loader
மதுக்கடையை மூடுங்கள்...மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய டாக்டர்!

மதுக்கடையை மூடுங்கள்...மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய டாக்டர்!

வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட, பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் உயிருக்கு உயிரான மகள். உலகமே இருண்டது போன்ற அந்த ரணமான சூழலில், ஒரு தந்தையால் என்ன செய்துவிட முடியும்?  கோவையைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ்.... உயிருக்குப் போராடிய தன் மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்துக்குக் காரணமான டாஸ்மாக்கை மூடச்சொல்லி, தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

டாக்டரான இவர் இயற்கை ஆர்வலர், தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பல்வேறு தளங்களில் பணியாற்றியவர். எளிய மக்களுக்குச் சேவை செய்வதையே வாழ்வாகக் கொண்டிருந்தவர்.  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான நபர். இவருடைய மகள் சாந்தலா ஆனைகட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளியிலிருந்து சாந்தலாயை அழைத்து வருவதற்காக ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

மகளை அழைத்துக்கொண்டுஷோபனா வந்துகொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் அசுர வேகத்தில் வந்த பைக் ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், ஷோபனா  சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். சாந்தலா பலத்த அடியோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்த அதிர்ச்சி தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பதறிக்கொண்டு வந்த டாக்டர் ரமேஷ், உயிருக்குப் போராடிய தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். பின் மனைவியின் உடலைப் பார்த்து கண்ணீர் மல்கக் கதறி அழுத ரமேஷ், மனைவியின் சடலத்தோடு அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடையை கடையை மூடச் சொல்லி போராட்டத்தில் குதித்துவிட்டார்.

அங்கு மது குடித்துவிட்டு வருபவர்களால் அந்தப் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கிறது என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு. ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதிய பாலாஜி என்பவர் குடிபோதையில் இருந்ததாகவும், போதைதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் அந்த மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனக்கூறி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார் டாக்டர் ரமேஷ். 

`

0 Comments

leave a reply

Recent News