loader
கோல்ஃப் விளையாட்டுக்குத் தகுதி   வசதி அல்ல திறமை!

கோல்ஃப் விளையாட்டுக்குத் தகுதி வசதி அல்ல திறமை!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜுலை 22-

கோல்ஃப் விளையாட்டு என்பது வசதியானவர்கள், பணக்காரர்களுக்கான விளையாட்டு என்ற கண்ணோட்டம்  பலருக்கும் உண்டு. ஆனால், கோல்ஃப் விளையாட்டிற்கு வசதியும், பணமும் மட்டுமே தகுதி அல்ல, அதற்கான ஆர்வமும் திறமையும் இருந்தாலே, கோல்ஃப் விளையாட்டில் நாமும் கொடி நாட்டலாம் எனச் சொல்ல வைத்திருக்கிறார், நம் இந்திய சமுதாயத்தின் எளிய பிள்ளையான டர்ஷன் குணசேகரன்.

18 வயதான டர்ஷன், 8 வயதில் இருந்து கோல்ஃப் விளையாடுகிறார். இவருடைய சாதனைகளைப் பார்ப்பதற்கு முன், இவர் எப்படி கோல்ஃப் விளையாட்டு உலகத்திற்குள் நுழைந்தார் என்பதை,  அவருடைய தந்தை குணசேகரன் கூறுகிறார்... கேட்போம்.

என் மகனுக்குச் சிறு வயதில் தாழ்வு மனப்பான்மை இருப்பதை நான் உணர்ந்தேன். நான் ஒரு கோல்ஃப் விரும்பி. என் மகனையும் நான் கோல்ஃப் விளையாட அழைத்துச் செல்வேன். அங்குப் பல சமூகப் பிள்ளைகளுடன் பழகவிட்டேன். அவனுடைய குணாதிசியங்களில் மாற்றம் வந்தது. என் பிள்ளைக்கு அவன் மீதே ஒரு நம்பிக்கை பிறந்தது; அது எனக்குப் பிடித்தது. பிறகு மிகவும் ஆர்வத்துடன் கோல்ஃப் பயிற்சி பெற்று நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டர்ஷன்.

அதன் பின் கோல்ஃப் துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பல போட்டிகளில் கலந்துகொண்டு, பல சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றார்.

சிலர் சொல்வதுபோல் இது வசதியானவர்களுக்கான விளையாட்டு அல்ல. விளையாட்டுத் திறமையோடு ஒருவரின் குணாதிசியங்கள்,  சிந்தனைகள், சுயநம்பிக்கையை வளர்க்கக் கூடிய ஒரு விளையாட்டு என்கிறார் டர்ஷனின் தந்தை குணசேகரன்.

கடந்த ஆண்டு அனைத்து நிலை சாம்பியன் போட்டியில் வெற்றிபெற்ற டர்ஷன்,

எம் .எஸ்.எஸ்.எம் பள்ளிகளுக்கான போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து பல முறை வெற்றியாளராக  வலம்வந்துள்ளார். மேலும், தனியார் பெறுநிறுவனங்கள் நடத்திய கோல்ஃப் போட்டிகளிலும் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.

கோல்ஃப் விளையாட்டு டர்ஷனுக்கு அமெரிக்காவில் ஒரு கல்வி வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா பன்ஹாண்டின் ஸ்டேட் பல்கலைக்கழகம், நான்கு வருடம் கோல்ஃப் பயிற்சி எடுக்க டர்ஷனுக்கு முழு உதவித் தொகை வழங்கி, வாய்ப்பு வழங்கியுள்ளது. அதோடு அவர் 4 ஆண்டுகள்  உடலியல் கல்வியில் பட்டப் படிப்பு படிக்க, 60 சதவிகிதம் கல்வி உதவித் தொகை வாய்ப்பை டர்ஷனுக்கு வழங்கியுள்ளது.

இந்த வாய்ப்பு டர்ஷனுக்கு வீடு தேடி வரவில்லை. அவருடை சுய நம்பிக்கையால் கிடைத்த வாய்ப்பு.

அவருடைய கோல்ஃப் விளையாட்டு பயிற்றுனர்களில் ஒருவரான சுரேன்  என்பவர் கொடுத்த தகவலைக் கொண்டு இந்த வாய்ப்புக்கு விண்ணப்பம் செய்ததாகக் கூறுகிறார் டர்ஷன்.

இந்தக் கல்விக்கு விண்ணப்பிக்க பல ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கோல்ஃப் போட்டியில் அவர் அடைந்த அடைவு நிலை, கல்வித் தகுதி மற்றும் பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். அதன் பின்னர்தான் வாய்ப்பு தொடர்பான தகவல், விண்ணப்பித்தவர்களுக்குத்  தெரிவிக்கப்படும்.

அனைத்திலும் தகுதி பெற்று, வருகிற  ஆகஸ்ட் 14-ஆம் தேதி, டர்ஷன் அமெரிக்கா செல்லவுள்ளார். இவருடைய வெற்றிக்கு ஏணியாக இருந்த டர்ஷனின் கோல்ஃப் பயிற்றுனர்கள், நண்பர்கள், சகப் போட்டியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரையும் அழைத்து நன்றி சொல்லும் விதமாக, ஒரு விருந்து நிகழ்சியை ஏற்பாடுசெய்து, அவர்கள் ஆசிர்வாதத்துடன், அவர்கள் முன்னிலையில் டர்ஷன் தனக்குக் கிடைத்த வாய்ப்புக் கடித ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

டர்ஷனின் தந்தை ஒரு சரியான இலக்கை நோக்கித் தன் மகனைத் தயார் செய்துள்ளார்.

இந்த நேர்காணல் எதற்கு என்றால், வாய்ப்பு என்பது எல்லா இடத்திலும் உண்டு; அது அனைவருக்கும் பொதுவானது. இங்கு எதுவும் தனிக்குழுவிற்குச் சொந்தமானது அல்ல. முயற்சி ஒருவரை நிச்சயம் திறமைசாலி ஆக்கும்.  வாய்ப்பு ஒருவரை வெற்றியாளராக மிளிரச் செய்யும். கோல்ஃப் துறையில் இந்திய விளையாட்டாளர்கள் அதிகரிக்க வேண்டும், அதற்கு நாம்தான் முயற்சி எடுக்கவேண்டும்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News