loader
ரஜினியின் ‘அண்ணாத்த’யை கொண்டாடும் இலங்கைக் கவிஞர் அஸ்மின்  வைரலாகும் வரவேற்புப் பாடல்!

ரஜினியின் ‘அண்ணாத்த’யை கொண்டாடும் இலங்கைக் கவிஞர் அஸ்மின் வைரலாகும் வரவேற்புப் பாடல்!

இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞர் அஸ்மின். இவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதையான ‘வானே இடிந்ததம்மா’ மக்களின் விழிகளை குளமாக்கியது. இதேபோல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்ததும் இவர் எழுதிய இரங்கல் பாடலும் எஸ்.பி.பி.யின் விசிறிகளை கண்கலங்க வைத்தது. பின்னணி இசையோடு, வீடியோ வடிவில் இவை வெளிவந்தன.

இலங்கை அரசின் சிறந்த கவிஞருக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் கவிஞர் அஸ்மின். இவர் இலங்கைத் தமிழ்ச்சங்கங்களின் வழியே தமிழ் நிலப்பரப்பில் தமிழ் இலக்கியங்களின் பெருமையை பறைசாற்றி வருகிறார். இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனியின் நடிப்பில் வெளியான ‘நான்’ திரைப்படத்தில் புதுமுக கவிஞரை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் சர்வதேச அளவில் ‘புதிய பாடலாசிரியருக்கான தேர்வு’ போட்டி நடத்தப்பட்டது. சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் கவிஞர் அஸ்மின் இயற்றிய ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ பாடல் வெற்றிபெற்று அந்த திரைப்படத்தில் இடம்பெற்றது.

அதன் பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களுக்கான பாடல்களை எழுதினார் அஸ்மின். தனது யூட்யூப் சானலின் வாயிலாக ஏராளமான தனியிசைப் பாடல்களையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் வகையில் ரஜினி ‘என்ட்ரி சாங்’ பாணியில் ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த - நீ இனிமேலும் முடியாது ஏமாத்த’ என்னும் பாடலை கவிஞர் அஸ்மின் எழுதி தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தான் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலை அவரோடு இணைந்து கிரிசான் மகேசன்,ரோஜா சிவக்குமார் ஆகியோர் பாடியுள்ளனர். ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த' பாடல் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

அஸ்மின் இதற்கு முன்பு, ‘விஸ்வாசம்’ படத்திற்கு அவரே தொடக்கப்பாடல் எழுதி, அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

‘’தூக்குதுரை பேரை கேட்டா

வாயை பொத்தும் நெருப்பு...

தூக்கி வைச்சு கொஞ்ச சொல்லும்

பச்சை புள்ள சிரிப்பு’’ என்னும் அந்தப்பாடல் இணையத்தில் அப்போது வைரலானது.

இப்போது அண்ணாத்தயை வரவேற்று பாடல் எழுதியுள்ள அஸ்மின் இதுகுறித்து  எம்மிடம் கூறுகையில், ”இலங்கையில் இருந்தாலும் தமிழ்தான் எங்கள் தாய்மொழி. இலங்கையில் இருப்பதாலும், கரோனா சூழலாலும் கோடம்பாக்கத்தில் தங்கி பாட்டெழுத முடியவில்லை. ஆனாலும் நமக்குள் இருக்கும் தனித்திறனை வெளிப்படுத்தும் களமாக இப்போது சமூகவலைத்தளங்கள் உள்ளன. அதனால்தான் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் தருணத்தில் அவர்களது படங்களுக்கு நானே சுயமாகத் தொடக்கப்பாடல் எழுதுவேன். என்னைப்போல் திரைத்துறையில் சாதிக்கும் எண்ணம் உள்ளவர்கள் சேர்ந்து இசையமைத்து, பின்னணி குரல் கொடுத்து வீடியோவாக ரிலீஸ் செய்வோம். இதில் மனநிறைவும், நம் திறமையைப் பிறருக்குக் கொண்டு சேர்க்கும் மகிழ்ச்சியும் உண்டாகுது. அதிலும் சூப்பர் ஸ்டார் படம் என்றால் கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது’’என்றார்.

 

இவர் 2011 மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாகிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் சிறப்பாக கவிதைபாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்.அப்போது அவருக்கு துணையமைச்சர் டத்தோ சரவணன் விருது வழங்கி கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News