loader
இந்தியாவில் நோய் எதிர்ப்புச் சக்திக்கு கட்டுப்படாத புதிய கொரோனா!

இந்தியாவில் நோய் எதிர்ப்புச் சக்திக்கு கட்டுப்படாத புதிய கொரோனா!


 

புதுடெல்லி:  இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன்சாகாக்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது. அந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனாவை இன்சாகாக்குழுமம் கண்டுபிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், சர்வதேச பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட மாதிரிகளிலும் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய இருமுறை மரபணு உருமாறிய கொரோனாகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவை, தொற்றை அதிகப்படுத்தக்கூடியவை.

15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்தவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாக்களுடன் ஒத்துப்போகாமல், இவை புதிய ரகமாக காணப்படுகின்றன.

மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இந்த மரபணு உருமாறிய கொரோனாக்கள்தான் காரணமா என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை!

0 Comments

leave a reply

Recent News