loader
மீண்டும் ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன ரீதியிலான அரசியலை மலேசியாவில் தவிர்க்க முடியுமா?   - ஒரு கண்ணோட்டம்

மீண்டும் ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன ரீதியிலான அரசியலை மலேசியாவில் தவிர்க்க முடியுமா? - ஒரு கண்ணோட்டம்

(பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாL இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னால் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)

மலேசியாவில் பல்லின மக்களைப் பிரதிநிதிக்கும் முதன்மை அரசியல் கட்சிகளாக பி.கே.ஆரும், டி.ஏ.பியும் விளங்குகிறது என்றால் மிகையாகாது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த 14-வது பொதுத் தேர்தலில் நாட்டிலுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில்  இவ்விரு கட்சிகளும் 90 இடங்களில் வெற்றிப் பெற்று இதர இன ரீதியிலான ஒரு சில கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டின் முதல் பொதுத் தேர்தலிலிருந்து தொடர்ந்து 60 ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்த பரிசான் நேசனல் அரசாங்கத்தைத் தோற்கடித்துப் பக்கத்தான் ரக்யாட் என்ற பல்லின மக்களைப் பிரதிநிதிக்கும் அரசாங்கத்தை அமைத்தது அனைவரும் அறிந்ததே.

    அதே வேளையில்  இன ரீதியிலான குறிப்பாக மலாய்க்காரர் சமூகத்தைப் பிரதிநிதிக்கின்ற கட்சிகள் எனக் கருதப்படும் அம்னோ வெறும் 54 தொகுதிகளையும், பாஸ் 18 தொகுதிகளையும்  ஆக மொத்தம் 72 தொகுதிகளில்தான் வெற்றிப் பெற முடிந்தது. 

கடந்த 14-வது பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு  95 % சீன வாக்காளர்களும், 70 முதல் 75 சதவிகித இந்திய வாக்காளர்களும் இதுநாள் வரை அம்னோவுக்கு ஆதரவாக இருந்தவர்களில் 25 முதல் 30 சதவிகித மலாய் வாக்காளர்களும் பக்காத்தானுக்கு வாக்களித்தனர் என்று ஆய்வறிக்கை காட்டுகின்றது. இவ்வாய்வின் முடிவுகள் மலேசியர்கள் இன ரீதியிலான அரசியலை விட்டு விலகி மெல்ல  பல்லின அரசியலுக்கு நகருவதைக் காட்டியது எனலாம். நடந்தேறிய பொதுத் தேர்தலில் டி.ஏ.பியும், பி.கே.ஆரும் பெரும்பாலான தொகுதிகளில் வென்றதால் இக்கட்சியைச் சார்ந்தவர்களே பெரும்பாலான அரசாங்கப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் பொதுவாகத் தேர்தலில் முதன்மை இடத்தில் வெற்றிப் பெறுகின்ற அல்லது பெரும்பாலான தொகுதிகளை வென்ற கட்சிகளுக்கு வழங்கப்படுவது ஓர் அரசியல் மரபு. இருப்பினும் இந்தப் பெரும்பாலான அரசு நியமனங்களில் மலாய் சமூகத்தின் ஆதிக்கம் குறைந்து விட்டதாக மலாய் சமூகம் கருதியது. அதனால்  கட்சி வேறுபாடின்றி பெரும்பாலான மலாய்க்காரர்கள் நாட்டின் அரசியலில் தொன்றுதொட்டு பசுமரத்தாணிபோல் வேரூன்றி வந்த  மலாய் ஆதிக்கம் குறைவதாகவும்  கருதத் தொடங்கினர். இந்த  உணர்வின் தொடர்பாக நாட்டின் அரசியலிலே மலாய் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தும் நோக்கத்தில் இன ரீதியில் இயங்கி வருகின்ற அம்னோவும் பாஸ் கட்சியும் முவபக்கட் (muafakat) என்ற அரசியல் கூட்டணியைத் தொடக்கியது.  மலாய் சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின் அரசியல் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கத்தில் துன் டாக்டர் மஹதீர் முகமதுவும் மலாய் டிக்னிடி காங்கிரஸைக் கூட்டினார். இம்மாபெரும் கூட்டத்திற்கு இன ரீதியில் இயங்கி வருகின்ற மலாய் அரசியல் கட்சிகளே அழைக்கப்பட்டன. இக்கூட்டத்திற்குப்   பல்லின கட்சி எனக் கருதப்படும் பி.கே.ஆர். அழைக்கப்படவில்லை. மேற்கூறிய நடவடிக்கைகள் டி.ஏ.பி.க்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. பக்கத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்தில் ஒரு சலசலப்புத் தோன்ற ஆரம்பித்தது. 

இதைத் தொடர்ந்து, 21.2. 2020 -ல் நடந்த பக்கத்தான் ஹராப்பானின் தலைமை நிர்வாகக்குழுக் கூட்டத்தில் துன்  மகாதீர் ஏற்கெனவே வாக்குறுதியளித்த  பிரதமர் பதவி தொடர்பான பிரச்சனையைப் பி.கே.ஆர் தலைவர்கள் கொண்டு வந்து துன் மகாதீருக்கு பெரும் நெறுக்குதல் தந்தனர். இச்சம்பவம் மேலும் பக்காத்தான் கட்சிகளிடையே ஓர் இக்கட்டான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. இதனால், பக்கத்தான் ஹராப்பான்ஆட்சி ஒரு புதிய திருப்பத்தை எதிர் நோக்கியது எனலாம். மேலும், 23.2.2020-ல் அம்னோ கட்சியும், பெர்சத்து கட்சியும் தனது மத்தியச் செயலவைக்  கூட்டத்தைத் தனித்தனியே கூட்டி, மலாய் சமூகத்தை உண்மையாகப் பிரதிநிதிக்கின்ற ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கக் கருத்துப்பறிமாற்றம் செய்தன. பெர்சத்து கட்சியும் மலாய்க்காரர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்கவும், அந்தப் புதிய அரசாங்கத்தை அறிவிக்கும் திகதியையும் அப்புதிய அரசாங்கத்திற்குத் துன் டாக்டர் மகாதீரே பிரதமராக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டன.

இதற்கிடையே துன் மகாதீர் ஏதோ ஒரு சில காரணங்களுக்காகத்  திடீரெனத் தனது பெர்சத்து கட்சியின் தலைவர் (chairman ) பதவியையும் பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தது நாட்டையும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வேளையில் பெர்சாத்து கட்சியின் பிரசிடனாக இருந்த முஹைதீன் யாசின் காலியான பெர்சத்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதோடு, பெர்சத்து கட்சி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து   விலகுவதாக அதிரடி அறிவிப்புச் செய்தார். இந்த அறிவிப்புப் பக்கத்தான் கூட்டணியின் சிதைவுக்குக் காரணமாக அமைந்ததோடு, பி.கே.ஆர் கட்சிக்குப் பேரிடியாக அமைந்தது. பக்காத்தான் கூட்டணியிலிருந்து பெர்சத்து விலகியதால் பக்காத்தான் ஹராப்பான் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பன்மையை  இழந்தது. இது ஓர் ஆட்சி மாற்றம் உருவாகும் சூழ்நிலையை உருவாக்கியது. 

இவ்வேளையில், பிரதமர் பதவியிலிருந்து மகாதீர் விலகியதால் அந்தப் பதவிக்கு முஹைதின் யாசினைப் பரிந்துரை செய்தன மலாய்க்கார ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவர நினைக்கும்  அம்னோ, பாஸ் மற்றும்  இதர பரிசான் நேசனல் கட்சிகள். மேலும் இதே மலாய் மனோபாவத்துடன் இயைந்த  பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் திடீரென கட்சியிலிருந்து விலகி முஹைதினுக்கு ஆதரவு தந்தனர். இந்தக் கூட்டுச் சேர்க்கையால் பெர்சத்து கட்சியைத் தலைமை தாங்கிய முஹைதீன் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிட்டியது.

 

நாடாளுமன்றத்தில் முஹைதீனுக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகக் கண்டறிந்தப் பேரரசர் முஹைதீனை 8-வது பிரதமராக  நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு  அறிவித்தார். பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட முஹைதீன் பெரிக்கத்தான் நேசனல் என்ற புதிய அரசாங்கத்தைக் கடந்த மார்ச் 2020-ல் அமைத்தார். அதோடு பல்லின அரசியல் கட்சிகளால் அமைக்கப்பட்ட பக்கத்தான் அரசாங்க ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. 

ஆகவே,   இந்நாட்டில் பெரும்பான்மை மக்களும் வாக்காளர்களுமாகிய  மலாய் சமூகத்தின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்காத எந்த அரசாங்கமும் நிலைப்பது எளிதல்ல என்பதை மேற்கூறிய ஆட்சி மாற்றம் தெளிவாகக் காட்டுகிறது. 

மலேசியாவில் இன ரீதியான அரசியல் தவிர்க்கப்பட்டு பல்லின அரசியலைக் கொண்ட ஒரு முதிர்ச்சியடைந்த ஒரு ஜனநாயகம் மலர இன்னும் பல காலம் ஆகலாம்!

(கட்டுரையாளர் : டத்தோ மு.பெரியசாமி)






 

0 Comments

leave a reply

Recent News