமல் கடைப்பிடித்து வருவது தான் தம்முடைய அபாரமான வெற்றிக்கு காரணம் என்கிறார் போர்ட்கிள்ளான் துறைமுகத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்திருக்கும் டத்தோஸ்ரீ ஆர்.ஜெயேந்திரன்.

இனி வரப்போகும் காலங்களில் தம்முடைய இந்த நிறுவனத்தின் முழு பொறுப்புகளையும் தம்மோடு இது நாள் வரை இணைந்து பணியாற்றியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தனது 5 வயது மகளுடன் வாழ்நாளை கழிக்க வேண்டும் என்பது தான் மிகப் பெரிய ஆசை என்றும் அவர் கூறுகிறார். இந்த உலகத்தில் தம்முடைய மகளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாம் பக்கத்தில் இருந்து செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.

இது நாள் வரையில் தமக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய குருவாகவும் போதகராகவும் இருந்த தம்முடைய காலஞ்சென்ற தகப்பனார் கடந்த 19 ஆண்டுகளாக தம்மோடு இல்லை என்றும் தாம் அனுபவிக்கும் எல்லா சுகபோகங்களையும் உடனிருந்து அனுபவிப்பதற்கு அவர் இல்லை என்பது தமக்கு மிகப் பெரிய வருத்தமாக இருந்தாலும் தினசரி தம்முடைய தாயாரோடு நேரம் செலவிடுவதற்கு தவறியதில்லை.

வாழும் காலத்திலேயே நமது பெற்றோர்களையும் முன்னோர்களையும் வாழ்த்திவிட வேண்டும். இன்று தன்னுடைய தகப்பனார் தன்னோடு இல்லை என்று வருத்தப்படுவது ஒருபுறம் இருந்தாலும் தாயார், மனைவி, மகள் ஆகிய மூன்று உறவுகளுடனும் வாழ்கின்ற நாளை முழுமையாக செலவிடுவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்பதையும் அவர் கூறுகிறார்.

எல்லாவற்றையும் விட வயது முதிர்ந்த தாயாரோடு நேரம் செலவிடுவது மட்டும் தான் தம்முடைய வாழ்நாளில் மிக முக்கியமான நடவடிக்கையாக கருதுவதாகவும் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் கூறுகிறார்.

ஆண்டு ஒன்றுக்கு 1,000க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்களை கையாள வேண்டிய சூழல். இதனால் உலகம் முழுவதும் உள்ள துறைமுகம், அதன் நடத்துநர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் நல்லதொரு தொடர்பு இருக்கிறது.

இந்நாட்டில் இருக்கின்ற ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனங்களில்  முதல் நிலைப் பட்டியலில் மெரிடைம் நெட்வொர்க் சென். பெர்ஹாட் இடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் 10 நிலையில் இடம் பிடித்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் நாள் தொடங்கி இவர்களோடு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆகும்.

நம்பகத்தன்மை, பாதுகாப்பான சேவை இவற்றையும் கடந்து வாடிக்கையாளர்களுடனான வர்த்தக ரீதியிலான உறவு, இவை எல்லாம் தான் இந்நிறுவனத்தின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது என்றார் அவர்.

சுமார் 40 பணியாளர்களோடு இந்நிறுவனம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் வேண்டியது எல்லாம் பெற்றுவிட்டதாக கூறும் அவர், வாழ்க்கையில் மனிதநேயத்தோடு செயல்படுவது, இனம் - மதம் கடந்து சேவையாற்றுவது, போட்டி - பொறாமை- கோவம் கடந்த வாழ்க்கை இவையெல்லாம் தான் தமது வாழ்நாளில் தமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் கூறுகிறார்.

வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் வருகின்ற வாய்ப்பை உதாசீனப்படுத்திவிடக் கூடாது. இது மலேசியர்களுக்கு தாம் சொல்ல விரும்பும் கருத்து எனவும் அவர் கூறுகிறார்.

வாழ்க்கையில் தாம் ஒரு காலகட்டத்தில் தினசரி வீட்டிலிருந்து 26 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்ற நிலை இருந்தது. ஆனால் இன்று அதே காலம் தம்மை ‘ரோல்ஸ் ராய்ஸ்’ எனும் உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றில் பயணிக்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது.

அந்த கார் மட்டுமல்ல, அது போல இவரிடம் பல விலையுயர்ந்த கார்கள் இன்று இருக்கின்றன. இவர் இந்நாட்டின் வர்த்தகர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்வீபா எனப்படும் சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச இந்திய வர்த்தகர் இயக்கம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஏற்பாடு செய்திருக்கும் விருது விழாவில் ஜீரோ டு ஹீரோ எனும் விருது வழங்கி கௌரவிக்கிறது.

இந்த நாட்டு இளைஞர்களுக்கு டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் ஒரு முன்னுதாரணமாக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News