loader
விளையாட்டிலிருந்து விடைபெற்றார் லீ சோங் வேய்! கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு நன்றி....

விளையாட்டிலிருந்து விடைபெற்றார் லீ சோங் வேய்! கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு நன்றி....

கோலாலம்பூர் ஜூன் 13-

மலேசியப் பூப்பந்துத் துறையின் செல்லப்பிள்ளையும்,  நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய விளையாட்டு வீரருமான டத்தோ லீ சோங் வேய் இன்று தேசிய பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் கட்டடத்தில் இன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவருடன்  இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர்  சைட் சாடிக் பின் சைட் அப்தூல் ரஹ்மான் உடனிருந்தார்.

இதுநாள் தமக்கு ஆதரவு வழங்கிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சுக்கும்,   பயிற்றுனர் மிஸ்புன் சீடேக் மற்றும்  எல்லா வகையிலும்  உதவியாக இருந்த தேசிய பூப்பந்து சங்கம் மற்றும் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ லீ சோங் வேய் தெரிவித்தார்.

“19 ஆண்டு காலமாக எனது ஆட்டத்தை ரசித்து வற்றாத ஆதரவை வழங்கி என்னைக் கொண்டாடிய மலேசிய ரசிகர்களுக்கு நன்றி” என கூறும் போது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல்  கண்ணீர் விட்டு அழுதார் டத்தோ லீ. உடனே அங்கிருந்தவர்கள் லீ சோங் வேய் என்றும் மலேசிய  பூப்பந்துத் துறையின் ‘கிங்’ என உற்சாகம் ஊட்டினர்.

19 ஆண்டுகளாகப் பூப்பந்துத் துறையில் தேசிய அணிக்காக விளையாடிய டத்தோ லீ சோங் வேய், 3 முறை ஒலிம்பிக் போட்டியில்  மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்தவர். பல போட்டிகளில் பங்குபெற்று பல முறை வெற்றியாளர் பட்டத்தை தக்க வைத்தவர். உலகப் பூப்பந்து விளையாட்டாளர்களின் தரவரிசையில் முதல் நிலை விளையாட்டாளர் எனும் மகுடத்திற்குச் சொந்தக்காரர். சில மாதங்களுக்கு முன் மூக்குப் புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த  டத்தோ லீ சோங் வேய், தற்போது மலேசியப் பூப்பந்துத் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

ஒலிம்பிக் விளையாட்டில் பூப்பந்து போட்டியில் டத்தோ லீ சோங் வேய் தங்கம் வெல்வார் என்பது மலேசிய ரசிகர்களின் கனவு. ஒலிம்பிக்கில் தங்கத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்பது  லீ சொங் வேய்யின் நீண்ட நாள் தவம். ஆனால் இன்று அவரின் அறிவிப்பு மலேசியப் பூப்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News